Zorba The Greek

WRITER:NIKOS KAZANTZAKIS

TRANSLATOR:CARL WILDMAN

NUMBER OF PAGES:311

சோர்பா நான் வாசித்த நூல்களில் வாழ்க்கை தத்துவத்தைப் பற்றி ஆழமாக என்னை யோசிக்க வைத்த நூல்.இந்த நூலின் கதைசொல்லி ஒரு புத்தகப் புழு அவன் சோர்பாவை சந்திக்கும் முதல் காட்சியே அழகான காட்சி .கதைசொல்லி ஒரு முப்பதுகளில் இருக்கும் இளைஞன் சோர்பா அறுபதுகளில் இருக்கும் மனிதர் ,கதைசொல்லியின் பெயர் நூலில் இல்லை.கதைசொல்லி ஒரு கப்பலில் பயணம் செய்ய காத்துக்கொண்டு இருப்பார்,கடல் கொந்தளிப்பு அடங்குவதற்காக அப்போது சோர்பா ஒரு இசை கருவியோடு கதைசொல்லியை தேடி வந்து என்னையும் அழைத்து செல்லுங்கள் என்று கூறுவார்.உன்னை எதற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கேட்கும்போது ,மனிதனால் ஏன் என்ற கேள்வி கேட்காமல் தனக்கு பிடித்துஇருக்கு என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் எதையும் செய்ய கூடாதா ? என்று சோர்பா கேட்பார் .இந்த ஒரு வரியில் நான் விழுந்து விட்டேன் .சோர்பாவின் பயணம் கதைசொல்லியோடு ஆரம்பம் ஆனது .சோர்பாவிற்கும் கதைசொல்லிக்கும் ஆழமான நட்பு உண்டாகும் .இருவருக்கும் வயது வித்யாசம் ,பழக்கவழக்கங்கள் வித்யாசம் ஏராளம் இருப்பினும் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியாத அளவிற்கு ஆழமான நட்பு உருவாகும் .சோர்பா கதைசொல்லிக்கு சமையல் செய்து கொடுப்பார் ,கதைசொல்லி ஒரு சுரங்கம் அமைத்து வணிகம் செய்யும் திட்டத்தோடு கிரேட் (crete )என்ற இடத்திற்கு பயணப்படுவார் சோர்பவும் அவருடைய சுரங்கத்தில் வேலை செய்வார்.சோர்பா காலை முழுவதும் மிக கடுமையாக வேலை செய்வார் மாலை முழுவதும் வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கும் மனிதர்.இயற்கை காட்சி , உணவு,மது,மாது,இசை,நடனம் என்று அனைத்தையும் மனதார அனுபவிக்கும் மனிதர் .கதைசொல்லி புத்தகத்தோடு பொழுதை போகும் மனிதர்.அவருக்கு சோர்பா ஏற்படுத்தும் தாக்கம் ,சோர்பாவோடு அவர் பேசும் போது புத்தகத்தின் மூலம் கிடைக்காத தெளிவு கிடைக்கிறது வாழ்க்கையை பற்றி.எது மகிழ்ச்சி ?கடவுள் யார்? சுதந்திரம் என்றால் என்ன ?இப்படி பல கேள்விக்கான விடைகள் .சோர்பா ஒரு போர்வீரன் அவன் வாழ்க்கையில் பல தவறுகள் செய்தவன் ஆனால் அந்த தவறுகள் அவனை பண்படுத்துகிறது.எனக்கு பிடித்த வரிகளை பகிர்கிறேன் ,

Neither seven stories of heaven nor the seven stories of the earth are enough to contain God,but a man’s heart can contain him.

Everyman has his folly,but the greatest folly of all,in my view,isnot to have one.

The life of man is a road with steep rises and dips.All sensible people use their brakes.But and this is where,boss,maybeI show what I’m made of-I did away with my brakes because I’m not scared of jolt.What have I got to lose?

பேசாத கணிதமும் சூடான டீயும்

“ம்ம்ம் சரிங்க தம்பி ம்ம் “என்று போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை கொடியிலிருந்து எடுத்து கொண்டிருந்தார் கனிமொழி .போன் பேசி முடித்ததும் “ஏங்க வீட்டு ஓனர் தம்பிதான் பேசுச்சு வீட்டை வேற யாருக்கோ விற்கப்போறாங்களாம் அதனால நம்மள வேற வீடு பார்க்க சொல்லறாங்க “

“ம்ம்ம் “என்ற சத்தம் மட்டும் வந்தது பாலு ஸாரிடமிருந்து .ஆசிரியருக்கே உண்டான மூக்கு கண்ணாடி ,நரைத்த முடி ,கையில் திருத்தி கொண்டிருக்கும் பேப்பர் கட்டு .மொட்டை மாடியில் ஒரு குடில் ,டியூஷன் படிக்க வரும் மாணவர்களுக்காக பெஞ்சுகள் ,கரும்பலகை மற்றும் தண்ணீர் கேன் ஒரு மூலையில் .

“ஏங்க உங்கள்ட்டதானே பேசிட்டு இருக்கேன் “

“சொல்லுமா கேட்டுட்டுதானே இருக்கேன் “என்று சொல்லிக்கொண்டே மதிப்பெண்களை கூட்டி டோட்டல் போட்டுக்கொண்டு இருந்தார் .

“ம்ம்ச் நான்தான் உங்கள கெடுத்து வச்சுயிருக்கேன் .பால் பணம் ,ஈ.பி .பில் ,எல் .ஐ .சி பணம் கட்டுறது ,கட கனிக்கு போக வரதுனு எல்லா வேலையும் நானே பாத்து உங்களுக்கு இந்த ஸ்கூல் டியூசன் தவிர எதை பத்தியும் கவலை இல்லாம போச்சு .இப்டி உயிர கொடுத்து பாடம் சொல்லித்தறிங்க இந்த முப்பது வருஷமா ஆனா இன்னும் ஒரு சொந்த வீடு வாங்கல ,எப்டியோ போங்க “என்று வழக்கமான சுருதியில் காளியின் அபிநயம் பிடித்து விரல்களில் முத்திரை மட்டும் பிடிக்காமல் ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்தை செய்துவிட்டு போனார் கனிமொழி .

அவர் கீழே சென்ற ஐந்து நிமிடத்தில் தன மகள் சாரலிடம் சூடான இஞ்சி டீயை கணவருக்கு கொடுத்து அனுப்பினார் ,அதுதான் கனிமொழி .

“அப்பா! டீ “என்றவாறு மாடிக்கு வந்தால் சாரல் ,டீயை கொடுத்துவிட்டு கரும்பலகையை பார்த்தால் “என்னப்பா இன்னிக்கு trignometry யா “

“ஆமாம்மா இன்னும் பத்து நிமிஷத்துல பசங்க வந்துருவாங்க,உனக்கு வேல முடிஞ்சுருச்சா?” என்றார்

“இல்லப்பா அது முடியாது ஏதோ வீட்டுல இருந்து வேல பாக்கிறதுனால அம்மா கவனிப்புல தெம்பா பாக்குறேன் ”

எப்போதும் போல கண்ணையும் உதட்டையும் தாண்டாத சிரிப்பை சிரித்தார் பாலு சார் .

“இன்னிக்கு ஏழுமணிக்கு மேல பிரீயா அப்பா? “என்ற சாரலிடம் “பேப்பர் தான்மா திருத்தணும் வேற எதுவும் வேல இல்ல “என்றார் .

மாலை ஆறு மணி பேட்ச் மாணவர்கள் வகுப்பு முடிந்து மாடியிலிருந்து திபு திபுவென்று இறங்கி அவரவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றபடி இருந்தனர் ,அப்போது தன்னுடைய பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் அந்த மானவர்களேயே பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி.

மாடியிலிருந்து இறங்கிவந்து கேட்டை பூட்டுவதற்காக பாலு சார் வந்தபோது “வணக்கம் சார் ‘என்று ஹரி சொன்னதும் ,”யாரு அட ஹரியா “?என்று மூக்குக்கண்ணாடி வழியாக உற்று பார்த்தார் பாலு சார் .

“ஆமா சார் ,எப்படி இருக்கீங்க ?”

“உள்ள வாப்பா, நான் நல்லா இருக்கேன் ,நீ மெட்ராஸ்ல வேல பாக்குறதானே ?”

“ஆமாம் சார் ,இப்ப இங்க வீட்ல இருந்துதான் வேலை “

“சரி வா மாடிக்கு போலாம் “

மாடிக்கு சென்றான் எதுவும் மாறவில்லை அதே கொட்டகை ,பெஞ்சுகள்,chalk பீஸ் வாசம் ,சாரின் சட்டையிலும் அந்த துகள்கள் .”ம்ம் சொல்லுப்பா என்ன திடீர்னு இந்தப் பக்கம் “

ஹரி சுற்றி சுற்றி அந்த குடிலையே பார்த்துக்கொண்டிருந்தான் “ம்ம்ம் சார் நாம கீழ போய் பேசலாமா ?எனக்கு இங்க பேச comfortable ஆ இல்ல “

“சரி வா “என்று கீழ வேப்ப மரத்தடியில் இரண்டு நாற்காலிகளை போட்டு “சொல்லு “என்றார் .

“சார் நான் சாரல விரும்புறேன் “என்றான் அவர் முகத்தை தயங்கி தயங்கி பார்த்தபடி “சத்தியமா நான் உங்கள்ட்ட டியூஷன் படிச்சப்ப உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்குனு கூட தெரியாது ,எனக்கு காலேஜ்லதான் பழக்கம் ,நான்மேத்ஸ்ல பாஸ் ஆவேனானு இருந்தேன் உங்கனாலதான் தொன்னூறு மார்க் எடுத்து நல்ல காலேஜ் இந்த வேல எல்லாம் “

ஒரு இரண்டு நிமிட அமைதி .பாலு சார் முகத்தில் எந்த உணர்வும் காண முடியவில்லை ,ஒரு கோபமோ,அதிர்ச்சியோ,வெறுப்போ ,ஏமாற்றமோ இல்லை .”என்ன ரொம்ப உயர்ந்த இடத்துல வைக்குற அளவுக்கு நான் ஒன்னும் செய்யல ,எனக்கு கணிதம் பிடிக்கும் அதைவிட நான் நேசிச்சத தவற விட்டதாலதான் என்னையவே நான் மறக்குற அளவுக்கு இந்த சாக் பீஸோட கரைஞ்சு போக பாக்குறேன் “என்றார் .அந்த இருட்டிலும் அவர் கண்கள் பளபளத்ததை ஹரி கண்டான் .

“உங்க வீட்ல பேசிட்டயா “

“உங்க பொண்ணுன்னு சொன்னா ஒத்துக்குவாங்க அப்டினு நம்பிக்கை இருக்கு சார் “

அவருடைய ஸ்டைல் மில்லிமீட்டர் புன்னகை “எனக்கு சம்மதம் என்னோட மிஸஸ் கன்வின்ஸ் பண்றது சிரமம் நான் பாத்துக்குறேன் ,வீட்ல பேசிட்டு சொல்லு மேல பாப்போம் “

“அப்ப வரேன் சார் “என்று சொல்லிவிட்டு வீடு திரும்பிய ஹரியின் போன் சிணுங்கியது “என்னாச்சு அப்பா என்ன சொன்னாங்க “என்று சாரல் படபடத்தால்

“எல்லாம் ok “

“நிஜமாவா ,எங்க அப்பா கோபப்படுலயா ?வருத்தப்பட்டங்களா ?உன்ன ஒன்னும் திட்டுலயா “

“நீயே ஒரு உருட்டு கட்டையா கொடுத்து அடிக்க சொல்லுவ போல .. எங்க சார் எப்பவும் அதிர்ந்து கூட பேசமாட்டார் ,எங்க ஸ்கூலேயே நாங்க மதிக்கிற ஒரே சார் பாலு சார் தான் ,எனக்குதான் மாடி பெஞ்ச பாத்ததும் பேச்சு வரல அவர் பாடம் எடுத்தது தான் நினைப்புக்கு வந்தது “

“சரி எங்கப்பா என்னதான் சொன்னாங்க ?”

“அதெல்லாம் ஜென்டில்மேன் டாக் சொல்ல முடியாது “

“சரி விடு சொல்ல கூடாதுனு முடிவு பண்ணிட்ட ,எனக்கு ஒரு டவுட் ,உனக்கு பாலு சார் பொண்ணுங்கறதுக்காகத்தான் என்ன பிடிச்சுயிருக்கா ?”

“உண்மைய சொன்ன வருத்தப்படுவ போய் தூங்கிரு “என்று போனை வைத்தவனுக்கு அவனது ஆசானின் பளபளத்த கண்கள் மனதை பாரமாக்கியது .

இருவீட்டாரின் சம்மதத்தோடு கல்யாண வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது .பாலு சாரும் அந்த வருடத்தோடு பணி ஓய்வு பெறுகிறார் .ஹரி தன நண்பர்கள் தன்னுடைய திருமணத்திற்கு வரும்போது அவர்களுடன் சேர்ந்து ஒரு விருந்தை தன ஆசானுக்காக கொடுக்க திட்டமிட்டான் .அவருக்கு பரிசுப்பொருள் வாங்குவதற்காக அவருக்கு என்ன பிடிக்கும் என்று சாரலிடம் கேட்ட போது

“எல்லாரும் வர போற மனைவிக்கு கிப்ட் வாங்குவாங்க நீ மட்டும்தான் மாமனாருக்கு வாங்குற,நிஜமாவே எனக்கு அப்பாக்கு என்ன பிடிக்கும்னு தெரில .அவர் இது வரைக்கும் இந்த சாப்பாடு பிடிக்கும் ,இது வாங்கணும்,இந்த கலர் ஷர்ட் எடுக்கணும் அப்டினு சொன்னதோ வாங்குனதோ இல்ல “

“சரி விடு நானே ஏதாவது யோசிக்கிறேன் “

திருமண நாளும் வந்தது ,மண்டபம் முழுவதும் பாலு சார் விதைத்த விதைகள் விருட்சங்களாக குடும்பத்தோடு குழுமியிருந்தார்கள் .கனிமொழிக்கு தன்னுடைய கணவரை நினைத்து பெருமை தாங்கவில்லை ஒவ்வொரு மாணவரும் வந்து தங்களுடைய ஆசிரியரிடம் தங்கள் குடும்பத்தை அறிமுகம் செய்து ஆசி பெறும்போது .மனுஷன் மாடியிலேயே கிடந்தாரே என்று தான் அடிக்கடி சண்டையிட்டதை நினைத்து வருந்தினார் .

திருமணமும் முடிந்தது, மறுநாள் மணமக்கள் மறுவீடு விருந்துக்கு வந்தபோது ஹரி தன்னுடைய நண்பர்களுடன் திட்டமிட்டபடி பரிசுபொருளுடன் ஒரு சின்ன விருந்தை பாலு சாருக்கு ஏற்பாடு செய்திருந்தான் .எல்லாம் சிரிப்பும் அரட்டையும் கொஞ்சம் உணர்வுபூர்வமான உரையுடனும் இனிதே முடிந்ததும் ,எல்லோரும் கிளம்பினர் ,கனிமொழி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார் அவருக்கு சாரல் உதவினாள் .மாடியிலிருந்து பாலு சார் மருமகனோடு கீழே இறங்கிவந்தார் .அறைக்குள் சென்று ஒரு வெள்ளை தாளோடு சோபாவில் அமர்ந்து கனி மற்றும் சாரலை அழைத்தார் ,ஹரியும் இருந்தான் .

அனைவரும் அவரை பார்த்தனர் “கனி இங்க வா “என்றழைத்து அந்த காகித்தை அவரிடம் கொடுத்தார்.அமைதியாக அதை பார்த்துக்கொண்டிருந்தவரிடம் “என்னம்மா அது ?”என்று சாரல் வாங்கிப்பார்த்தாள்

“என்னாப்பா உங்களுக்கு என் மேல கோபம்னா எனக்கு தானே தண்டனை கொடுக்கணும் அம்மாக்கு எதுக்கு ?”என்று தொண்டை அடைத்தது சாரலுக்கு

“கொஞ்ச நாள் அப்பா அப்பாவுக்காக மட்டும் வாழனும் டா ,எனக்கு யாரு மேலயும் கோபமோ வருத்தமோ இல்ல,உங்க அம்மாவை விட என்ன யாருனாலயும் நல்ல பாத்துக்க முடியாது “

கனிமொழி அமைதியாக கையெழுத்து போட்டு கொடுத்தார் ,அவரது முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லை ,அடுக்களைக்குள் நுழைந்து சூடான இஞ்சி டீயை போட்டு சாரல் வந்து அப்பாவுக்கு டீயை எடுத்துட்டு போ என்றார் .

டிக்கெட் 38

“ஹலோ !ரமா நீங்க டிக்கெட் நம்பர் 38 அட்டென்ட் பண்ணுங்க ,கொஞ்சம் கிரிட்டிகள் அதனால இம்மீடியட்டா “

“ஓகே சாரு !”

மெயில் செக் செய்த ரமா பேஷன்ட் டீடெயில்ஸ் பார்த்தாள்

Patient Name: saravanan
Patient Age: 31
Patient Gender: Male
Date when Covid positive: 2021-05-22
Oxygen Saturation: 85
Is patient on Oxygen Cylinder: No
Searching Hospital Bed Since: 2021-05-22
Patient at: Hospital
COVID Result: Positive
Type of Bed: Oxygen Supported Bed
Current Location: Salem Arthur GH
Family Member Name: anuradha
Mobile: 9477756590
Email:anu 9876@GMAIL.COM
Additional Info: PATIENT REQUIRE AN O2 BED IN SALEM

ரமா அந்த எண்ணிற்கு அழைத்தாள் ,பரபரப்பான குரலில் ஒரு பெண் பேசினாள் ,மேடம் தயவு செய்து ஒரு ஹாஸ்பிடல்ல இடம் வாங்கி தாங்க ரொம்ப அவசரம் என்று அழுதாள் ,கொஞ்ச நேரத்தில் கூப்புடுறேன் என்று மடமடவென்று ஒரு பத்து மருத்துமனைகளை தொடர்பு கொண்டாள் அதில் பாதி அழைப்பை எடுக்கவே இல்லை மீதி இடம் இல்லை என்று கையை விரித்தனர் பின் வேறு வழியின்றி தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை என்று இரண்டு மணி நேர தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஒரு இடத்தை பிளாக் செய்தாள் .அந்த மருத்துவமனை தகவல்களை அந்த பெண்ணிடம் தெரிவித்தாள் .

நீங்க போய் மருத்துமனையில் அட்மிட் ஆனதும் ஒரு தகவல் சொல்லுங்கமா என்று கூறினாள்

டிக்கெட் 38 அட்டெண்டெட் மேடம் என்று ஒரு மெயில் அனுப்பிவிட்டு நேரத்தை பார்த்தாள் நேரம் நடுநிசி 2.00 .அமெரிக்காவில் இருந்தபடியே நம் நாட்டிற்கு இந்த இக்கட்டான கரோனா சமயத்தில் என்ன உதவி பண்ணலாம் என்று யோசித்து இந்த மருத்துவமனை guidance குரூப் ஒன்றை தொடங்கி செயல்பட்டுவருகின்றனர் .

நெக்ஸ்ட் டிக்கெட் நம்பர் 57 பாருங்க ரமா என்று அடுத்த மெயில் வந்தது

ஒரு கப் டீயுடன் அடுத்த டீடெயில்ஸ் பார்த்துக்கொண்டிருந்தபோது போன் அலறியது ,ஒரு புது எண் ,ஆன் செய்ததும் “மேடம் நீங்க சொன்னிங்கனு தானே இவ்ளோதூரம் வந்தோம் இப்ப இங்க பெட் இல்லனு சொல்ராங்க நீங்களே பேசுங்க மேடம் ,எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆகுது எப்படியாவுது என் வீட்டுக்காரரை காப்பாத்துங்க …..”

ரிஷப்ஷனிஸ்ட் “இங்க ஹாஸ்பிடலில் full மேடம் “என்று எப்போதும் கேட்கும் சொற்களை கேட்டதும் ரமா “இப்பதான் நான் உங்கள்ட்ட பேசினேன் சரவணன் என்ற பேசேன்ட் பெயரில் பிளாக் செய்தேனே ,பாவம் ரொம்ப கிரிட்டிக்கல் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க “

“நான் என்ன பண்றது மேடம் ஒரு நிமிஷம் லைன்ல இருங்க “

“என்ன சார் வேணும் “

“மேடம் டீன்னுக்கு வேண்டப்பட்ட patient “

“அங்க ரைட்ல போங்க சார் கடைசி ஒரு பெட் இருக்கு ,சிஸ்டர் கூப்ட்டுபோங்க “

இதை கேட்டுக்கொண்டிருந்த ரமாவின் போன் லைன் அணைக்கப்பட்டது

ரமாவிற்கு மூளை வேலை செய்வதை நிறுத்தியது ,மறுபடியும் மருத்துவமனைகளின் எண்ணிற்கு பேசி பேசி கடைசியாக lifeline மருத்துவமனையில் ஒரு இடம் இருப்பதாக கூறினார்கள் .

விவரம் கூறுவதற்காக தொலைபேசி எண்ணை அலுத்தும்போதே மனதில் ஒருவித படபடப்பு ,போன் எடுத்ததும் “நீங்க உடனே LIFELINE ஹாஸ்பிடல் போங்க “

“அதற்கு தேவையே இல்லை மேடம் ,ரொம்ப நன்றி ,வேற யாருக்காவது உடனே ஏற்பாடு பண்ணுங்க அவங்களாவது பொழைக்கட்டும் “

மெயில் அடித்தாள் ரமா “TICKET NO 38 CLOSED ” கண்களில் வழிந்ததை துடைத்தப்படி

மங்கியதொரு நிலவினிலே …..

அதிதி இங்கு வந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது .விடியல் இல்லாத இரவும் எலும்பையும் ஊடுருவும் குளிரும் அவளுக்கு புதிது .பயண அலுப்பில் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்று அவளுக்கே தெரியாது .எழுந்ததும் கடிகாரத்தை பார்த்தபோது மணி இரண்டு என்று இருந்தது மதியம் இரண்டா இல்லை நடுநிசி இரண்டா என்று புரியவில்லை.வெளிய சென்று பார்த்தாலும் சந்தேகம் தீராது ஏனெனில் இது ஸ்வல்பர்ட் .பசி வயிற்றை கிள்ளியது அறையை விட்டு வெளியே வந்ததும் ஜார்லின் அம்மா சமையல் அடுக்கில் ஏதோ செய்து கொண்டிருந்தார் .அவரது முகத்தில் ஒரு புன்னகை .ருஷ்ய மொழி மற்றும் நோர்விஜியன் மொழி மட்டுமே அறிந்தவர் என்பதால் புன்னகை மற்றும் உடல்மொழியை கொண்டு பேச முயற்சி செய்தார். அவர் ,சாப்பிட ஏதாவது வேண்டுமா ?என்று கேட்டதற்கு அதிதியும் தலையை ஆட்டவே அவர் சூடாக செய்த lappskojs கிண்ணத்தில் ஊற்றி கொடுத்தார்.இதில் என்ன சேர்த்து இருக்கிறீர்?என்று அதிதி கேட்டதற்கு .அவர் திக்கி திணறி உருளைக்கிழங்கு ,கேரட் மற்றும் இறைச்சி சேர்த்து தயாரிக்கப்பட்ட ஸ்டியு என்று விளக்கமளித்தார் .அதற்குள் மரக்கட்டைகளை வண்டியிலிருந்து இறக்கி அடுக்கி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஜார்ல் .

தூக்கம் போதுமா? என்று அதிதியிடம் கேட்டுவிட்டு இந்த அறை வசதியாக இல்லாவிட்டால் வெளியே தங்குமிடம் ஏற்பாடு செய்துதருவதாக சொன்னான் .அதிதி “நான் தங்குவது உங்களுக்கு சிரமம் இல்லையெனில் நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன்” என்றாள் . அப்போதுதான் அந்த வீட்டை சுற்றிப்பார்த்தாள் .ஒரு சிறிய ரான்ச் ஹவுஸ் .வீட்டின் இடது புறத்தில் மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது .பின் புறத்தில் பன்றிகள் ,கோழிகள் தங்கும் பண்ணை .அவள் அன்று வரை ஏழு எட்டு ஹஸ்கி நாய்களை ஒன்றாக பார்த்ததில்லை .பார்த்து அதிசயத்துப் போனாள் .வீட்டில் மூன்று அறைகள் வந்ததிலிருந்து ஜார்லின் தந்தையை மட்டும் இன்னும் பார்க்கவேயில்லை.

ஆங்காங்கே ஜார்லின் கைவண்ணம் அழகாக ஓவியமாய் காட்சியளித்தது .அனைத்தும் ஸ்வல்பர்டின் இயற்கை எழில் .அவோவியங்களை ஏற்கனவே அவள் பார்த்ததுதான் .அவளுக்கு மெயிலில் பகிர்ந்து இருக்கிறான் .அடுத்து அவளது கவனத்தை ஈர்த்தது புத்தக அலமாரி .புத்தகங்கள் ஆங்கிலத்தில் இல்லாவிடிலும் அது என்ன புத்தகங்கள் என்று புரிந்துகொண்டாள் அதுவும் அவன் அவளுக்கு பரிந்துரை செய்த நோர்விஜியென் புத்தகங்கள் .இவள் படித்தது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை .”இது naive super தான ?நீ பரிந்துரை செய்ததில் எனக்கு ரொம்ப பிடித்த புத்தகம் இதுதான் .லியோ எர்லாண்ட் என் கண்ணை திறந்துட்டார் “என்றாள் .

“சரி நான் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு செல்கிறேன் .உனக்கு ஏதாவது வேண்டுமா?”ஜார்ல் கேட்டதும் தானும் வருவதாக கூறி அவனுடன் சென்றாள் .

வண்டியை அணைக்காமல் சாவியையும் வண்டியிலேயே விட்டுவிட்டு கடைக்குள் சென்றவனிடம் ,”வண்டியை யாரும் எடுத்து சென்று விட்டால் அல்லது வண்டிக்குள் இருக்கும் உன்னோட கிட்டார் மற்றும் துப்பாக்கியை யாரும் எடுக்கமாட்டார்களா ?”என்று கேட்டாள் .

“எங்க ஊரில் திருடனும் இல்லை சிறைச்சாலையும் இல்லை” என்றான் அமைதியாக .

“எனக்கு குழந்தைகள் படிக்கும் பேண்டஸி உலகில் இருப்பது போல் இருக்கிறது உன் ஊர் .எல்லோரும் நல்லவர்கள்,தேவைக்கு மேல் யாரிடமும் எதுவும் இல்லை.ஒரே அமைதி ….”என்று புன்னகைத்தாள் அதிதி .

“அப்படிலாம் இல்லை …எங்கள் ஊரில் பிறக்க மட்டும் தன் உரிமை இருக்கிறது சாக இல்லை .65 வயதிற்கு மேல் இங்கு வாழ உரிமை இல்லை அதுபோல் உடல் நிலை சரியில்லை என்றால் பக்கத்தில் உள்ள ஊருக்கு சென்றுவிட வேண்டும் .”

“ஏன் ?”

“இங்கு புதைக்கப்படும் உடல் மக்காது .அதனால் தொற்றுநோய் வர வாய்ப்புள்ளது .மனிதர்கள் அனைவரும் தான் பிறந்த வாழ்ந்த மண்ணில்தான் சாக வேண்டும் என்று நினைப்பான் அதுவும் இந்த அமைதியான எழில்பொங்கும் இடத்தில் கடைசி நாட்களை நாங்கள் கழிக்க முடியாது “

இருவரும் பொருட்களுடன் திரும்பினர் .”நாளை நீ ஆவலுடன் எதிர்பார்த்த சன் பெஸ்டிவல்,நீ தூங்கு காலையில் பார்க்கலாம்” என்று உணவு சாப்பிட்டபின் ஜார்ல் கூற அதிதி அறைக்கு சென்றாள் .

தன தந்தைக்கு அலைபேசியில் பேசிவிட்டு கணினியில் அதுவரை அவளும் ஜார்லும் பகிர்ந்த மெயிலை பார்த்தாள் தன்னுடைய கூறிய விழிகளால் உற்று உற்று அந்த ஓவியத்தைப் பார்த்தபின் அதற்கு கீழே அவ் வோவியத்திற்கு ஏற்றவாறு மேற்கோள் காட்டப்பட்ட கவிதை வரிகளைத் திரும்ப திரும்ப படித்தாள்.

டியர் அதிதி ,

என்னோட ஊரை பற்றி கேட்டிருந்தை .என்னோட ஓவியத்தில் நீ பார்க்கலாம் ….

January2020highlights Canvas Print featuring the photograph Polar Bear Pair Looking Upwards, Svalbard, Norway by Danny Green / Naturepl.com

Cold frost and sunshine: day of wonder!
But you, my friend, are still in slumber –
Wake up, my beauty, time belies:
You dormant eyes, I beg you, broaden
Toward the northerly Aurora,
As though a northern star arise!

Recall last night, the snow was whirling,
Across the sky, the haze was twirling,
The moon, as though a pale dye,
Emerged with yellow through faint clouds.
And there you sat, immersed in doubts,
And now, – just take a look outside:

The room is lit with amber light.
And bursting, popping in delight
Hot stove still rattles in a fray.
While it is nice to hear its clatter,
Perhaps, we should command to saddle
A fervent mare into the sleight?

Alexandr Pushkin

டியர் ஜார்ல் ,

ஒவ்வொரு முறையும் உன் ஓவியத்தையும் அதற்கு உயிர் கொடுக்க நீ தேர்ந்தெடுக்கும் கவிதையும் உன் ஊரை நான் காணும் ஆவலை அதிகப்படுத்துகிறது . உன் ஒவ்வொரு கடிதத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டது பல .நீ சென்ற கடிதத்தில் அனுப்பிய புத்தக விவரங்கள் சுவாரசியமாக இருந்தது .சில புத்தகங்களை ஆர்டர் செய்துள்ளேன் .Henrik Ibsen இதுவரை நான் படிக்காத ஒரு எழுத்தாளர். A Doll’s House ,அவருடைய இந்த படைப்பு தாகூரின் கதைகள் போல இருக்கும் என்று நம்புகிறேன் .நம்முடைய இந்த நட்பு தொடங்கி ஒரு வருட காலம் ஆகி விட்டது .எப்படி தொடங்கியது என்று உனக்கு நினைவிருக்கிறதா ?

உன் அன்பு தோழி ,

அதிதி கார்த்திகேயன்.

கடிதத்தை மறுபடியும் படித்து ஒருவருடமாக நடந்ததை அசைபோட்டபின் தூங்கிப்போனாள் .

அதிதி கார்த்திகேயன் ஷீதல் மற்றும் கார்த்திகேயன் தம்பதியருக்கு ஒரே மகள் .அப்பாவிடமிருந்து தமிழையும் அம்மாவிடமிருந்து ஹிந்தி மொழியையும் கற்றுக்கொண்டதோடு பெற்றோரிடமிருந்து எப்படி வாழ கூடாது என்றும் கற்றவள் .அவள் வீட்டில் அவள் அதிகம் கேட்டதும் பார்த்ததும் ரிசர்ச் ,பையோடெக்னாலஜி ,நானோடெக்னாலஜி ,தீசிஸ் ,கானபெரென்ஸ் ஆம் அவளது பெற்றோர் இருவரும் IIT யில் பேராசிரியர்கள் .அதனால் சிறுவயது முதல் அவளுக்கு தனிமையைப் போக்கிய உற்ற தோழன் புத்தகங்கள் .அதுவே அவள் பின்னாளில் தேர்ந்தெடுத்த படிப்பாகவும் மாறியது .பி .ஏ ஆங்கிலம் ஸ்ட st .stephens college ,புதுடில்லியில் படித்தாள் அதற்கு பின் முதுகலைப் படிப்பை பெங்களூரில் உள்ள கிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தாள் .தற்போது ஒரு பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராக பகுதி நேர வேலையோடு மேற்படிப்பையும் படித்து கொண்டு இருக்கிறாள் .

மறுநாள் காலை அவள் எழுந்தபோதே வானம் வழக்கத்திற்குமாறாக கொஞ்ச வெளிச்சத்தை காண்பிப்பதை போல் இருந்தது .வந்த மூன்று நாட்களிலே சூரியனை காணாமல் நமக்கு இப்படி இருக்கிறதே எப்படி நான்கு மாதங்கள் இருட்டில் இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது .ஜார்ளிடம் எப்போது சூரிய உதயத்தை பார்க்க செல்வோம் என்றாள் .இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்ப்பாய் என்றான் .ஜார்லின் அம்மா சன் பெஸ்டிவலுக்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக solboller என்ற இனிப்பை தயார் செய்து கொண்டிருந்தார்.வட்டமாக கஸ்டர்டு கிரீம் நிரப்பப்பட்ட இனிப்பை சுவைக்க ஆசையா என்று கண்களாலே கேட்டார் ஜார்லின் அம்மா .

இனிப்பை சுவைத்ததோடல்லாமல் அதை செய்வதற்கும் கொஞ்சம் உதவியை செய்து விட்டு எல்லோரும் சர்ச்சிற்கு கிளம்பினார்கள் .ஆண்டு குழந்தைகள் சூரியனைப் போல் உடை அணிந்து தங்கள் முகத்திலும் சூரியனை வரைந்துகொண்டு அழகாக குழுமி இருந்தனர் .இதோ இன்னும் சில நொடிகளில் வெளியே வரப்போகிறேன் என்பதைப்போல் கொஞ்சம் கொஞ்சமாக தலையை எட்டிப்பார்த்தது சூரிய குழந்தை.அங்கு இருந்த ஒரு வயதான ஜோடி கண்களில் நீர் ததும்ப அந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்தை பார்த்து கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டாள் அதிதி .அடுத்த சூர்ய உதயத்தை பார்க்க நாம் இருப்போமா என்பதுதான் அவர்களின் கேள்வி ..

ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா மார்ச் எட்டாம் தேதி கொண்டாடப்படும் இதை காணவே அதிதி மார்ச் மாதம் வர திட்டமிட்டாள் .ஜார்ள்க்கு ஒரு விஷயம் அதிதியிடம் புதிதாக இருந்தது அவள் சுற்றலாவிற்காக வரும் மற்றவர்களை போல் புகைப்படங்களை எடுத்து தள்ளவில்லை .வீடியோ பதிவுகளை செய்வதும் செல்பி எடுப்பதும் என்று அந்த தருணத்தை அனுபவிக்க தெரியாத மனிதர்களை அதிகம் கண்டவனுக்கு இவள் தன கண்களால் காட்சிகளை பதிவு செய்து மனதில் சேவ் செய்வது பிடித்திருந்தது.அவள் தினமும் ஜௌர்னல் எழுதுவது மட்டுமே அவளின் இந்த பயணத்தின் பதிவு .

ஜார்ல் :”எப்படி இருக்கிறது இந்த அனுபவம் ?”

அதிதி :என்னோட ஊரில் நான் சூரிய உதயத்தை பார்க்க நினைத்ததே இல்லை அது தினமும் நிகழும் என்பதாலோ என்னவோ ..சூரியன் வந்தபின்தான் எழுவேன் .சூரியனின் அருமை தெரிந்து கொண்டேன்.எதுவும் இருக்கும்போது அதன் மதிப்பு தெரிவதில்லை .இங்கே நீங்கள் அனைவரும் பிரசவ விடுதியின் முன் குழந்தையை காண காத்திருப்பவர் போல காத்திருப்பது பார்ப்பதற்கு அரிய காட்சியாக உள்ளது .

ஜார்ல் :அடுத்த முறை அக்டோபர் மதம் வா அப்போதுதான் சூரியனின் அஸ்தமனத்தை பார்க்கலாம் .

அதிதி :எப்படி இனி தூங்க போகிறேன் இந்த வெளிச்சத்தில் என்று தெரியவில்லை

ஜார்ல் :இரண்டு வாரம் உனக்கு புது அனுபவமாக இருக்கும்

வீட்டிற்கு திரும்பியவர்கள் அவர் அவர் வேலையில் மூழ்கிப்போனார்கள் .அதிதி சில கட்டுரைகளை மொழிபெயர்க்கும் வேலையில் இருந்தாள் .ஜார்ல் அன்று மாலை ஒரு இசை கச்சேரிக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான் .

மாலை அதிதியும் அந்த கான்செர்ட்க்கு சென்றாள் அந்த நாளிற்கு ஏற்றார் போல ‘HERE COMES THE SUN ‘ என்ற Beatles பாடலை பாடினார்கள் .அப்போது ஏர்போர்ட்டிலிருந்து வீடு வர ஜார்லின் காரில் ஏறியதும் காரிலிருந்த துப்பாக்கியை பார்த்து பயந்தது .துப்பாக்கியையும் அவனையும் மாறி மாறி பார்த்ததும் அவனே அது பனிக்கரடியிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக அனைவரும் வைத்திருக்கும் பொருள் என்று விளக்கமளித்ததை நினைத்து சிரித்தாள் .

அந்த இரவு வெளிச்சத்தின் காரணமாக தூங்க இயலாமல் தன தந்தையிடம் பார்த்த அனைத்தையும் பகிர்ந்துவிட்டு கணினியை வழக்கம் போல் நாடினாள் .மெயில் பாக்ஸ் சென்றாள்

டியர் அதிதி ,

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது உன்னுடைய பதிவை நான் முதன்முதலில் நம்முடைய வேர்ல்ட் லிட்ரேச்சர் குரூப்பில் பார்த்து உனக்கு பதிலளித்தேன் .என்னுடைய பதிவிற்கு உன்னுடைய விமர்சனம் வித்தியாசமாகவும் நான் சிந்திக்காத கோணத்திலிருக்கும் .நீ பகிர்ந்த அந்த கவிதை சூரியோதயத்தைப் பற்றியது நான் அப்போது வருத்தமாக நான் சூரியோதயத்தை எங்கள் ஊரில் காண 120 நாட்கள் காத்திருக்கவேண்டும் என்று பதிவிட்டேன் .அப்போதுதான் நீ என்னுடைய ஊரை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினாய் .நம்முடைய நட்பு சூரியோதயத்தோடு இனிதே தொடங்கியது .இத்தோடு நீ அறிய விரும்பிய ஸ்வல்பர்ட் தானிய சேகரிப்பு இடத்தை பற்றிய ஒரு கவிதையை இணைத்துளேன் .இதை எழுதியவர் தியான வூட்காக்

என்றும் உன் நண்பன் ,

ஜார்ல்

.

Svalbard Global Seed Vault

Outside Longyearbyen, eight hundred
miles from the North Pole, scientists,
counting and envisioning the cost
of past and future disasters—even
Syria’s civil war—Aleppo’s seed bank
destroyed by bombing 2015—

have tucked into a mountainside,
ensured in permafrost, ample space
for four and a half billion critical
crop seeds worldwide. If the worst
should happen, this backup collection
will safeguard vegetation.

Or is it all mere speculation—
no place feasible but the hereafter.
But how to disentangle ourselves
from earthly (Arctic) time and space?
Standing in front of the entrance
to the doomsday seed vault,

something about it putting a halt
to doubt, I began envisioning
what the seeds are all about.
Was it too late to practice faith?
Dalal from Kuwait had brought
seeds from her desert home,

assuming she could contribute
them right there and then.
Tottering on the threshold
of before and after, I prayed
for faith as small as that biblical
mustard seed. Immerse myself,

I coaxed, in the hope of seeds,
that someday planted,
they can reverse the damage.
Feeling a thirst for roots,
recalling the burning bush—
how thorns and thistles are not

the earth’s original natural fruit—
I wished upon a seed deposited
just then in the scat of that snow
bunting warbling and hunting
insects beside the mountain stream
flowing past the global seed vault,

toward the sea, under the midnight sun.

Diana woodcock

அன்புள்ள ஜார்ல் ,

கொஞ்ச தாமதமாக கடிதம் எழுதுவதற்கு மன்னிக்கவும் .பரீட்சை மாறும் வேலை பளு காரணமாக எழுத முடியவில்லை .குளிர்காலம் நீண்ட இரவுகள் எப்படி சமாளிக்கிறாய்? சில நாட்களாக குழுவில் உன்னோட ஓவியம் ஏதும் பார்க்கமுடியவில்லை .விரைவில் பகிரவும் .நான் இந்தவருடம் ஸ்வல்பர்ட் வரலாம் என்று நினைக்கிறன் .நீ கூறியதைப் போல அந்த சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் .நீண்ட இரவு எப்படி இருக்கும் என்பதை உணர வேண்டும்.பனி கரடிகளை நேரில் காண வேண்டும் .உலகமே அழிந்தாலும் மீண்டும் பூமியை உயிர்ப்பிக்க மனிதனுக்கு தேவையான விதைகளை சேமித்து வைத்திருக்கும் அந்த இடத்தை காண வேண்டும்.ஹஸ்க்கியுடன் ஸ்லேட்டிங் செய்ய வேண்டும் .

அன்பு ஸ்நேகிதி ,

அதிதி கார்த்திகேயன்.

இன்று அதிதி காண வந்திருக்கும் இடம் ஒரு ஏரி .கண்களுக்கு ரம்யமான ஒரு இடம் அந்த சூரியனோடு அதை காண இரு விழிகள் போதாது .ஜார்ளிடம் அவளுக்கு பிடித்த ஒரு விடயம் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றால் வழ வழ வென்று அந்த இடத்தைப்பற்றி கூறுகிறேன் என்று பேசமாட்டான் .அமைதியை களைக்காமல் ரசிக்க விடுவான் .அதிதி தன்னுடைய அலைபேசியில் ஒரு பாடலை இயர் போன் போட்டுகொண்டு கேட்டாள் .தில் பேச்சரே படத்தில் வரும் மைன் தும்ஹரா பாடல் .கண்களை திறந்து அந்த சூரியனை பருகியபடி அந்த பாடலோடு ஐக்யமானாள் .

ஜார்லிடம் இந்த பாடலை கேட்டு பார்க்கிறாயா என்று கேட்டாள் அவனை தனித்து விட்டுவிட்டோமோ என்று நினைவிற்கு வந்ததும் .

அந்த பாடலை கேட்டவன் உண்மையில் சொற்களற்று போனான் .”எனக்கு புரியாத மொழி என்றாலும் என் ஆன்மாவை தொட்டது .இசைக்கு மொழி தேவை இல்லைதானே!” என்றான் .

மியூசிக் யாரு என்னோட தலைவன் ARR ஆச்சே என்றாள் சிரித்துக்கொண்டே .அடுத்தடுத்த நாட்கள் ஸ்வல்பர்ட் ஸீட் வால்ட் ,பிஷ்ஷிங் என்று சென்றது .அவள் உடல் கொஞ்சம் திடீர் பகல் இரவு மாற்றம் தட்பவெட்ப மாற்றத்தால் பசி மட்டும் தூக்கம் அற்று இருந்தது .ஜார்ள்க்கு அவர்கள் வீடு உணவு அவளுக்கு பிடிக்கவில்லையோ என்று தோன்றியதால் சாப்பிட வெளிய அழைத்து சென்றான் .Barentsburg நகரில் மீன் உணவிற்கு பெயர் போன Rijpsburg உணவகத்திற்கு அழைத்து சென்றான்.மீன் அதிதியின் பிடித்த உணவு என்பதை அறிந்தே அங்கு சென்றார்கள்.barentsburg நகரில் பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வாழ்வதால் அங்கு அமெரிக்கா ,பிரிட்டன் ,போர்துகீஸ் என்று அணைத்து வகையான உணவகமும் இங்கு இருக்கிறது .அதிதி மீனையும் ஜார்ல் ஸ்குவிடையும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர் .

அதிதி “உன் அப்பா எங்க ?”என்று அமைதியை களைத்தாள் .

“அப்பாவிற்கு 65 வயது ஆகிவிட்டது கொஞ்சம் உடல்நல சிக்கல் இருக்கிறது அதனால் இங்கு வாழ அனுமதி இல்லை .என் அண்ணனோடு ஓஸ்மாவில் பேக்கரி ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் .அம்மா பண்ணையை விட்டு செல்ல இயலாமல் இங்கு இருக்கிறார் .”

“நீ இந்த இடத்தில்தான் வாழ போகிறாயா ?” சந்தேகத்துடன் கேட்டாள் ,”பெற்றோரை பிரிந்து அவர்கள் வயதான காலத்தில் இருப்பது கஷ்டம்தான் “

“on our earth we can love truly only with suffering and through suffering !”என்றான்

“இங்க இப்போ எதுக்கு டாஸ்டாவ்ஸ்க்கிய கூப்பிட்ட “என்று

ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது.ஒரு விதமான புது உணர்வு மகிழ்ச்சியா ? சோகமா ?தெரியவில்லை .ஜார்லின் அம்மாவை கட்டிஅணைத்து நன்றி கூறினாள் .இந்தியாவிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லி காரில் ஏறினாள் .காரில் சிறிது மௌனத்திற்கு பின் ஜார்ல் “எப்படி வெறும் கடிதத்தில் பழக்கம் ஆனா என்னை நம்பி கண்டம் தாண்டி வந்தாய் ?”

அதிதி “என்னோட instinct என்னைக்கும் தப்பா போகாது …நம்ம இருவருக்கும் பொதுவானது எது இலக்கியம் .இலக்கியத்தை ரசிப்பவர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக போலி முகமூடி அணியாதவராகத்தான் இருக்க முடியும் .இப்ப இந்த கேள்வியை கூட நீ என் மேல் இருக்கும் அக்கறையில் தன் கேட்குறேன்னு தெரியுது பயப்படாத நான் கண்ணை மூடிக்கொண்டு யாரையும் நம்பமாட்டேன் “என்று சொன்னாள் .

ஏர்ப்போர்டும் வந்தது நோர்வே சென்றதும் குறுந்செய்தி அனுப்ப சொன்னனான் .”டெல்லி சென்றதும் கால் பண்ணு .அடுத்து எப்போ சந்திப்போம் என்று தெரியாது .எங்கள் ஊரின் அமைதி உனது வாழ்விலும் இருக்கட்டும் “என்றான்.

எங்கள் நாட்டில் நிறைந்து இருக்கும் வண்ணங்கள் உனது ஓவியத்திலும் நிறையட்டும் என்று கூறி ” கிளம்பினாள் மறக்க முடியாத இனிய நினைவுகளுடன் .

-Madhuneeka Suresh

சக்தி கொடு !!

    
 “நான் பிள்ளைகளுக்கு நல்ல ஒரு அம்மாவாக இருக்கிறேனா ? “.தினம் தினம் தன்னைத்தானே  இந்த  ஒரு கேள்வியைக்  கேட்காமல் பரமுவின் நாள் முடியாது. பரமு மற்றும் வெங்கட் தம்பதியருக்கு கயல் கண்டெடுத்த தேவதையாய் அவர்கள் வாழ்வில் இரண்டு வயது குழந்தையாய் நுழைந்தாள் . தத்தெடுக்கும் பேச்சு வந்ததும் வெங்கட் சொன்ன முதல் விடயம் தனக்கு  குழந்தை வேண்டும் என்பது தான்.கயலிற்கு  என்ன மாதிரியான உணவு ஆரோக்கியத்திற்கு நல்லது,எந்த பொம்மைகள் வாங்க வேண்டும்,எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் ,சோப்பு, ஷாம்பு ,எண்ணெய்  என்று சகலத்தையும்  இன்டர்நெட்டை  தேடியும்   மற்ற  நண்பர்களை விசாரித்தும் பரமு செய்வாள்.கயலிற்கு இந்தப் புது இடம் பழக அதிக நாள் எடுக்கவில்லை .வெங்கட் ஒரு மென்பொருள் பொறியாளர் .அலுவலகம் முடிந்து வீடு வந்ததும் கயலை வெளியே அழைத்து செல்வது,விளையாடுவது  என்று இரவு தன் நெஞ்சோடு அணைத்துதான் தூங்கவைப்பார் .
பரமுவின் அப்பா ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார் .கும்பகோணத்தில் இருந்து அவ்வப்போது பரமுவின் பெற்றோர் சென்னைக்கு வந்து கயலை ஆசையாக பார்த்துவிட்டு செல்வார்கள்.வெங்கட்டின் அம்மாவும் ஒரு ஓய்வுப்பெற்ற  ஆசிரியர் அவர் பரமுவுக்கு தன்னாலான உதவிகளை செய்துகொண்டு அவர்களுடனே வசிக்கிறார் . .கயலை ஒரு அதிர்ஷ்டமான குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும் .அவள் வருகைக்குப்பின் சரியாக ஒரே ஆண்டில் பரமு இரட்டை பெண் குழந்தைகளுக்கு தாயானார் ,குழந்தைகளில் ஒரு குழந்தை எடை குறைவாகவும்  மஞ்சள் காமாலையுடனும் பிறந்தது .சரியாக பாலை குடிக்காமல் பசியால் அழுத வண்ணம் இருந்தது .அவள்தான் வெண்பா .மற்றொரு குழந்தையின் பெயர் இலக்கியா .இரட்டையர்களின் வரவு கயலிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.பரமுவுக்கு எல்லாமே புது அனுபவம் என்பதால் புரிந்து கொள்வதற்கு நாட்களானது .
கயல் கத்தி அழுவது,சாப்பிட அடம்பிடிப்பது ,கைக்குழந்தைகளை அடிப்பது,பொம்மைகளை எறிவது என்று தனக்கு அவர்களின் கவனம் தேவை என்பதை எப்படியெல்லாம் சொல்ல முடியுமோ அப்படியெல்லாம் சொல்லி புரியவைக்க முயற்சித்தாள் .ஒரு நாள் பரமுவின் முடியை கொத்தாக பிடித்து இழுத்தாள் கயல்,ஏற்கனவே இரட்டையர்களால் இரவு தூக்கத்தை துளைத்து களைத்து போயிருந்த பரமுவிற்கு பொறுக்க முடியாமல் தன்னையும்  மறந்து அடித்துவிட்டாள் .அடி  வாங்கிய குழந்தை கயல் சாப்பிடாமல் அழுது அழுது சோர்ந்து தூங்கியது .அதுதான் முதல்முறையாக கயலை அடித்தது.இன்னும் இரண்டு நாளில் பிரசவத்திற்காக  உதவி செய்ய வந்த பரமுவின் அம்மா ஊர் திரும்ப உள்ளார் .பரமு, அம்மா இருக்கும் போதே நம்மை மீறி அசதியில் குழந்தையை அடித்துவிட்டோம்  .வெங்கட்டாலும்  அலுவலக வேலை  காரணமாக அதிக நேரம் உதவ முடியவில்லை .கயல் அவளை ஒதுக்குவதைப்போன்று உணருகிறாள் ,வெண்பாவிற்கு அதிக கவனம் தேவைப்படுகிறது உடல் எடை குறைவாக இருப்பதால்  எனவே இலக்கியாவை அம்மாவுடன் ஊருக்கு அனுப்புவது என்று தீர்மானித்தாள் பரமு . பிறந்த இரண்டே வாரத்தில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை அனுப்ப வெங்கட்டிற்கு மனமில்லை ,பரமுவின் அம்மா பவுடர் பால் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பாவம்  என்று புலம்பினார்.அனால் உண்மையில் மூன்று குழந்தைகளை பார்த்து கொள்வது மிகக்கடினமாகவே இருந்ததால் இந்த முடிவை ஏற்றனர் .
இலக்கியாவின் வருகையால்  பரமுவின் பெற்றோர் மீண்டும் இருபது வயது குறைந்த தம்பதியானார்கள் என்று தன சொல்ல வேண்டும்.அவள் தாயை  பிரிந்த முதல் ஒரு வாரம்  பால் குடிக்காமல் அழுதுகொண்டே இருந்தபோது பரமுவின் தந்தை வேலைக்கு செல்லாமல் பள்ளிக்கு  ஒரு வாரம் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிலே இருந்தார் .கணவனும் மனைவியும் கண்விழித்து மாறி மாறி பார்த்துக்கொண்டனர் .இலக்கியா பசியோடு இருப்பதை கேட்ட  பரமு குற்றஉணர்வில் ரணமானது .அன்று மூன்று குழந்தைகளின் வயிறும் நிறைந்த பின்னே சாப்பிடும் வழக்கம்  பரமுவிற்கு ஆரம்பம் ஆனது இப்படிதான் . இலக்கிய சாப்பிட்டால் என்று அலைபேசியில் விசாரித்தபின்தான் சாப்பிடுவாள் . 
 தனக்கு பல நாள் கழித்து கிடைத்த அன்பை பங்கு போட விரும்பாத கயல்,பிறக் கும் போதே உடல் ஆரோக்கியம் குறைவாக பிறந்த வெண்பா,தாய்ப்பால் கிடைக்காமல்  அழும்  இலக்கியா  என்று மூன்று குழந்தைக்கும் ஒவ்வொரு கதையும்  வலியும் இருப்பதால் ஒரு முழுமையான தாயாக  இருக்கிறோமா என்ற சந்தேகத்துடன் வாழ்கிறாள் பரமு .

ReplyForward

வாழா என் நாட்கள் …

குக்கரின் விசில் சத்தத்தில் விழித்தான் வம்சி, பக்கத்தில் அஸ்வத் நன்றாக உறங்கி கொண்டிருந்தான் .வீட்டில் அஸ்வத்தின் சத்தமும் சமையலறையிலிருந்து வரும் பாத்திரத்தின் சத்தமும் தவிர எதையும் கேட்க முடியாது .எழுந்து வாக்கிங் சென்று வீடு திரும்பியதும் க்ரீன் டீயை வம்சியிடம் நீட்டினாள் சஞ்சனா.இப்பொழுதெல்லாம் இது பழகிவிட்டது.ஆரம்பத்தில் மிக கொடுமையாக இருந்தது .சமயலறையில் சஞ்சனா பொங்கலும் சாம்பாரும் செய்து கொண்டிருந்தாள்.

வம்சி மடமடவென குளித்து தயாரானான்.டைனிங் டேபிளில் சூடாக பரிமாறப்பட்டிருந்த பொங்கலை சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.எவ்வளவு தேடினாலும் போடாத முந்திரி எப்படி கிடைக்கும்.சாப்பிட்டுக் கொண்டே “சஞ்சனா இன்னிக்கு சாயந்தரம் டின்னெர்க்கு என் பிரென்ட் இன்வைட் பண்ணிருக்கான் ,நான் எவ்வளவோ அவொய்ட் பண்ணி பார்த்தேன் கேட்கல ரொம்ப கிளோஸ் பிரென்ட் ,நீயும் ஒரு வருஷமா costco ,வால்மார்ட் தவிர US வந்து எங்கயும் போகல அதான் வரேன்னு சொல்லிட்டேன் “

சஞ்சனா சரி என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.காரில் ஆபீஸ் செல்லும்போது அம்மாவிடம் அலைபேசியில் பேசுவது வழக்கம்.”வம்சி ஆபீசுக்கு கிளம்பிட்டியா ?அஸ்வத் குட்டி எப்படி இருக்கான் ?போட்டோ அனுப்புடா,நாளைக்கு விடீயோக்கால் பண்ணுடா பையன பாக்கணும் “

“பண்றேன் மா “

“சஞ்சனா இப்ப பரவாலையடா ?வெளிய எங்கயாவது கூப்ட்டு போடா ,கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் “

“கூப்பிட்டா வந்தாதானே நான் என்ன கூப்ட்டு போகமாட்டேனா சொல்றேன் “

“சரி சரி கோப படாதடா தம்பி பாவம் சின்னப்பொண்ணு 23வயசுதான்.படக்கூடாத கஷ்டத்தை பட்டிருச்சு “

“அம்மா உங்களுக்கு என்ன தவிர எல்லார் மேலயும் அக்கறை இருக்கு எப்படிம்மா ?ஒரு வேல ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம்ங்கிற மாதிரி நான் கிடைச்சுட்டேன் அதுனாலயா ?”

“டேய் ஏன்டா இப்டி பேசுற நீங்க ரெண்டுபேரும் என்னோட ரெண்டு கண்ணு டா .பத்து வருஷம் கோவில் கொலம் ஏறி செய்யாத வைத்தியமும் பூஜையும் இல்லடா.ஆண்டவனா பார்த்து ஒன்னுக்கு ரெண்டா கொடுத்தான் .ஏற்கனவே உடைஞ்சு போய் இருக்கேன் நீ வேற பேசியே கொல்லாத டா “

“நான் அப்புறம் பேசுறேன் மா “

காரை முன்னாள் பார்த்து ஒட்டியவனுக்கு மனம் பின்னால் சென்றது .

“அம்மா எனக்கு பாட்டி செஞ்ச மாதிரி கடலை சட்னிதான் வேணும் “

“அரவிந்துக்கு nuts ஒத்துக்காதுடா வம்சி ,நீ பாட்டி வீட்டுக்கு போறப்ப சாப்டுக்க .கடலை வாசம் பட்டாலே அவனுக்கு முடியாம போய்டும் “

“உனக்கு அவன தான் பிடிக்கும் எப்ப பாத்தாலும் அவனுக்கு புடிச்ச மாதிரியே செய் “

“உன்னோட அண்ணா டா அவன் ,எதிரியை பாக்கிற மாதிரியே ஏன்டா அவன பாக்குற “

“மூணு நிமிஷம் முன்னாடி பொறந்துட்டா அண்ணாவா ?ரெண்டு பேருக்கும் ஒரே வயசுதான் சும்மா அண்ணா அண்ணானு சொல்லாதிங்க “

அலுவலகம் வந்தது, நிம்மதியாக வேலை பார்த்து ஒரு வருடம் ஆகிறது . வேலையில் கவனம் செய்ய முடியல வீட்டுக்கு போகவும் பிடிக்கல .அஸ்வத்குட்டி மட்டும் இல்லைனா இந் நேரம் பைத்தியம் பிடிச்சு இருக்கும் .மதிய உணவு வேளையும் வந்தது சாம்பார் சாதமும் தயிர் சாதமும் இருந்தது .தயிர் சாதத்தை பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது “டேய் அரவிந்த் ஏன்டா என்ன கொல்ற! .நான் பாக்க மட்டும் தாண்டா உன்ன மாதிரி ஆனா நான் வம்சிடா “

மாலை வீடு திரும்பியதும் டீ கொடுத்தாள் சஞ்சனா .

“டின்னர் போறோம்னு சொன்னேனே ,ஆறு மணிக்கு ரெடியா இரு .கொஞ்சம் சீக்கிரமே வர சொன்னாங்க.நான் அஷ்வத்தோட வாக்கிங் போறேன் “

அஸ்வத்தை ஸ்ட்ரோல்லேர்ல தள்ளிக் கொண்டே நடந்தான் .வாழ்க்கைல எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும் தான் ஆனா இப்படிலாம் நடக்குமா ?ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்றா ஆனா அதுவே எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு .

“சஞ்சனா கொஞ்சம் பழங்கள் வாங்கிட்டு போனும் ,வீட்டுக்கு வேற ஏதாவது வாங்கணுமா ?”

சஞ்சனா ஐஸ்கிரீம் ஒன்றை எடுத்து அதை தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாள் (nuts)உலர் கொட்டைகள் சேர்த்து இருக்கிறதா என்று ,அதற்கு பிறகு ரான்ச் (ranch) போத்தலில் முட்டை உள்ளதா என்று பார்த்து கொண்டிருந்த போது வம்சி பொறுமையை இழந்தான் .நேரமாச்சு சீக்கிரம் வா என்றான் .

ஒரு வழியாக நண்பனின் வீட்டிற்கு வந்தார்கள் .நண்பனையும் அவனது மனைவி ப்ரியாவையும் அறிமுகம் செய்து வைத்தான் சஞ்சனாவிற்கு .

பிரியா “coffee or tea “

“பிரியா வம்சிக்கு காபி ,அவன் ஒரு காபி லவர் ” என்று ராகவ் சொன்னதும் சஞ்சனாவிற்கு என்னவோபோல் இருந்தது .

“சஞ்சனா வம்சியும் நானும் ஒன்னா வீடு எடுத்து தங்கி இருந்தோம் காலேஜ்ல .நல்ல சமைப்பான் இப்ப எப்படி சமையல்ல ஹெல்ப் பண்றானா ?” ராகவ் கேட்டதற்கு சஞ்சனா என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள் .

“ஏன்டா நீ வேற ? என்று வம்சி பேச்சை மாற்றினான் .

“சமைக்க விட்ட அவ்வளவுதான் பொங்கல்ல அரிசில செய்யாம முந்திரிலதான் செய்வான் “

சஞ்சாவிற்கு முற்றிலும் புதியவனாக தெரிந்தான் வம்சி .அஸ்வத் தூக்கத்திற்கு அழுகவும் இதுதான் சாக்கு என்று அவனை தூங்க வைக்கிறேன் என்று ஒரு அறைக்குள் சென்று விட்டாள் சஞ்சனா .

“மச்சி ஆல் ஓகே வா “என்று ராகவ் கேட்டான் .

அதற்கு ஒரு வெற்றுப் புன்னகை மட்டும் பதிலாக வந்தது வம்சியிடம்.சிறிது நேரம் கழித்து வம்சி சாப்பிட சஞ்சனாவை அழைத்தான் .பிரியா எல்லோருக்கும் பரிமாறினாள் .இட்லிக்கு சாம்பார் ஊற்றும் போது எனக்கு சாம்பார் வேண்டாம் அந்த கடலை சட்னி கொடுங்க என்றான்.தயிர் சாதம் வைக்கவா என்று பிரியா கேட்ட போது எனக்கு தயிர் பிடிக்காது என்றான் .இறுதியாக “மச்சான் உனக்கு பிடிச்ச பிஸ்தா ஐஸ் கிரீம் டா “என்று ராகவ் ஒரு கப்பை நீட்டினான் .

வீடு திரும்பும் போது சஞ்சனாவிற்கு தலை வலி தாங்க முடியவில்லை .இந்த ஒரு வருடம் வம்சியை வம்சியாக நினைக்கவில்லை .அரவிந்துடன் நடந்த திருமணமும் அவனின் மரணமும் கண் முன்னே வந்துபோனது .ஆறு மாதம் மட்டுமே வாழ்ந்தாலும் அவனுக்காக பார்த்து பார்த்து செய்த ஒவ்வொன்றும் இன்றும் மாற்றிக்கொள்ள முடியவில்லை .

நீண்ட நாட்களுக்கு பிறகு நட்ஸ் சேர்த்துக்கொண்டதாலா இல்லை காபி குடித்ததினாலா என்று தெரியவில்லை வம்சிக்கு தூங்க முடியாமல் சிரமப்பட்டான் .மனதிற்குள் இனி நானே வம்சியாக மாற முயன்றாலும் முடியாது போல என்று புலம்பினான் .

அன்று அவன் அம்மா பேசியது இன்றும் காதில் ஒலிக்கிறது “வம்சி எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியல ,கல்யாணம் ஆகி ஆறு மாசம்தான் வாழ்ந்தா ,சின்ன பொண்ணு வேற கல்யாணம் செய்யணும்னு பெத்தவங்க நினைக்கறது தப்பில்ல .பொண்ண பெத்தவங்க நியாயமாதான் சொல்ராங்க ஆனா எனக்கு அரவிந்த் அஸ்வத்தா கிடைச்சிருக்கான் நான் அவன வேற வீட்டுக்கு அனுப்ப முடியாது “

“அம்மா என்ன பத்தி நினைக்கவே மாட்டிங்களா ? உங்க முடிவுல குழந்தைய தவிர யாருமே சந்தோஷமா இருக்க முடியாதும்மா … பார்க்க மட்டும்தான் மா நாங்க ஐடென்டிகள் ட்வின்ஸ் ஆனா நான் வேற அவன் வேறம்மா நான் அவனா மாற முடியாது “

“நீ அரவிந்தோட கல்யாணத்துக்கு கூட வரல விசா பிரச்சனைன்னு ,சஞ்சனாவை நேர பார்த்ததோ பேசுனதோ இல்ல ,ஒரு அண்ணியா நீ ஒரே வீட்ல பேசியோ பழகியோ இருந்தேனா கண்டிப்பா இந்த முடிவ எடுக்க மாட்டேன்டா “

“நான் பொறந்தே இருக்க கூடாது “அழுகை வந்தது வம்சிக்கு

சஞ்சனாவிற்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.அஸ்வத்துடன் நேரத்தை போக்கி கொண்டிருந்தாள்,திருமணம் இருவருக்கும் வேண்டா வெறுப்பாக நடந்தது .இருவரும் பெற்றோருடன் பேசுவதை நிறுத்தினார்கள்.இப்ப கொஞ்ச நாளாக தான் வம்சி அவனோட அம்மாவிடம் பேசுகிறான் .சஞ்சனா யாரிடமும் பேசுவதில்லை .

மறுநாள் காலையில் சஞ்சனா வம்சியிடம் காபித் தூள் இல்ல .வாங்கிட்டு வந்திங்கனா காபி போட்டுத்தரேன் என்றாள் .

“வேண்டாம் எப்பொழுதும் போல டீ கொடு “என்றான் .

ஒரு ஞாயிறு அன்று வம்சி சஞ்சனாவை அங்கு உள்ள நூலகத்திற்கு அழைத்து சென்றான்.

அன்று காலை உணவில் பொங்கலில் முந்திரி குறைவில்லாமல் இருந்தது .”இப்ப நான் யாராகதான் வாழனும் கடவுளே ” என்று தலையை பிடித்தான் .

-Maduneeka Suresh

கத்தியின்றி ரத்தமின்றி

“இந்த கரோனா காலக் கட்டத்தில் தினம் ஒரு இசை கச்சேரி லைவா உங்க ரசிகர்களுக்கு கொடுக்கிறிங்க,இந்த ஒரு ஐடியா எப்படி ?”

“இசை மூலம் என்னால் மக்களுக்கு முடிந்தது ,கரோனா மக்களை கொன்று குவிக்கிறது இசை மூலம் ஆறுதல் அளிக்க முயல்கிறேன் “டாக்டர் ஸ்ரீ ஹரி அமைதியாக பதிலளித்தார் .

“நீங்கள் வாங்கிய விருதுகளும் பட்டங்களும் ஏராளம் அதைப்பற்றி பேசி உங்களுக்கு சலித்துப்போய் இருக்கும் அதனால் உங்களுடைய மாணவர்களின் சாதனைகள் பற்றி பேசுவோம்,இன்று இசைத்துறையில் உங்கள் மாணவர்கள் உச்சத்தில் இருக்கிறார்கள் அதைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் …”

“நான் விருதுகள் வாங்கியபோது அடைந்த சந்தோஷத்தை விட என் மாணவர்களின் சாதனைகளில் என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது “

“நீங்கள் ஒரு இசைக் குடும்பத்தை சேர்ந்தவர் உங்கள் தாத்தா ,அப்பா இசை மேதைகள் இன்று பலர் இசை வாசமே இல்லாத குடும்பங்களில் இருந்து வந்து பாடுகிறார்கள் ,இசை ஒரு வரமா ?அல்லது பயிற்சியால் பெற முடியுமா ?”

“இரண்டுமே ! இசையை சிலர் தேர்ந்தெடுக்கிறார்கள் ,இசை சிலரை தேர்ந்தெடுக்கிறது “தீப்தியை பார்த்து ஸ்ரீ ஹரி புன்னகைத்தார் .

“நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் “

“இசை தேர்ந்தெடுத்தவர்களை “

“நீங்கள் சமீபத்தில் பாடிய வனஸ்பதி எனக்கு பிடித்தது அதேபோல் சென்ற வாரம் நீங்கள் பாடிய மோஹனம் வித்யாசமாக இருந்தது “

“நன்றி ,நீங்களும் இசை ஆர்வம் உடையவர்களா இருப்பது மகிழ்ச்சி ,பாடுவிங்கள ?”

“இல்லை சார் ,என்னை பாடி இசையை கொலை செய்ய கூடாதுனு என் ஆசிரியர் சொல்லிட்டார் அதிலிருந்து பாடுறது இல்லை “

சத்தமாக ஸ்ரீஹரி சிரித்தார்

“உங்களுக்கு பிடித்த பாடல் “

“மாயம்மா ,அகிரி ராகத்தில் என்னை நான் மறந்து விடுவேன் “

“உங்களுடைய மாணவர்கள் புதிய cross ஓவர் experiments செய்வதற்கு encourage பண்ணுவீர்களா ?”

“என்னைக் கேட்டால் நம்ம பாரம்பரிய இசையை சிதைக்காத வரையில் எனக்கு ஆட்சபனை இல்லை “

“அந்த எல்லையை எப்படி வரையறுப்பிர்கள் ?தியாகராஜ ஸ்வாமிகள் அடுத்தவர்களுக்காகவும் அடுத்தவர்களுடதையும் பாட கூடாது என்கிறார் ,பாரம்பரியம் என்பது அடுத்தவர் பாடியது தானே ?”

“இன்னோவேஷன் என்ற பெயரில் நாராசமாக பாடுவதை என்னால் ஏற்க முடியாது “

“சாகத்தியம் எவ்வளவு முக்கியம் ?”

“வார்த்தை உச்சரிப்பு ரொம்ப முக்கியம் இல்லைனா அது இசையை கொல்வதற்கு சமம் “

“இவ்வளவு நேரம் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் கூறியதற்கு மிக்க நன்றி டாக்டர் ஸ்ரீஹரி அவர்களே “

“உங்களுடைய கேள்விகளையும் நான் ரசித்தேன்,உங்கள் இசை பற்றிய கட்டுரைகளும் அற்புதம் ,நன்றி !”

இணைய வழியாக நடந்த பேட்டி முடிந்ததும் “சார் ஒரே ஒரு நிமிடம் என்னோட அம்மா ஒரு முறை உங்கள பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க “

“கண்டிப்பா “

“சார் என்ன ஞாபகம் இருக்கா ? தீப்தியை சின்ன வயசில் உங்க கிளாஸ்க்கு கூப்பிட்டு வருவேனே “

ஸ்ரீஹரி தீப்தியின் முகத்தை உற்று பார்த்தார்

இசையை கொலை செய்தது யார் ???

HAND BRAKE

“மித்து ,கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு இப்ப கிளம்புனாவே சன் செட் பாக்க முடியுமான்னு தெரில”

“அல்மோஸ்ட் ரெடிங்க பாப்புவ சீட்ல உட்கார வைங்க நான் லாக் பன்னிட்டு வரேன் ,அப்டியே கார்சீட்டோட பெல்ட் டைட்டா இருக்கு பாப்பாக்கு லூஸ் பண்ணி விடுங்க “

“என்ன மித்து இந்த சைடு வா நீயா டிரைவ் பண்ற ?”

“ஆமா நாளைக்கு ரோட் டெஸ்ட்க்கு ப்ராக்டிஸ் செஞ்ச மாதிரி இருக்கும்ல ,நீங்கதான் நான் நல்லா ஓட்டுறேன்னு சொன்னிங்கலே “

“நீ ஓட்டுற வேகத்துக்கு port huron னுக்கு நயிட்தான் போய் சேருவோம் “

“கொஞ்சம் அமைதியா வாங்க ஓவெர்ஸ்பீட் டிக்கெட் வாங்கி காமிக்கிறேன் “

“நேரா பாத்துப்போமா ,இப்ப நான் போடுற பாட்டுக்கு அப்டியே பிச்சுக்கிட்டு ஹைஸ்பீட்ல நீ ஓட்டணும் “

(அந்த அரபிக்கடலோரம் அந்த அழகை கண்டேனே )

“கொஞ்சம் பாட்ட ஆப் (off )பண்ணிட்டு போனை அட்டென்ட் பண்ணுங்க “

“ஹலோ ,சொல்லுடா “

…………..

“யாரு !!நம்ம கோபியா ? “

…………..

“என்னடா சொல்லுறா ?நான்தான்டா பிளைட் ஏத்திவிட்டேன் “

……….

“என்னங்க யாரு என்னாச்சு ?”

“கோபிக்கு ஆக்சிடென்ட் ,ஸ்பாட் அவுட் “

“யாரு நம்ம கோபி அண்ணனா ?”

“ஆமா “

“நீ கொஞ்சம் நேரா பாத்து ஓட்டு “

“நம்ம வேணும்னா வீட்டுக்கு போகலாமா ?மனசே சரியில்லை “

“இப்ப வீட்டுக்கு போய்மட்டும் என்ன பண்றது ?எதயாவது மாத்த முடியுமா ?கொஞ்சம் டைவர்ட் ஆகணும் என்னால நம்பவே முடியல ,இன்னமும் அவன் விஜய் விஜய் னு கூப்பிட்ற மாதிரி இருக்கு “

“உங்களுக்கு நினைப்பிருக்கா? ஏர்போர்ட்ல உங்கள்ட்ட கோபி இந்தியா போன உடனே சங்கீதாவையும் பிள்ளைகளையும் மதுரைல அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு நான் ஜாலியா ஹைதாராபாத்ல bachelor வாழ்க்கைய வாழணும்னு சொன்னார் “

அதுக்கு சங்கீதா உங்கள்ட்ட கூட “பாருங்க அண்ணா அவுரு எங்கள கழட்டி விடுறதுலேயே இருக்காருனு “சொன்னா

“ஆமா பாவம் எந்த நேரத்துல அந்த பொன்னு சொன்னுச்சோ “

“மித்து சங்கீதா என்ஜினீரிங்க்கா ?”

“இல்லிங்க பி .ஏ ,பாவம் கடைக்கு கூட தனியா போகமாட்டா ,ரெண்டு பசங்கள தனியா எப்படி வளத்துவானு தெரில “

“அம்மா தாயே நீ போற ஸ்பீடுக்கு ரைட் மோஸ்ட் லேனுல (right most lane )அந்த டிரக் பின்னாடியே போ ,கண்டிப்பா நைட்டு போயிருலாம் “

“ஸ்லோவா போறனாலயா ?honk அடிக்கிறாங்க “

“பின்ன என்ன ?”

“டாடி மொபைல் குடுங்க ப்ளீஸ் “

“கன்னுகுட்டி நோ மொபைல் அப்டியே வேடிக்க பாத்துட்டு வாங்க “

“மித்து கொஞ்சம் வேகமா போ “

“இந்த ஸ்பீட் ஓகேவா ?”

“இன்னும் கொஞ்சம் “

வண்டி எண்பதில் செல்கிறது

“ஏய்ய் என்னடி பண்ற அய்யோஓஓஓ “

“அம்மா !!”

கார் இடதும் வலதும் மாறி மாறி செல்கிறது

“கடவுளே எப்படிடி நிப்பாட்டுன?”

“hand brake போட்டேன் “

“பாப்பு ஒன்னும் இல்லடா ” மித்ரா பயந்த குழந்தையை சமாதானம் செய்தாள் .

“மித்து flat tyre ,எப்படி கார் control விட்ட “

“என்ன நடந்ததுன்னு எனக்கே தெரில ,இப்ப என்ன பண்றது ?”

“AAA க் குத்தான் கால் பண்ணனும் “

போன் பேசியப்பின் அமைதியாக இருந்த விஜய் “சரி உனக்கு வண்டி பிரேக் பிடிக்காதப்ப எப்படி handbrake போட்டு நிப்பாட்டணும்னு தோணுச்சு”

” பாப்பா அழுகிற சத்தம் கேட்ட உடனே என்ன நெனச்சேன்னு எனக்கு தெரில அதுவரைக்கும் ப்ளாங்கா இருந்துச்சு மைண்ட் அப்புறம் தானாவே என்னமோ செஞ்சேன் “

“experienced டிரைவர்ஸ்க்கே சில சமயம் தோணாது ஏதோ நல்ல நேரம் இல்லாட்டி பரலோகம் தான் “

“இன்னிக்கு நாளே சரியில்லை ,எல்லாமே தப்பாவே இருக்கு “

“அப்டிலாம் இல்ல யாருக்கும் ஒன்னும் ஆகலலே “

“அப்புறம் என்ன யோசிக்கிறீங்க “

“சங்கீதாவ நெனச்சு கவலப்பட்டேன் பட் இப்ப தெளிவாயிடுச்சு ,எல்லாம் hand brake மந்திரம் தான் “

“புரியல “

“motherhood power “

அழலவனின் விளையாட்டு

“டேய் புத்தகத்தை முடிச்சிட்டியாடா “இனியனின் குரலில் புத்தகத்திலிருந்து கண்ணை எடுத்தான் அழலவன் .

“படிச்சுட்டே இருக்கேன் டா இன்னும் 150 பக்கங்கள் இருக்கு,மொத்தம் 1000 பக்கங்கள் இந்த புத்தகத்தில் ” என்ற அழலவனின் பதிலுக்கு ,”எப்பிடிடா இப்படிலாம் எழுத முடியும் 25 புத்தகம் அதுல ஒவ்வொரு புத்தகமும் 1000பக்கம் “என்று வியந்து வாயை பிளந்தான் இனியன் .

“பின்ன போட்டினா சும்மாவா அதுவும் நம்ம கவர்னர் வாசகன் அவ்வளவு எளிதான போட்டியவா நடத்தவாரு .நம்ம விஷ்ணுபுர தீவிலேயே இது வர யாரும் விளையாடாத விளையாட்ட விளையாடுவதற்கு வாய்ப்பு ,அப்படி அது என்ன விளையாட்டுனு பாக்கணும் அதுக்காகத்தான் போட்டிக்கு ஓத்துக்கிட்டு புத்தகத்த படிக்கிறேன் “

கவர்னர் மாளிகை முன் மக்கள் பெருந்திரளாக கூடி இருந்தனர் .ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அமைதி .கவர்னர் வாசகன் அழலவனை அழைத்து திடலின் நடுவே ஒரு மேசை முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர சொன்னார் .அவருடைய பணியாளிடம் அந்த பெட்டியை கொண்டு வர சொன்னார் .சிவப்பு பட்டுத் துணியால் மூடப்பட்ட அந்த மரப்பெட்டி கொண்டுவரப்பட்டது .அங்குள்ள அனைவரது கண்ணும் அந்தப் பெட்டியில்தான் .கவர்னர் அழலவனை அந்த பெட்டியை திறக்க சொன்னார்.அவனும் திறந்தான் அதில் சில பொத்தான்கள் இருந்தது .நீ படித்த புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும் அதற்கு சரியான விடையை அளித்தாயெனில் நீ விளையாட்டை தொடங்கலாம் என்றார் .

விளையாட்டு தொடங்கியது .விளையாட்டின் விதிமுறையை மக்கள் அனைவரும் கேட்கும்படி மந்திரி ஒருவர் வாசித்தார் .இந்த வருடம் 2070வதிற்கான போட்டியில் மொத்தம் 25 புத்தகத்தை வாசிக்க வேண்டும் .ஒவ்வொரு புத்தகத்தை முடித்ததும் இந்த அரிய மாயாஜால பெட்டியில் வரும் விளையாட்டை விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் .போட்டியின் நடுவே விலக முடியாது .கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

அழலவன் இப்போது முதல் புத்தகத்தை முடித்ததால் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது .அவனும் சரியான விடையை அளித்து விளையாட்டை விளையாட ஆரம்பிக்கப்போகிறான் .இரண்டு பொத்தான்கள் இருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் தேர்தெடுக்கும் பொத்தான்களை பொறுத்து விளையாட்டு அடுத்த நிலைக்கு முன்னேறும் .அவனுடைய தேர்வை பொறுத்தே சிலரின் விதி இருக்கப்போகிறது .ஆம் இது கதையல்ல நிஜம் .

திரையில் வந்த காட்சி ஒரு அரசவை ,அனைவரது முகத்திலும் கலக்கம் ,ஒரு பக்கம் ஐந்து சகோதரர்கள் ,மற்றொரு புறம் இரு சகோதரர்கள் மற்றும் ஒரு நண்பன் நடுவில் அவர்களது மாமன்.எல்லோரும் ஐவர்களின் மூத்தவன் உருட்டிய தாயத்தை பார்த்தவண்ணம் இருந்தனர் .

உருட்டியது என்னவோ அவன் அனால் அதன் முடிவு இப்போது அழலவனின் கையில்.அழலவன் பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை ,ஒரு பொத்தானை அழுத்தி வைத்தான்,அதன் பலன் ஒரு பெண் அங்கு கொண்டுவரப்பட்டு அரசவை நடுவில் நிறுத்திவைக்கப்பட்டாள் .இப்போது ஆட்டம் தொடருகிறது இந்த ஆட்டத்தின் முடிவு அப்பெண்ணின் நிலையை முடிவு செய்யும் ,அழலவன் இப்போது ஐவர் வெல்ல வேண்டும் என்று வேண்டிக்கொண்டே ஒரு பொத்தானை அழுத்தினான் ஆனால் அது அவனை அவன் வாழ்க்கை முழுவதும் ஏன் அதை தேர்ந்தெடுத்தோம் என்று எண்ணி எண்ணி நோகச் செய்யும் என்பதை அறியான் .

ஐவர் தோற்றனர் ,அங்கு அழலவனை சுற்றி உள்ள மக்கள், திரையில் தோன்றும் மக்கள் யார் ?பார்ப்பதற்கு இவ்வளவு வித்யாசமாக இருக்கின்றார்கள் என்று தங்களுக்குள் பேசி கொள்கின்றனர் .இப்போது அப்பெண் நடுவில் நிற்கவைக்கப் படுகிறாள்,ஒருவன் அப்பெண்ணின் துயிலை உரிக்கிறான் ,அவளின் ஓலம் விஷ்ணுபுர தீவையே கலங்க செய்கிறது .அழலவன் உடல் நடுங்குகிறது .வியர்த்து விறுவிறுத்தவன் படாரென்று அந்தப்பெட்டியை மூடுகிறான் அதன் விளைவு அங்கே(நிகழ்காலம் ) அமெரிக்கா என்ற நாட்டில் ஒரு கான்பெரன்ஸ் கால் நடக்கிறது

“வணக்கம் இலக்கிய இரவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ,இப்ப நம்ம சங்கர் புதுவை தீரன் அவர்களின்பிறந்தநாளை முன்னிட்டு அவர் எழுதிய கவிதைகளை பகிர்வார் .நீங்க ஆரம்பியுங்கள் சங்கர் ,சங்கரை தவிர காலில் உள்ள அனைவரும் மியூட் செய்து கொள்ளுங்கள்”என்று லக்ஷ்மன் சொல்ல,சங்கர் “கவிஞர் தீரன் அவர்கள் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ………என்று பேசிக்கொண்டிருக்க அங்க ஒரு குரல்

“இந்த பைத்தியங்களுக்கு வேற வேலையே இல்லை எப்ப பார்த்தாலும் திங்கட்கிழமை ஆனா இந்த இருபதும் ஒன்னு சேந்து உயிரை வாங்கும் “

“பிளீஸ் எல்லாரும் மியூட் செய்யுங்க “

“மியூட்லதானே இருக்கோம் என்னாச்சு “

[மீண்டும் விஷ்ணுபுரத்திற்கு (எதிர்காலத்திற்கு )வருவோம்]

அழலவன் ஒரு நிமிடம் கழித்து பெட்டியை திறந்தான் .அவனது கைகளின் நடுக்கம் குறையவே இல்லை .கண்களில் கண்ணீர் வெளியே வராமல் எட்டிப்பார்த்தபடி இருந்தது .பெட்டியை மூடியதை விதிகளின் மீறல் என்று விளையாட்டின் மேற்பார்வையாளர் கண்டித்தார் .அழலவனின் மனதில் அரிய விளையாட்டு என்று எண்ணிதானே வந்தோம் ஆனால் இது பிறரது வாழ்க்கையோடு விளையாடும் விளையாட்டு என்று சொல்லவே இல்லையே என்று தன்னை நொந்துகொண்டான் .இப்டி நினைத்து கொண்டு இரண்டு பொத்தான்களை மாறி மாறி அழுத்திக்கொண்டே இருந்தான் .இப்போது மீண்டும் ஒரு சங்கடம் இளம் வயது வாலிபன் சக்கர வியூகத்திதின் நடுவே ,அந்தியும் சாய்ந்தது ஒரு அபாய சங்கின் முழக்கம் போட்டி இனி அடுத்த புத்தகத்தை முடித்ததும் தொடரலாம் என்ற அறிவிப்பு வந்தது .

யாருடைய முகத்தையும் பாராமல் அழலவன் இரு கைகளாலும் தலையை பிடித்தபடி தனியாக உட்கார்ந்து கண்களை மூடினான் ,அப்பெண்ணின் குரல் மட்டுமே கேட்டது .

“இப்ப என்னாச்சுன்னு இப்டி இருக்க ?நடந்தது ஏதும் உன் தவறு இல்ல,சும்மா உன்ன குழப்பிக்காத ,புத்தகத்த படிக்குற அந்த இளைஞனை காப்பாத்துற அவ்வளவுதான் போட்டியிலிருந்து விலகவும் முடியாது அதேபோல் நாம் கையில் எடுத்த வேலையே பாதியில் விடக்கூடாது அழலவா …..”என்றான் இனியன்

இனியா “விளையாட்டே எனக்கு புரியல குழப்பமா இருக்கு ,இப்ப இருக்க மனநிலையில் எப்படி படிப்பது .இந்த புத்தகமோ நிறைய படிமங்களும் தத்துவங்களும் நிறைந்தது ,கண்ணை மூடினாள் அந்த அப்பொண்ணோட கதறல்தான் கேட்குது எனக்கு அந்தக் குரல் நம்ம தோழி மிளிர்மிகையோடது போலவே இருக்கு .”

“நீ 48 மணி நேரத்துக்குள் புத்தகத்தை முடிக்கணும் ,நீ எந்த தவறும் செய்யவில்லை ,கண்டிப்பா நம்ம தீவில் உள்ள மக்களுக்கு இந்த விளையிட்டு மூலமா கற்றுக்கொள்ளும் பாடம் நிறையவே இருக்குனு நான் நம்புறேன் டா “

இரண்டு நாட்கள் கழித்து விளையாட்டு தொடங்கியது ,மக்களின் பிராத்தனையும் ஆரம்பித்தது சக்கரவியூகத்தில் இருக்கும் அந்த இளைஞனுக்காக ,அழலவனின் விரல்கள் பொத்தானை தீண்டுவதற்கு முன் ஓராயிரம் முறை தன் இஷ்டதெய்வத்தை உச்சரித்தது ஆனால் அந்த இளைஞனின் இரத்தம் பீறிட்டது இவனின் கண்களில் தெறித்தது போல் இருந்தது கண்களை இருக்க மூடினான் ,உதடுகள் துடித்தது .கைவிரல்களை மடக்கி மேசையை குத்தி இந்த விரல்கள்தானே இந்த பொத்தானை அழுத்தியது என்று ஆவேசமாய் கத்தினான் .அடுத்து அடுத்து பல மரணங்கள் இப்போது விளையாடி விளையாடி அலுத்து போனது விளையாட்டு மட்டும் அல்ல மரணமும் தான் .

அடுத்து அடுத்து புத்தகங்களும் போட்டியும் என்று சென்றதுஆனால் ஒவ்வொரு சுற்றின்போதும் இவன் இந்த போட்டியை பார்க்கும் பார்வையும் புத்தகத்தை அணுகும் பார்வையும் மாறியது .இப்போது மரணத்தை கண்டு கலங்கவும் இல்லை வெற்றியை கொண்டாடி கர்ஜிக்கவும் இல்லை .இப்போது இருபத்தி ஐந்தாவது புத்தகம் அழலவனின் கையில் .

இனியன் “இன்றைக்கு போர் முடிவுக்கு வரும் ,எனக்கு நம்பிக்கை இருக்கு ஒரு னால முடிவை இருக்கும் .உனக்கு பதற்றமா இருக்கா ?”

“இல்லை எனக்கு இப்ப எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை ,ஒரு வெற்று காகிதம் மாதிரி இருக்கு எனக்கு மனசு ,நான் இந்த நிகழ்வுகளை நிகழ்த்தவில்லை அதனால் இதோட வெற்றியோ தோல்வியோ என்னை எந்த விதத்திலும் பாதிக்காது “என்றான் அழலவன் .

எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ!!!!

நான் என் வீட்டை மாற்றிக் கொண்டே இருப்பேன். ஒரே வீட்டில் பல வருடங்களாக இருப்பவர்களை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.வாழ்க்கையில் சுவாரஸ்யம் வேண்டாமா? புது புது அனுபவங்கள் வேண்டாமா? ஆனால் எல்லா அனுபவங்களும் ஆனந்தமான ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில அனுபவங்களின் தாக்கம்பயங்கரமானதாகவும் இருக்கக் கூடும்.

நான் அவளை சந்தித்தது அவள் மணக்கோலத்தில் இருந்தபோது. நான் என வீட்டை அங்கே கட்டிக்கொண்டிருந்தேன். அவளையும் அவள் கணவனையும் ஆரத்தி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவள் குனிந்த தலையை நிமிரவில்லை. நானும் அவள் முகத்தை காண்பத்தற்காக அவ்வளவு நேரம் காத்திருந்தேன்.அந்தவீடு முழுவதும் உறவினர்களின் கூட்டம், ஒரே பேச்சு சத்தம் , பெண்களின் சிரிப்பொலி மற்றும் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் ஆனால் எனக்கு இது எதுவும் தெரியவில்லை அவள் மட்டுமே என் கவனத்தில் இருந்தாள்.

அவளை அடிக்கடி அவள் கணவனின் கைகளை கோர்த்தவண்ணம் வெளியே சென்று வருவதை பார்ப்பேன்.நான் சில தினங்களில் வீடு கட்டும் வேலைமுடிந்து அங்கேயே குடியும் போய்விட்டேன்.அவள் கோலமிடுவதை பார்த்தப்பின்தான் எனக்கு என் இனிய நாள் தொடங்கும்.விதவிதமான பெரிய அழகிய கோலங்கள் அந்த அழகியை போலவே.ஒரு நாள் அவன் பெட்டியுடன் வெளியூருக்கு கிளம்பினான் அவள் வாசல்வரை கண்களை துடைத்த வண்ணம் வந்தாள். அவன் “ பட்டாளத்துக்காரன் பொண்டாட்டி இப்படி கோழையாகவா இருப்பது?” என்றதும் வந்த அழுகையை விழுங்கிக்கொண்டு சிரித்தாள் பாருங்க ஒரு சிரிப்பு என் மனதில் அப்போது ஒரு பாடல் தோன்றியது “ எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ குறவள்ளீ,சிறுகள்ளீ! என்றப்பாட்டுதான். அதற்கென்று என்னை பாடகன் என்று நினைத்துவிட வேண்டாம் நான் இதற்கு முன்னாள் இருந்தது அபார்ட்மெண்டில் ்அங்கே ஒருவர் பாரதியார் பாடல்களை எப்போதும் பாடிக்கொண்டிருப்பார். பல இடங்கள் மாறினால்தானே நாலையும் தெரிந்து கற்றுக்கொள்ள முடியும்.

அவன் சென்றப்பின் அவள் முகத்தில் ஒருவரைப் பார்க்கும்போது மட்டுமே புன்னகை மலரும்.அவர் வேறு யாருமில்லை தபால்காரர்தான்.அவன் அவளுக்கும் அவன் அம்மாவிற்கும் என இரண்டு கடிதங்களை அனுப்புவான்.அதை அந்த படிக்கட்டில் அமர்ந்து அவள் படிக்கும்போது அவள் முகத்தில் நவரசத்தையும் பார்க்கலாம். இப்படி அவளை பார்த்துக்கொண்டே இருப்பதெல்லாம் ஒரு பொழப்பா? என்று நீங்கள் என்னை கேட்கலாம் ஒருமுறை அவளைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். நான் ஒன்றும் வேலையில்லாமல் ்அல்லது செய்யாமல் இல்லை. எனக்கும் என் குடும்பத்தைப் பார்த்துகொள்ளும் பொறுப்பும் என் எதிர்காலத் தேவைகளுக்கு சேமிக்கும் கடமையும் இருக்கிறது .

அவ்வப்போது அவள் அவனோடு அலைப்பேசியில் பேசுவது என் காதில் விழும். நானாக ஒட்டுகேட்பது கிடையாது என் காதில் தானாக விழுந்தால் அதற்கு நான் என்ன செய்வது? பெரும்பாலும் அவள் பேசமாட்டாள
ம்ம்ம என்று கேட்டுக்கொண்டிருப்பாள்.நானும் என் வேலையில் கொஞ்சம் பிஸியாகி விட்டேன் கொஞ்ச வாரங்களுக்குப் பின் அவளை பார்த்தப் போது ஏதோ ஒருவித மாற்றம் எனக்கு புரியவில்லை. அவள் கடிதம் எழுதுவாள் பாருங்க அடடா எழுத ,அடிக்க ,எழுத அடிக்க என்று அவள் ்அப்படி என்னதான் எழுத விரும்புகிறாள் என்று அவளுக்கே தெரியாது. கொஞ்ச நாளில் அவள் தோற்றமே மாறிப்போனது. முகம் வீங்கியது போலானது உடல் எடையும் அதிகமானது . எனக்கு முதலில் புரியவில்லைப் பின் புரிந்தது.எனக்கு இப்பவும் அவள் அழகிதான், அவள் மெதுவாக அசைந்து அசைந்து நடப்பது, குனியாமல் நின்றுக்கொண்டே வாசல் பெறுக்குவது என்ன ஒரே ஒரு குறை என்றால் பெரிய கோலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது ஒரு குட்டி நட்சத்திரமாக மாறியது. அதுவும் அழகுதான்!

அலைப்பேசியில் இப்பொழுதெல்லாம் புலம்பல்தான் அதிகம், உடல் உபாதைகள், மாமியார் பற்றிய புகார் மற்றும் விம்மல்தான் பெரும்பாலும். இப்படியே நாட்கள் ஓடியது அவளும் அவளது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள். எனக்கும் என் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் நான் என் வீட்டை மாற்றும் நேரமும் வந்தது. சுற்றி சுற்றி பல நாட்கள் அலைந்தேன். இடம் தேடியே பல வாரங்கள் ஓடியது ஆனால் அவள் நினைவு மனதில் இருந்துக்கொண்டிருந்தது. அவள் குழந்தை யாரைப்போலிருக்கும் அவள் குழந்தையை எப்படி அழகாக கொஞ்சுவாள்? உடல் மெலிந்தருப்பாளா? என பல கேள்விகள். ஒரு நாள் சென்றுதான் பார்ப்போமே என்று சென்றேன். அதுதான் நான் செய்த தவறு ஆம் அவளைப் பார்த்தேன் பார்க்க கூடாத கோலத்தில். மாமியார்ர் கிளவியின் வார்த்தை மட்டும் தூரத்திலிருக்கும் என் காதில் விழுந்தது “ பொறக்கும்போதே என் மவன முழுங்கிட்டான் உன்னோட மவன்” . என் இதயம் சுக்கு நூறாக உடைந்தது. சிட்டுக்குருவிகளின் இதயம் சிறியது என்றாலும் இதயம் இதயம்தானே!

– மதுநிகா பிரசாந்த் சுரேஷ்