அழலவனின் விளையாட்டு

“டேய் புத்தகத்தை முடிச்சிட்டியாடா “இனியனின் குரலில் புத்தகத்திலிருந்து கண்ணை எடுத்தான் அழலவன் .

“படிச்சுட்டே இருக்கேன் டா இன்னும் 150 பக்கங்கள் இருக்கு,மொத்தம் 1000 பக்கங்கள் இந்த புத்தகத்தில் ” என்ற அழலவனின் பதிலுக்கு ,”எப்பிடிடா இப்படிலாம் எழுத முடியும் 25 புத்தகம் அதுல ஒவ்வொரு புத்தகமும் 1000பக்கம் “என்று வியந்து வாயை பிளந்தான் இனியன் .

“பின்ன போட்டினா சும்மாவா அதுவும் நம்ம கவர்னர் வாசகன் அவ்வளவு எளிதான போட்டியவா நடத்தவாரு .நம்ம விஷ்ணுபுர தீவிலேயே இது வர யாரும் விளையாடாத விளையாட்ட விளையாடுவதற்கு வாய்ப்பு ,அப்படி அது என்ன விளையாட்டுனு பாக்கணும் அதுக்காகத்தான் போட்டிக்கு ஓத்துக்கிட்டு புத்தகத்த படிக்கிறேன் “

கவர்னர் மாளிகை முன் மக்கள் பெருந்திரளாக கூடி இருந்தனர் .ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அமைதி .கவர்னர் வாசகன் அழலவனை அழைத்து திடலின் நடுவே ஒரு மேசை முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர சொன்னார் .அவருடைய பணியாளிடம் அந்த பெட்டியை கொண்டு வர சொன்னார் .சிவப்பு பட்டுத் துணியால் மூடப்பட்ட அந்த மரப்பெட்டி கொண்டுவரப்பட்டது .அங்குள்ள அனைவரது கண்ணும் அந்தப் பெட்டியில்தான் .கவர்னர் அழலவனை அந்த பெட்டியை திறக்க சொன்னார்.அவனும் திறந்தான் அதில் சில பொத்தான்கள் இருந்தது .நீ படித்த புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும் அதற்கு சரியான விடையை அளித்தாயெனில் நீ விளையாட்டை தொடங்கலாம் என்றார் .

விளையாட்டு தொடங்கியது .விளையாட்டின் விதிமுறையை மக்கள் அனைவரும் கேட்கும்படி மந்திரி ஒருவர் வாசித்தார் .இந்த வருடம் 2070வதிற்கான போட்டியில் மொத்தம் 25 புத்தகத்தை வாசிக்க வேண்டும் .ஒவ்வொரு புத்தகத்தை முடித்ததும் இந்த அரிய மாயாஜால பெட்டியில் வரும் விளையாட்டை விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் .போட்டியின் நடுவே விலக முடியாது .கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

அழலவன் இப்போது முதல் புத்தகத்தை முடித்ததால் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது .அவனும் சரியான விடையை அளித்து விளையாட்டை விளையாட ஆரம்பிக்கப்போகிறான் .இரண்டு பொத்தான்கள் இருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் தேர்தெடுக்கும் பொத்தான்களை பொறுத்து விளையாட்டு அடுத்த நிலைக்கு முன்னேறும் .அவனுடைய தேர்வை பொறுத்தே சிலரின் விதி இருக்கப்போகிறது .ஆம் இது கதையல்ல நிஜம் .

திரையில் வந்த காட்சி ஒரு அரசவை ,அனைவரது முகத்திலும் கலக்கம் ,ஒரு பக்கம் ஐந்து சகோதரர்கள் ,மற்றொரு புறம் இரு சகோதரர்கள் மற்றும் ஒரு நண்பன் நடுவில் அவர்களது மாமன்.எல்லோரும் ஐவர்களின் மூத்தவன் உருட்டிய தாயத்தை பார்த்தவண்ணம் இருந்தனர் .

உருட்டியது என்னவோ அவன் அனால் அதன் முடிவு இப்போது அழலவனின் கையில்.அழலவன் பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை ,ஒரு பொத்தானை அழுத்தி வைத்தான்,அதன் பலன் ஒரு பெண் அங்கு கொண்டுவரப்பட்டு அரசவை நடுவில் நிறுத்திவைக்கப்பட்டாள் .இப்போது ஆட்டம் தொடருகிறது இந்த ஆட்டத்தின் முடிவு அப்பெண்ணின் நிலையை முடிவு செய்யும் ,அழலவன் இப்போது ஐவர் வெல்ல வேண்டும் என்று வேண்டிக்கொண்டே ஒரு பொத்தானை அழுத்தினான் ஆனால் அது அவனை அவன் வாழ்க்கை முழுவதும் ஏன் அதை தேர்ந்தெடுத்தோம் என்று எண்ணி எண்ணி நோகச் செய்யும் என்பதை அறியான் .

ஐவர் தோற்றனர் ,அங்கு அழலவனை சுற்றி உள்ள மக்கள், திரையில் தோன்றும் மக்கள் யார் ?பார்ப்பதற்கு இவ்வளவு வித்யாசமாக இருக்கின்றார்கள் என்று தங்களுக்குள் பேசி கொள்கின்றனர் .இப்போது அப்பெண் நடுவில் நிற்கவைக்கப் படுகிறாள்,ஒருவன் அப்பெண்ணின் துயிலை உரிக்கிறான் ,அவளின் ஓலம் விஷ்ணுபுர தீவையே கலங்க செய்கிறது .அழலவன் உடல் நடுங்குகிறது .வியர்த்து விறுவிறுத்தவன் படாரென்று அந்தப்பெட்டியை மூடுகிறான் அதன் விளைவு அங்கே(நிகழ்காலம் ) அமெரிக்கா என்ற நாட்டில் ஒரு கான்பெரன்ஸ் கால் நடக்கிறது

“வணக்கம் இலக்கிய இரவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ,இப்ப நம்ம சங்கர் புதுவை தீரன் அவர்களின்பிறந்தநாளை முன்னிட்டு அவர் எழுதிய கவிதைகளை பகிர்வார் .நீங்க ஆரம்பியுங்கள் சங்கர் ,சங்கரை தவிர காலில் உள்ள அனைவரும் மியூட் செய்து கொள்ளுங்கள்”என்று லக்ஷ்மன் சொல்ல,சங்கர் “கவிஞர் தீரன் அவர்கள் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ………என்று பேசிக்கொண்டிருக்க அங்க ஒரு குரல்

“இந்த பைத்தியங்களுக்கு வேற வேலையே இல்லை எப்ப பார்த்தாலும் திங்கட்கிழமை ஆனா இந்த இருபதும் ஒன்னு சேந்து உயிரை வாங்கும் “

“பிளீஸ் எல்லாரும் மியூட் செய்யுங்க “

“மியூட்லதானே இருக்கோம் என்னாச்சு “

[மீண்டும் விஷ்ணுபுரத்திற்கு (எதிர்காலத்திற்கு )வருவோம்]

அழலவன் ஒரு நிமிடம் கழித்து பெட்டியை திறந்தான் .அவனது கைகளின் நடுக்கம் குறையவே இல்லை .கண்களில் கண்ணீர் வெளியே வராமல் எட்டிப்பார்த்தபடி இருந்தது .பெட்டியை மூடியதை விதிகளின் மீறல் என்று விளையாட்டின் மேற்பார்வையாளர் கண்டித்தார் .அழலவனின் மனதில் அரிய விளையாட்டு என்று எண்ணிதானே வந்தோம் ஆனால் இது பிறரது வாழ்க்கையோடு விளையாடும் விளையாட்டு என்று சொல்லவே இல்லையே என்று தன்னை நொந்துகொண்டான் .இப்டி நினைத்து கொண்டு இரண்டு பொத்தான்களை மாறி மாறி அழுத்திக்கொண்டே இருந்தான் .இப்போது மீண்டும் ஒரு சங்கடம் இளம் வயது வாலிபன் சக்கர வியூகத்திதின் நடுவே ,அந்தியும் சாய்ந்தது ஒரு அபாய சங்கின் முழக்கம் போட்டி இனி அடுத்த புத்தகத்தை முடித்ததும் தொடரலாம் என்ற அறிவிப்பு வந்தது .

யாருடைய முகத்தையும் பாராமல் அழலவன் இரு கைகளாலும் தலையை பிடித்தபடி தனியாக உட்கார்ந்து கண்களை மூடினான் ,அப்பெண்ணின் குரல் மட்டுமே கேட்டது .

“இப்ப என்னாச்சுன்னு இப்டி இருக்க ?நடந்தது ஏதும் உன் தவறு இல்ல,சும்மா உன்ன குழப்பிக்காத ,புத்தகத்த படிக்குற அந்த இளைஞனை காப்பாத்துற அவ்வளவுதான் போட்டியிலிருந்து விலகவும் முடியாது அதேபோல் நாம் கையில் எடுத்த வேலையே பாதியில் விடக்கூடாது அழலவா …..”என்றான் இனியன்

இனியா “விளையாட்டே எனக்கு புரியல குழப்பமா இருக்கு ,இப்ப இருக்க மனநிலையில் எப்படி படிப்பது .இந்த புத்தகமோ நிறைய படிமங்களும் தத்துவங்களும் நிறைந்தது ,கண்ணை மூடினாள் அந்த அப்பொண்ணோட கதறல்தான் கேட்குது எனக்கு அந்தக் குரல் நம்ம தோழி மிளிர்மிகையோடது போலவே இருக்கு .”

“நீ 48 மணி நேரத்துக்குள் புத்தகத்தை முடிக்கணும் ,நீ எந்த தவறும் செய்யவில்லை ,கண்டிப்பா நம்ம தீவில் உள்ள மக்களுக்கு இந்த விளையிட்டு மூலமா கற்றுக்கொள்ளும் பாடம் நிறையவே இருக்குனு நான் நம்புறேன் டா “

இரண்டு நாட்கள் கழித்து விளையாட்டு தொடங்கியது ,மக்களின் பிராத்தனையும் ஆரம்பித்தது சக்கரவியூகத்தில் இருக்கும் அந்த இளைஞனுக்காக ,அழலவனின் விரல்கள் பொத்தானை தீண்டுவதற்கு முன் ஓராயிரம் முறை தன் இஷ்டதெய்வத்தை உச்சரித்தது ஆனால் அந்த இளைஞனின் இரத்தம் பீறிட்டது இவனின் கண்களில் தெறித்தது போல் இருந்தது கண்களை இருக்க மூடினான் ,உதடுகள் துடித்தது .கைவிரல்களை மடக்கி மேசையை குத்தி இந்த விரல்கள்தானே இந்த பொத்தானை அழுத்தியது என்று ஆவேசமாய் கத்தினான் .அடுத்து அடுத்து பல மரணங்கள் இப்போது விளையாடி விளையாடி அலுத்து போனது விளையாட்டு மட்டும் அல்ல மரணமும் தான் .

அடுத்து அடுத்து புத்தகங்களும் போட்டியும் என்று சென்றதுஆனால் ஒவ்வொரு சுற்றின்போதும் இவன் இந்த போட்டியை பார்க்கும் பார்வையும் புத்தகத்தை அணுகும் பார்வையும் மாறியது .இப்போது மரணத்தை கண்டு கலங்கவும் இல்லை வெற்றியை கொண்டாடி கர்ஜிக்கவும் இல்லை .இப்போது இருபத்தி ஐந்தாவது புத்தகம் அழலவனின் கையில் .

இனியன் “இன்றைக்கு போர் முடிவுக்கு வரும் ,எனக்கு நம்பிக்கை இருக்கு ஒரு னால முடிவை இருக்கும் .உனக்கு பதற்றமா இருக்கா ?”

“இல்லை எனக்கு இப்ப எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை ,ஒரு வெற்று காகிதம் மாதிரி இருக்கு எனக்கு மனசு ,நான் இந்த நிகழ்வுகளை நிகழ்த்தவில்லை அதனால் இதோட வெற்றியோ தோல்வியோ என்னை எந்த விதத்திலும் பாதிக்காது “என்றான் அழலவன் .