நானும் அவரும்

   

ஏன் இவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. சில நாட்களாகவே சோர்வாக இருக்கிறார். இப்படி அவரை பார்ப்பதற்குச் சங்கடமாக இருக்கிறது. மனித வாழ்வில்தான் எத்தனை சவால்கள்! இருபது வருடங்கள் அவருடன் பயணிக்கிறேன். நான் வயதான பழைய தோற்றத்தைக் கொண்டாலும் அவர் அளவுக்குத் தளர்ந்து போகவில்லை. முன்பெல்லாம் அவருடன் அந்த பைக்கில் அலுவலகத்திற்குச் செல்வதே சுகம். மகிழ்ச்சியான நாட்கள் அது. கடைத்தெரு , சுற்றுலா, கோவில் என எங்கே சென்றாலும் நான் கூடவே செல்வேன். என்னை கையிலேயே பத்திரமாகப் பிடித்துக் கொள்வார். அவருக்கு மிக முக்கியமான காகிதங்களை என்னை நம்பி என்னிடம்தான் பத்திரப்படுத்துவார்.
ஒருமுறை பாப்பாவின் கல்லூரி கட்டணத்திற்காக ஆச்சி நகையைக் கொடுக்க அதை நடுங்கிய கைகளில் வாங்கி அதே நடுக்கத்துடன் என்னைத் திறந்து வைத்தார் பின் என்னை இறுக்கமாகப் பற்றி நெஞ்சோடு வைத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்யும்போதுதான் அவர் இதயம் படபடவென்று அடித்ததை உணர்ந்தேன். அது இன்றும் என்னால் மறக்க இயலாது. அதன்பின் ஒவ்வொரு முறையும் நகையை எடுத்துக்கொண்டு இருவரும் சேர்ந்து அவ்விடம் செல்வது வழக்கமாயிற்று.
சில வருடங்கள் கழித்து ஒருநாள் அலுவலகத்தில் அவருக்கு மாலை அணிவித்தார்கள். ஆரவாரமாக இருந்தது. ஆனால் மறுநாளிலிருந்து  நாங்கள் அலுவலகம் செல்லவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை… இருவருமே சோர்ந்து போனோம். ஒரு மாலை வேளையில் ஏழெட்டு பேர் வீட்டிற்கு வந்தனர். ஏதேதோ பேசினர். அதற்கு மறுநாளே ஐந்தாறு காகிதங்களை என்னுள் வைத்தார். இருவருமாக அதே பேருந்தில் சென்றோம். அந்த காகிதத்தை வீட்டுப் பத்திரம் என்று கூறி கொடுத்தார், பதிலுக்கு அவரிடம் கொடுக்கப்பட்ட பணத்தை என்னைத் திறந்து எனக்குத் திணறத் திணற அடுக்கினார். என்னைப் பண பாரமும் அவரை மனபாரமும் அழுத்தியது.
அடுத்த சில தினங்கள் மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் எனக்கு இருந்தது. சமையல்காரர், இசைக் கலைஞர்கள், மண்டபக்காரர், நகைக் கடைக்காரர் என்று பல மனிதர்களைச் சந்தித்தோம். ஒவ்வொருவரையும் சந்தித்தபின் எனது பணபாரம் குறையும் ஆனால் அவரின்மனபாரம்… என்ன சொல்வது? திருமணமும் முடிந்தது.
ஆச்சி நோட்டீஸ் வந்திருக்கு என்று ஒரு காகிதத்தை அவரிடம் கொடுத்தார். அதைப் படித்துவிட்டு என்னுள் வைத்தார். எனக்கு என்னவோ அந்த காகிதத்தைப்பிடிக்கவேயில்லை. அதைப் படித்தபின் அவர் முகம் சுருங்கியதை என்னால் பார்க்க முடியவில்லை. இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்….
                                                                                                                                              – மஞ்சப்பைReplyForward