பிராங்பேர்ட்(frankfurt ) போய் இறங்கியதும் மெசேஜ் பண்ணு ,ரொம்ப தூங்க முடியாம ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தாங்கனா இந்த மாத்திரையை கொடு ப்ரெஷகிரிபிஷனோட இந்த கவர்ல லேப்டாப் பேக்ல வைக்குறேன் என்று கார்த்தியிடம் நண்பர்கள் ஏர்போர்ட்டில் உதவி கொண்டிருந்தனர்.தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை வைஷ்ணவிக்கு ,கையில் டாக்குமெண்ட்கள் நிறைந்த பைல் உள்ள bag ஒன்று .அதில் அலுவலக லேப்டாப் .அவளுடைய பெட்டியை கார்த்தி இழுத்துக்கொண்டு வந்தான் அந்த பெட்டியில் என்ன இருக்கின்றது என்றும் வைஷுவிற்கு தெரியாது நண்பர்கள்தான் எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி வைத்தது .
செக்கின்னும் (check in )முடிந்தது ,ஒரு நிமிடம் என்று கார்த்தி பக்கத்தில் உள்ள ஸ்டார்பக்ஸ் காபி கடையில் சென்று இரண்டு குழம்பிகளுடன் வந்தான்.அப்பொழுதுள்ள மனநிலைக்கு இது தேவைப்பட்டது.கையில் உள்ள காபியை நீட்டியதும் வைஷ்ணவி வாங்கிவிட்டாள்.போர்டிங் தொடங்கியது இருவரும் கைபைகளுடன் நடந்தனர் ,கார்த்தி நண்பர்களிடமிருந்து விடைபெற்று சில அறிவுரைகளுடன் சென்றான் .வைஷுவிற்கு யாருடைய குரலும் கேட்கவில்லை.சிலர் அணைத்தனர் சிலர் இரண்டு கைகளையும் அழுத்திக்கொடுத்தனர்.
பிராங்பேர்ட் செல்லும் விமானத்தில் வந்து அமர்ந்தனர்,வைஷு சன்னல் ஓர இருக்கையிலும் கார்த்தி பக்கத்திலும் அமர்ந்தான்.கார்த்தியின் அலைபேசியில் ஒரு நினைவூட்டும் செய்தி வந்தது,அலைபேசியின் ஓசை கேட்டு எடுத்து பார்த்தான் ஸ்ரீனியுடன் இப்போது அலுவலக மீட்டிங் என்று இருந்தது ,சென்ற வாரம் ஏற்பாடு செய்தது.பெருமூச்சு ஒன்றை விட்டான் அப்பொழுது விமானப்பணிப்பெண் அலைபேசியை அணைத்துவைக்கும்படி கூறியதும் தலையை அழுந்தகோதியபடி அலைபேசியை அணைத்துவைத்தான் .
“நான்கு வருடங்களுக்கு முன்னாள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும்போது ‘dream came true flying to US ‘ என்று status போட்டேன் “என்று வைஷ்ணவி கூறினாள்.
“ம்ம் “என்றான் கார்த்தி
“ஸ்ரீனி வீட்ல இதுவரைக்கும் என்கிட்டே அவங்க அம்மா பேசுனது இல்ல ,ஒருவேளை அவங்க மனச ரொம்ப நான் கஷ்டப்படித்திட்டேன் போல அதுனால இப்படியாச்சோ “
“வைஷு எல்லா அம்மாவும் பசங்க நல்லா இருக்கணும்னுதான் நினைப்பாங்க நீ ரொம்ப யோசிக்காத கொஞ்ச நேரம் தூங்கு “சொல்லிய கார்த்திகே அபத்தமாக இருந்தது எப்படி உறக்கம் வரும் ?
கண்களை மூடி உறங்க பார்த்தாள் முடியவில்லை ,அடுத்த பதினான்கு மணிநேரம் எப்படி கடத்தப்போகிறோம் அங்கு சென்று இறங்கியதும் எல்லோரையும் எப்படி சமாளிக்க போகிறோம்,மகனை இப்படி அழைத்துச்சென்றால் எந்த அம்மா சும்மா இருப்பார்கள் அவர் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது,கண்களை திறந்ததும் இது கனவாக இருந்துவிடாத ?இந்த மூன்று நாட்களை என்னுடைய வாழ்க்கையிலிருந்து அகற்றிவிட முடியாதா ?என்று பல கேள்விகள்
அவள் சிரமப்படுவதை பார்த்துவிட்டு தன்னுடைய பையிலிருந்து அந்த மாத்திரையை எடுத்து கொடுத்தான் ,இதை போட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கு.
“இன்னும் கொஞ்சம் பத்து மாத்திரையை சேர்த்து கொடுத்தீன்னா புண்ணியமா போகும் “என்றபடி வாங்கி விழுங்கிவிட்டு சன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல திரும்பிக்கொண்டாள் .
கடந்த மூன்று நாட்களாக அவள் அழுவதற்கு கூட நேரமின்றி சட்ட சிக்கல்கள் காவல்துறையினர் கொடுத்த படிவங்களை பூர்த்தி செய்வது உறவினர்களிடம் தகவல் சொல்வது இந்தியாவிற்கு செல்லும் முன் செய்ய வேண்டிய ஏற்பாடுகள்,என அவள் இருந்த நிலையை பார்த்தவனுக்கு அவள் இவ்வாறு கேட்டதற்கு கோபம் வரவில்லை. பண சிக்கல் ஏற்பட்ட அப்போது கூட அதிகம் செலவாகும் நிதி திரட்டலாம் என்று சொன்னதற்கு வேண்டவே வேண்டாம் கடனாக மட்டும் வாங்கிக்கொடுங்கள் நான் திரும்ப கொடுத்துவிடுகிறேன் என்று வைஷ்ணவி சொன்னது அவனை ஆச்சர்ய பட வைத்தது .அதுதானே வைஷ்னவி அவளின் அந்த குணம்தானே ஸ்ரீனிக்கு அவளிடம் பிடித்தது.
ஸ்ரீநிவாஸ் ,கார்த்தி மற்றும் வைஷ்ணவி சென்னையில் இருந்த ஐ .டி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தனர்,மூவரும் ஒரே டீம் .ஸ்ரீநிவாஸ் ஆந்திர மாநிலம் என்றாலும் சென்னை பொறியியல் கல்லூரியில் படித்ததால் தமிழில் நன்றாக சரளமாக பேச தெரியும்.முதலில் அமெரிக்கா வாய்ப்பு ஸ்ரீநிவாஸிற்குதான் கிடைத்தது.அமெரிக்கா செல்வதற்கு முன்னாள் பெற்றோரிடம் அனுமதி பெற்று திருமணத்தை முடித்து வைஷ்ணவியையும் கூட அழைத்து செல்ல வேண்டும் என்று இருவரது வீட்டிலும் பேசிய போது ஸ்ரீனிவாசன் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை .இது ஸ்ரீநி எதிர்பார்த்த ஒன்றுதான்.அவர்கள் ஊர் கட்டுப்பாட்டுகள் நிறைந்த கிராமம் அதுமட்டுமின்றி உறவினர்கள் அனைவரும் திருமணத்தைப் பற்றிய் முடிவெடுக்கும் ஒரு கூட்டுக்குடும்பம்.
வைஷ்ணவியின் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் சமாளிக்க முடிந்தது .ஒரு வழியாக அவர்களின் ஒப்புதலோடு திருமணம் சென்னனயில் மிக எளிமையாக அலுவலக மற்றும் கல்லூரி நண்பர்களின் கலாட்டாவோடு நடைபெற்றது.கார்த்தியின் மனதில் இப்போதும் ஸ்ரீனிவாசனின் அன்றைய சிரித்தமுகம் பதிந்துபோய் உள்ளது.”எப்படி மச்சி அம்மாவ சமாளிப்ப ?” என்று கார்த்தி கேட்டபோது .”அவங்க கோபமெல்லாம் ஒரு மாசத்துல சரியாப்போயிடும்டா “என்று மனதில் தன் திருமணம் குடும்பத்தில் எவருமின்றி நடக்கிறதே என்ற கவலையை மறைத்து சிரித்த முகத்தோடு சொன்னான்.கார்த்திக்கு ஸ்ரீனியின் சிரித்த முகம் மட்டும் தான் நினைவடுக்கில் இருக்கிறது.
இன்னும் அரை மணிநேரத்தில் விமானம் பிராங்பேர்ட் அடைந்துவிடும்.வைஷ்ணவி மாத்திரையின் வீரியத்தில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள் .வைஷ்ணவியுடன் யார் இந்தியா செல்வது என்று யோசிக்கும்போது எந்த ஒரு தயக்கமோ யோசனை செய்ய அவகாசம் ஏதும் எடுத்துக்கொள்ளாமல் கார்த்தி தான் செல்வதாக முன்வந்தான் அதில் ஆச்சிரியம் இல்லை ஏனெனில் அவன் ஸ்ரீநி மற்றும் வைஷ்ணவியின் நண்பன்.அவனுடைய விடுமுறை நாட்கள் இவர்களுடன் தான்.முதலில் அமெரிக்கா வந்த ஸ்ரீனிவாஸ் கார்த்திக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி அவனுடைய குழுவிற்கே அழைத்துக்கொண்டான்.
கார்த்திக்கும் வைஷ்ணவியும் பிராங்பேர்ட் விமானநிலையத்தில் இறங்கி ஒரு ட்ராமில் அவர்களுடைய விமானத்திற்கான டெர்மினலிற்கு சென்றனர்.கார்த்தி காபி வாங்க சென்றபோது வைஷு தன்னுடைய அலைபேசியில் தமிழ் சங்க மற்றும் தெலுங்கு அசோசியேட் நபர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்பிக்கொண்டிருந்தாள் .காப்பியோடு வந்த கார்த்தி அதை அவளிடம் நீட்டியபோது அதை பெற்றுக்கொண்டு “இந்த மூன்று நாளுல நிறைய பேர் உதவி செஞ்சுஇருக்காங்க அதுல பாதிப்பேர் எனக்கு யாருனு கூட தெரியாது எனக்கு நினைவும் இல்ல ,என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு தெரில,யாரு டிக்கெட் போட்டா? ,யாரு ஹாஸ்பிடல் ஏற்பாடுகள் செஞ்சா ? ஒன்னும் புரில ,யாருக்குமே நான் நன்றி சொல்லாம வந்துட்டேன் .எனக்கு அந்த போலீஸ் டாக்டர்ஸ் எல்லாமே ரொம்ப உதவி செஞ்சது மறக்கமுடியாது .அதே சமயம் எந்தஒரு காரணம் இல்லாம எங்கிட்ட இருந்து என்னோட வாழ்க்கைய பறிச்ச அந்த நாட என்னால மன்னிக்கவும் முடியாது.”என்று கலங்கிய வைஷ்ணவியின் உதடுகள் துடித்தன காப்பியை குடிக்க முடியவில்லை.கண்ணீர் வற்றாமல் வடிந்துகொண்டுதான் இருக்கிறது .
இன்னும் எட்டுமணி நேர பயணம்.கார்த்தி அவனுடன் சென்னையில் வேலை பார்த்த நண்பர்களுக்கும் கல்லூரி நண்பர்களுக்கும் செய்தியை அனுப்பி கொண்டிருந்தான் .அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபடி இருந்தான்.இந்த நிமிடம் கூட அவனால் நம்பமுடியவில்லை அவனுடைய நண்பன் ஒரு மாலில் ஒரு பைத்தியத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான் அவனுடைய உடலை எடுத்துக் கொண்டு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று .
கையில் அலைபேசியில் தங்களுடைய புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் வைஷ்ணவி.இவை பாதுகாத்துவைக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் .கார்த்தியிடம் “புது வீட்டுல இந்த புகைப்படங்கள எல்லாம் பெருசா லிவிங் ரூம்ல மாட்டனும்னு சொன்னான் பத்து நாளைக்கு முன்னாடி தான் வீட்டுக்கு அக்ரீமெண்ட் போட்டோம் அதான் உனக்கு தெரியுமே “என்றாள் .
“தெரியும் “என்ற கார்த்திக்கு அந்த குரல் எதிரொலித்தது “மச்சான் புது வீட்ல நாலு பெட்ரூம் இருக்கு பேசாம நீயும் எங்களோடவே தங்கிரு “
எப்போது தூங்கினோம் என்று தெரியாத கார்த்தி விமானம் தரையிறங்கும் தகவல் அறிவிக்கப்படும் செய்தி கேட்டு விழித்தான்.வைஷ்ணவி மிகவும் பதற்றம் மற்றும் தயக்கத்துடன் தெரிந்தால் .”எனக்கு அவங்க வீட்ல பேசுற பாஷை கூட சரியா புரியாது ,எப்படி பேஸ் (face)பண்ண போறேன்னு தெரில .அம்மா அப்பா முன்னாடி சந்தோஷமா நிக்கணும்னு நினச்சேன் இப்டி எல்லாரும் பாவப்பட்டு பாக்குற மாதிரி போக எனக்கு ஒரு மாதிரி இருக்கு கார்த்தி ”
“ஸ்ரீனிக்கு உன்கிட்ட பிடிச்சதே உன்னோட தைரியம் தான் வைஷ்ணவி ,எங்கிட்ட அடிக்கடி சொல்லுவான் “
வைஷ்ணவி அவளுடைய பெற்றோர் ஸ்ரீநியின் ஊருக்கு அழைத்து சென்றனர் .அவனிற்கு முன்னாள் ஸ்ரீனியின் உடல் ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்தது .உறவினர்களிடம் பத்திரமாக சேர்த்துவிட்டு கார்த்தி டாக்ஸியில் ஏறினான் .
“அமெரிக்காலிருந்து வரீங்களா? அமெரிக்க லைப் எப்படிங்க ?”என்று கார் ஓட்டுநர் கேட்டார்
வெடித்து அழவேண்டும் போல் இருந்தது கார்த்திக்கு .