நான் என் வீட்டை மாற்றிக் கொண்டே இருப்பேன். ஒரே வீட்டில் பல வருடங்களாக இருப்பவர்களை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.வாழ்க்கையில் சுவாரஸ்யம் வேண்டாமா? புது புது அனுபவங்கள் வேண்டாமா? ஆனால் எல்லா அனுபவங்களும் ஆனந்தமான ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில அனுபவங்களின் தாக்கம்பயங்கரமானதாகவும் இருக்கக் கூடும்.
நான் அவளை சந்தித்தது அவள் மணக்கோலத்தில் இருந்தபோது. நான் என வீட்டை அங்கே கட்டிக்கொண்டிருந்தேன். அவளையும் அவள் கணவனையும் ஆரத்தி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவள் குனிந்த தலையை நிமிரவில்லை. நானும் அவள் முகத்தை காண்பத்தற்காக அவ்வளவு நேரம் காத்திருந்தேன்.அந்தவீடு முழுவதும் உறவினர்களின் கூட்டம், ஒரே பேச்சு சத்தம் , பெண்களின் சிரிப்பொலி மற்றும் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் ஆனால் எனக்கு இது எதுவும் தெரியவில்லை அவள் மட்டுமே என் கவனத்தில் இருந்தாள்.
அவளை அடிக்கடி அவள் கணவனின் கைகளை கோர்த்தவண்ணம் வெளியே சென்று வருவதை பார்ப்பேன்.நான் சில தினங்களில் வீடு கட்டும் வேலைமுடிந்து அங்கேயே குடியும் போய்விட்டேன்.அவள் கோலமிடுவதை பார்த்தப்பின்தான் எனக்கு என் இனிய நாள் தொடங்கும்.விதவிதமான பெரிய அழகிய கோலங்கள் அந்த அழகியை போலவே.ஒரு நாள் அவன் பெட்டியுடன் வெளியூருக்கு கிளம்பினான் அவள் வாசல்வரை கண்களை துடைத்த வண்ணம் வந்தாள். அவன் “ பட்டாளத்துக்காரன் பொண்டாட்டி இப்படி கோழையாகவா இருப்பது?” என்றதும் வந்த அழுகையை விழுங்கிக்கொண்டு சிரித்தாள் பாருங்க ஒரு சிரிப்பு என் மனதில் அப்போது ஒரு பாடல் தோன்றியது “ எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ குறவள்ளீ,சிறுகள்ளீ! என்றப்பாட்டுதான். அதற்கென்று என்னை பாடகன் என்று நினைத்துவிட வேண்டாம் நான் இதற்கு முன்னாள் இருந்தது அபார்ட்மெண்டில் ்அங்கே ஒருவர் பாரதியார் பாடல்களை எப்போதும் பாடிக்கொண்டிருப்பார். பல இடங்கள் மாறினால்தானே நாலையும் தெரிந்து கற்றுக்கொள்ள முடியும்.
அவன் சென்றப்பின் அவள் முகத்தில் ஒருவரைப் பார்க்கும்போது மட்டுமே புன்னகை மலரும்.அவர் வேறு யாருமில்லை தபால்காரர்தான்.அவன் அவளுக்கும் அவன் அம்மாவிற்கும் என இரண்டு கடிதங்களை அனுப்புவான்.அதை அந்த படிக்கட்டில் அமர்ந்து அவள் படிக்கும்போது அவள் முகத்தில் நவரசத்தையும் பார்க்கலாம். இப்படி அவளை பார்த்துக்கொண்டே இருப்பதெல்லாம் ஒரு பொழப்பா? என்று நீங்கள் என்னை கேட்கலாம் ஒருமுறை அவளைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். நான் ஒன்றும் வேலையில்லாமல் ்அல்லது செய்யாமல் இல்லை. எனக்கும் என் குடும்பத்தைப் பார்த்துகொள்ளும் பொறுப்பும் என் எதிர்காலத் தேவைகளுக்கு சேமிக்கும் கடமையும் இருக்கிறது .
அவ்வப்போது அவள் அவனோடு அலைப்பேசியில் பேசுவது என் காதில் விழும். நானாக ஒட்டுகேட்பது கிடையாது என் காதில் தானாக விழுந்தால் அதற்கு நான் என்ன செய்வது? பெரும்பாலும் அவள் பேசமாட்டாள
ம்ம்ம என்று கேட்டுக்கொண்டிருப்பாள்.நானும் என் வேலையில் கொஞ்சம் பிஸியாகி விட்டேன் கொஞ்ச வாரங்களுக்குப் பின் அவளை பார்த்தப் போது ஏதோ ஒருவித மாற்றம் எனக்கு புரியவில்லை. அவள் கடிதம் எழுதுவாள் பாருங்க அடடா எழுத ,அடிக்க ,எழுத அடிக்க என்று அவள் ்அப்படி என்னதான் எழுத விரும்புகிறாள் என்று அவளுக்கே தெரியாது. கொஞ்ச நாளில் அவள் தோற்றமே மாறிப்போனது. முகம் வீங்கியது போலானது உடல் எடையும் அதிகமானது . எனக்கு முதலில் புரியவில்லைப் பின் புரிந்தது.எனக்கு இப்பவும் அவள் அழகிதான், அவள் மெதுவாக அசைந்து அசைந்து நடப்பது, குனியாமல் நின்றுக்கொண்டே வாசல் பெறுக்குவது என்ன ஒரே ஒரு குறை என்றால் பெரிய கோலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது ஒரு குட்டி நட்சத்திரமாக மாறியது. அதுவும் அழகுதான்!
அலைப்பேசியில் இப்பொழுதெல்லாம் புலம்பல்தான் அதிகம், உடல் உபாதைகள், மாமியார் பற்றிய புகார் மற்றும் விம்மல்தான் பெரும்பாலும். இப்படியே நாட்கள் ஓடியது அவளும் அவளது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள். எனக்கும் என் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் நான் என் வீட்டை மாற்றும் நேரமும் வந்தது. சுற்றி சுற்றி பல நாட்கள் அலைந்தேன். இடம் தேடியே பல வாரங்கள் ஓடியது ஆனால் அவள் நினைவு மனதில் இருந்துக்கொண்டிருந்தது. அவள் குழந்தை யாரைப்போலிருக்கும் அவள் குழந்தையை எப்படி அழகாக கொஞ்சுவாள்? உடல் மெலிந்தருப்பாளா? என பல கேள்விகள். ஒரு நாள் சென்றுதான் பார்ப்போமே என்று சென்றேன். அதுதான் நான் செய்த தவறு ஆம் அவளைப் பார்த்தேன் பார்க்க கூடாத கோலத்தில். மாமியார்ர் கிளவியின் வார்த்தை மட்டும் தூரத்திலிருக்கும் என் காதில் விழுந்தது “ பொறக்கும்போதே என் மவன முழுங்கிட்டான் உன்னோட மவன்” . என் இதயம் சுக்கு நூறாக உடைந்தது. சிட்டுக்குருவிகளின் இதயம் சிறியது என்றாலும் இதயம் இதயம்தானே!
– மதுநிகா பிரசாந்த் சுரேஷ்