சக்தி கொடு !!

    
 “நான் பிள்ளைகளுக்கு நல்ல ஒரு அம்மாவாக இருக்கிறேனா ? “.தினம் தினம் தன்னைத்தானே  இந்த  ஒரு கேள்வியைக்  கேட்காமல் பரமுவின் நாள் முடியாது. பரமு மற்றும் வெங்கட் தம்பதியருக்கு கயல் கண்டெடுத்த தேவதையாய் அவர்கள் வாழ்வில் இரண்டு வயது குழந்தையாய் நுழைந்தாள் . தத்தெடுக்கும் பேச்சு வந்ததும் வெங்கட் சொன்ன முதல் விடயம் தனக்கு  குழந்தை வேண்டும் என்பது தான்.கயலிற்கு  என்ன மாதிரியான உணவு ஆரோக்கியத்திற்கு நல்லது,எந்த பொம்மைகள் வாங்க வேண்டும்,எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் ,சோப்பு, ஷாம்பு ,எண்ணெய்  என்று சகலத்தையும்  இன்டர்நெட்டை  தேடியும்   மற்ற  நண்பர்களை விசாரித்தும் பரமு செய்வாள்.கயலிற்கு இந்தப் புது இடம் பழக அதிக நாள் எடுக்கவில்லை .வெங்கட் ஒரு மென்பொருள் பொறியாளர் .அலுவலகம் முடிந்து வீடு வந்ததும் கயலை வெளியே அழைத்து செல்வது,விளையாடுவது  என்று இரவு தன் நெஞ்சோடு அணைத்துதான் தூங்கவைப்பார் .
பரமுவின் அப்பா ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார் .கும்பகோணத்தில் இருந்து அவ்வப்போது பரமுவின் பெற்றோர் சென்னைக்கு வந்து கயலை ஆசையாக பார்த்துவிட்டு செல்வார்கள்.வெங்கட்டின் அம்மாவும் ஒரு ஓய்வுப்பெற்ற  ஆசிரியர் அவர் பரமுவுக்கு தன்னாலான உதவிகளை செய்துகொண்டு அவர்களுடனே வசிக்கிறார் . .கயலை ஒரு அதிர்ஷ்டமான குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும் .அவள் வருகைக்குப்பின் சரியாக ஒரே ஆண்டில் பரமு இரட்டை பெண் குழந்தைகளுக்கு தாயானார் ,குழந்தைகளில் ஒரு குழந்தை எடை குறைவாகவும்  மஞ்சள் காமாலையுடனும் பிறந்தது .சரியாக பாலை குடிக்காமல் பசியால் அழுத வண்ணம் இருந்தது .அவள்தான் வெண்பா .மற்றொரு குழந்தையின் பெயர் இலக்கியா .இரட்டையர்களின் வரவு கயலிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.பரமுவுக்கு எல்லாமே புது அனுபவம் என்பதால் புரிந்து கொள்வதற்கு நாட்களானது .
கயல் கத்தி அழுவது,சாப்பிட அடம்பிடிப்பது ,கைக்குழந்தைகளை அடிப்பது,பொம்மைகளை எறிவது என்று தனக்கு அவர்களின் கவனம் தேவை என்பதை எப்படியெல்லாம் சொல்ல முடியுமோ அப்படியெல்லாம் சொல்லி புரியவைக்க முயற்சித்தாள் .ஒரு நாள் பரமுவின் முடியை கொத்தாக பிடித்து இழுத்தாள் கயல்,ஏற்கனவே இரட்டையர்களால் இரவு தூக்கத்தை துளைத்து களைத்து போயிருந்த பரமுவிற்கு பொறுக்க முடியாமல் தன்னையும்  மறந்து அடித்துவிட்டாள் .அடி  வாங்கிய குழந்தை கயல் சாப்பிடாமல் அழுது அழுது சோர்ந்து தூங்கியது .அதுதான் முதல்முறையாக கயலை அடித்தது.இன்னும் இரண்டு நாளில் பிரசவத்திற்காக  உதவி செய்ய வந்த பரமுவின் அம்மா ஊர் திரும்ப உள்ளார் .பரமு, அம்மா இருக்கும் போதே நம்மை மீறி அசதியில் குழந்தையை அடித்துவிட்டோம்  .வெங்கட்டாலும்  அலுவலக வேலை  காரணமாக அதிக நேரம் உதவ முடியவில்லை .கயல் அவளை ஒதுக்குவதைப்போன்று உணருகிறாள் ,வெண்பாவிற்கு அதிக கவனம் தேவைப்படுகிறது உடல் எடை குறைவாக இருப்பதால்  எனவே இலக்கியாவை அம்மாவுடன் ஊருக்கு அனுப்புவது என்று தீர்மானித்தாள் பரமு . பிறந்த இரண்டே வாரத்தில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை அனுப்ப வெங்கட்டிற்கு மனமில்லை ,பரமுவின் அம்மா பவுடர் பால் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பாவம்  என்று புலம்பினார்.அனால் உண்மையில் மூன்று குழந்தைகளை பார்த்து கொள்வது மிகக்கடினமாகவே இருந்ததால் இந்த முடிவை ஏற்றனர் .
இலக்கியாவின் வருகையால்  பரமுவின் பெற்றோர் மீண்டும் இருபது வயது குறைந்த தம்பதியானார்கள் என்று தன சொல்ல வேண்டும்.அவள் தாயை  பிரிந்த முதல் ஒரு வாரம்  பால் குடிக்காமல் அழுதுகொண்டே இருந்தபோது பரமுவின் தந்தை வேலைக்கு செல்லாமல் பள்ளிக்கு  ஒரு வாரம் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிலே இருந்தார் .கணவனும் மனைவியும் கண்விழித்து மாறி மாறி பார்த்துக்கொண்டனர் .இலக்கியா பசியோடு இருப்பதை கேட்ட  பரமு குற்றஉணர்வில் ரணமானது .அன்று மூன்று குழந்தைகளின் வயிறும் நிறைந்த பின்னே சாப்பிடும் வழக்கம்  பரமுவிற்கு ஆரம்பம் ஆனது இப்படிதான் . இலக்கிய சாப்பிட்டால் என்று அலைபேசியில் விசாரித்தபின்தான் சாப்பிடுவாள் . 
 தனக்கு பல நாள் கழித்து கிடைத்த அன்பை பங்கு போட விரும்பாத கயல்,பிறக் கும் போதே உடல் ஆரோக்கியம் குறைவாக பிறந்த வெண்பா,தாய்ப்பால் கிடைக்காமல்  அழும்  இலக்கியா  என்று மூன்று குழந்தைக்கும் ஒவ்வொரு கதையும்  வலியும் இருப்பதால் ஒரு முழுமையான தாயாக  இருக்கிறோமா என்ற சந்தேகத்துடன் வாழ்கிறாள் பரமு .

ReplyForward