நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா ………

காலை  நேரம் நெஞ்சே எழு! நெஞ்சே  எழு ! என்ற ஏ .ஆர்  ரஹ்மானின்  பாடலைக்  கேட்டுக்கொனண்டே  பாரதி  வழக்கம் போல சமையல் வேலையை  சுறுசுறுப்பாக  பார்த்துக்கொண்டிருந்தாள் .நல்ல வேளையாக  நான்கு அடுப்புகள்  இருக்கிறது  அமெரிக்காவில் இல்லையென்றால் என் பாடு திண்டாட்டம்தான் .வெளிநாட்டில் இருக்கிறாய் உனக்கு என்ன கவலை ?என்று கேட்பவர்கள் எல்லாம் இங்கு வந்து பார்த்தால்தானே  தெரியும்  என்று நினைத்துகொண்டே இஞ்சியையும்  ஏலக்காயயையும்  தட்டிப்  போட்டு  ஒரு  தேநீரைப்  போட்டு  குடித்துக்கொண் டே  சமையலறை சன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தால் .வீட்டின் முன்னே இருந்த போர்டிகோவில் இருந்த கூட்டில் தாய்ப்பறவை ஒன்று குஞ்சுப்பறவை வாயில் மண்புழுவை ஊட்டி கொண்டு இருந்தது.எல்லா தாய்மார்களுக்கும் இந்த சோறு ஊட்டும் வேலை மட்டும் தீராது.உனக்காவது எனக்கு இது பிடிக்கல அது வேணும் இது வேணும் என்று கேட்டு  அடம்  பிடிக்கும் பிள்ளை  இல்லை ,தப்பித்தாய்  என்று அந்தப்   பறவையைப்  பார்த்துப்  பொறாமைபட்டப் படியே   பள்ளிக்கும் ஆபிஸுக்கும்  சாப்பாட்டைக்  கட்டினால் .
       

பாரதி அமெரிக்கா வந்து ஐந்து வருடங்கள் ஆகிறது .இந்தியாவில் பேராசிரியையாகப்  பணியாற்றியவள் .கணவனின் வேலைக்  காரணமாக வேலையே விட்டுவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவில் ஒரு நல்ல இல்லத்தரசியாக குடும்பமே உலகமென இருப்பவள் .அருண் ஆபிஸ்க்கு  கிளம்பும்போது இன்றும் நேராக கிரௌண்டுக்கு போயிடு லேட்டாகதான்  வருவேன் என்று சொல்லிட்டு போனான் .பாரதி  சீக்கிரம் வந்தால் தானே அதிசயம் என்று முனகினாள் .அமெரிக்காவில் கொஞ்சம் குளிர் குறைந்தால் போதும் காரிலேயே  கிரிக்கெட் கிட்டை வைத்துக்கொண்டு ஆபீஸில்  இருந்து நேராக கிரௌண்டுக்குபோய் சின்ன பையன்களைப்  போல விளையாட ஆரம்பித்துவிடுவார்கள்  ஆண்கள் .இங்குள்ள பெண்களுக்கு வேற கார் ஓட்டத்  தெரியும் அதனால் கடைக்குப் போவது பிள்ளைகளை டியூஷன்  ,நடனம்,கராத்தே,என்று எல்லா கிளாசுக்கும்  அழைத்து போய்  வரும் வேலை  பெண்களுடையது .பாரதியும் இதிலிருந்து தப்பவில்லை . 

              அன்றும் வழக்கம் போல பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு  தான் வழக்கமாக செல்லும் நூலகத்திற்கு சென்றாள் .செல்லும் வழியெல்லாம் மரங்கள் எல்லாம்  பச்சை பசே ரென இருந்தது .ஐந்தாண்டுகளுக்கு  முன் பாரதி இதே  ஏப்ரல் மாதத்தில்தான் முதல்முறையாக இந்த நூலகத்திற்கு வந்தாள்  .நூலகத்திற்கு முன் இடதுபக்கம்  வெள்ளை  நிற மக்னோலியா  மரமும் வலதுப்புரம்  இளஞ்சிவப்பு   நிற  மக்னோலியா  மரமும் பூக்களால் நிறைந்து  நூலகத்தின் வாயில் படிக்கட்டுகள் முழுவதும் ஒரு பூக்கோலம்  போட்டது போல்  இருந்தது.அதைப்  பார்த்து நிறைந்த மனதுடன்  உள்ளெ சென்றதும் அறிவிப்பு பலகையில் சிறார்களுக்கான நிகழ்ச்சி அட்டவணையும் பெரியோர்களுக்கான நிகழ்ச்சி அட்டவணையும் அந்த வட்டாரத்தில் நடக்கும் உழவர் சந்தை காணமால்  போன  பூனைக்  குட்டியின் படம் என்று எல்லாம் நிறைந்து இருந்தது .பாரதிக்கு இது எல்லாம் புது அனுபவம். வெறிக்க வெறிக்க எல்லாத்தையும் பார்த்தாள் .பின்பு நேராக உள்ளே  சென்றாள் ,அங்கே தற்போது தோழியாகவே  ஆன  டோனியா  ரின்ஸ்  “May  I  help  you ?” என்று  கேட்டார் .ஒரு ஐம்பது வயது  இருக்கும் ,தலையில் இளமஞ்சள் நிற  டை  அடித்திருந்தார் .சதுர வடிவ மூக்குக்கண்ணாடி  பிரேம் ,சற்று குள்ளமான  தோற்றம் .நான்  நூலக அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறினால் பாரதி .டோனியா  கேட்ட விவரங்கள்  அனைத்தையும் வழங்கிவிட்டு  நூலகத்தை சுற்றிப்  பார்த்தாள் .பாரதி கல்லூரியில் கடைசியாக பார்த்தது நூலகத்தை . 


                 நூலகத்தின் கீழ்த்  தளத்தில்   சிறுவர்களுக்கான புத்தகங்களும் விளையாட்டு சாமான்களும் இருந்தது .அங்கு ஒரு அறைக்குள்ளிருந்து “The  Big  bad  wolf  huffed  and  puffed  the  straw  house ” என்ற  கதை  சொல்லும்  சத்தம்  கேட்டது .அதை கடந்து மேல்  தளத்திற்கு  வந்த போது  பெரியவர்களுக்கான  பத்திரிக்கைகள் அனைத்தும் நூலகத்தின்  இடப்பக்கத்தில் இருந்தது .இன்னொரு மூலையில் திரைப்பட   டிவிடிக்கள்  அடுக்கி  வைக்கப்பட்டிருந்தன .வலதுப்பக்கத்தில்  அறிவியல் ,பொருளாதாரம் ,சரித்திரம்,கணினி ,ரொமான்ஸ். கடைசியாக அயல்மொழி  என்று பிரிவுகள் இருந்தது.என் கண்கள் அந்த கடைசி அயல்மொழியில் நிலைத்தது .அருகில் சென்று பார்த்தேன் பாரசீகம் ,சீனமொழி ,ஸ்பானிஷ்,உருது  பின் தமிழ் ! ஆம் தமிழ் தான்.பாரதியின் கவிதை தொகுப்பு  பார்த்ததும்  பாலைவனத்தில் ஒரு நாள் முழுவதும் தொண்டைக்  காய்ந்து   நா வறண்டு  தண்ணீருக்காக அலைந்துக்  கடைசியில் ஒரு குளிர்ந்த நீர் ஊற்றைப் பார்த்தால்  எப்படி இருக்குமோ அப்படி இருந்தது .வரிசையாக  பதினைந்து முதல் இருபது புத்தகங்கள் .சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் ,ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்புக்கள் ,பாலகுமாரனின் உடையார் ,கல்கியின் அலையோசை  என்று அருமையான புத்தகங்கள்.அன்று ஆரம்பம் ஆனது பாரதிக்கும் அந்த நூலகத்திற்குமான பந்தம் .
                       அன்றிலிருந்து தினமும் சென்றால் நூலகத்திற்கு.நூலகம் ஒரு சின்ன பழைய கட்டிடம் என்றாலும் சுத்தமான சத்தம் இல்லாத அழகான நூலகம்.அதன் பின்புறத்தில் வட்ட மேசைகளும் நாற்காலிகளும் படிப்பதற்கான சூழலும் இருக்கும்.பாரதி போகும் போதே கையில் தேநீர் கொண்டு செல்லுவாள் .அதை சுவைத்துகொண்டே  படிப்பாள் .பாரதி அதுவரை கல்லூரி படித்த போதும் கல்லூரியில் வேலைப்  பார்த்தப் போதும்  நிறைய  ஆங்கில புத்தகங்களை படித்திருக்கிறாள்  அனால் அவை அனைத்தும் இந்தியர்கள் எழுதியது.அமிஷ் எழுதிய ஷிவா triology ,சுதா மூர்த்தி  அவர்கள் எழுதிய Three thousand stitches ,அப்துல்  கலாமின் wings of  fire  என்று சில நூல்கள் அனால் இது வரை ஒரு வெளிநாட்டவர் எழுதிய ஆங்கில நூலை படித்ததில்லை .படித்துதான் பார்க்கலாமே என்று யோசித்தால்.இப்பொழுதெல்லாம் குட் மோர்னிங் மட்டும் சொல்லி கொண்டிருந்த டோனியா  “You are  five  minutes  late “என்று கிண்டல் செய்யும் அளவிற்கு உறவு வளர்ந்துவிட்டது   ஒரு நூலைப் பரிந்துரை  செய்யும் படி கேட்கலாம் என்று முடிவு செய்தாள் .டோனியா “what  kind  of  book  ? thriller ,comedy or  romance ?என்று கேட்டார் .ரொமான்ஸ் என்ற பதில் வந்தவுடன் .”I  love  Nicolas  Sparks  books ,you  can  find  it  in the third rack “என்று கூறினார் .பாரதி விரைந்து சென்று அங்கு A  Walk to  Remember  என்ற புத்தகத்தை கையில் எடுத்தாள் .படிக்க ஆரம்பித்ததும் நேரத்தை மறந்தால் நல்ல வேளையாகப்   பிள்ளைகளைப்  பள்ளியிலிருந்து அழைத்து வரும் நேரம்  கடப்பதற்கு முன்  சுதாரித்தாள் .  

    அடுத்த சில நாட்கள் அந்தப்  புத்தகத்தின்  நட்போடு  சென்றது  .அவள் வாழ்வில் முதல்முறையாக பனிப்பொழிவை  அந்த நூலகத்தின் வாயிலில்தான் பார்த்தாள்  ஆம் அந்த புத்தகத்தை படித்து முடித்துவிட்டு கணத்த  இதயத்துடன் வெளியில் வரும்போது பனிப்பொழிவைத்  தலையை உயர்த்தி மேலே பார்த்தாள்  பனி முகத்தில் படர்ந்து அவளின் கண்ணீருடன் கலந்துக்  கரித்தது .இப்படி சில மறக்க முடியாத தருணங்களையும் ,அனுபவங்களையும் தந்த அந்த நூலகத்திற்குதான் சென்று கொண்டு இருக்கிறாள் .
     காரை நிறுத்திவிட்டு வழக்கம் போல உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தாள் .’Good morning   டோனியா “என்றாள் .டோனியா  கையிலிருந்த ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு இருந்தால் சற்று முகவாட்டத்துடன் .Bag  full  of  books for $4 என்ற அந்த அறிவிப்பு எல்லா இடத்திலும் ஒட்டப்பட்டிருந்தது .”மோர்னிங்  Bharathi ” என்று பதில் வந்தது .”அனைத்துப்  புத்தகங்களும் விற்பனைக்கா ஏன் ?”.”We  are  closing our  library “என்றார் டோனியா .ஒன்றும் புரியாமல்  “வேறு இடம் மாறுகிறதா ” என்று கேட்டதற்கு ‘Im  not  sure I  just  received  orders  to  sell  all  the  books “என்று கூறினார் .பாரதி இரண்டு பைகள் எடுத்து அங்குள்ள தமிழ் புத்தகங்களையும் நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்  புத்தகங்களையும் நிரப்பினால் .அதற்கான பணத்தை செலுத்திவிட்டு வீடு திரும்பினாள்.ஏதோ மனம் பாரமாய் இருந்தது.                  அடுத்த நாள் முதலில் நூலகத்திற்கு போய்  என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள  வேண்டும் என்று வழக்கத்திற்கு முன்னதாகவே சென்றாள் .அங்கு பரபரப்பாக மேசை நாற்காலிகள் எல்லாம் வண்டியில் ஏற்றப்பட்டது .கணினிகள் அட்டைப் பெட்டியில் வைத்து மூடி  ஒட்டிக்கொண்டிருந்தார் டோனியா .பாரதியை பார்த்ததும்.புன்முறுவல் ஒன்று வந்தது செயற்கையாக .என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா ?என்று பாரதி கவலையாக கேட்டதற்கு “We  are  running  out  of  fund  to run  this  library ,so  there  is  nothing  we  can  do “என்றார் .”can ‘t  we  do  fund  raising  event ?is  there  anything we  could do ?”என்று கூறும் போதே  பாரதியின் கண்கள் பளபளத்தது .டோனிங் தன்  கைகளுக்குள்  அவளது கைகளை வைத்து ஒரு இடம்,பொருள் அல்லது  மனிதர் உடனான பந்தம் தொடங்கும் போதே அந்த உறவின் முடியும் நேரமும் குறிக்கப்பட்டுவிடுகிறது .நான் இந்த நூலகத்தில் இருபது வருடங்களாக வேலைப் பார்க்கிறேன் .வாழ்க்கை என்பது இதையெல்லாம் கடந்து வருவதுதான்.”என்று கூறி தன மேசையில் உள்ள ஒரு எர்னஸ்ட்  ஹெம்மிங்  புத்தகத்தைப்   பரிசாக கொடுத்தார் .


 அடுத்த சில தினங்களில் அவ்வழியே சென்ற பொது டங் டங் என்று அந்த நூலகத்தை இடிக்கும் சத்தம் கேட்டது.கண்களை இறுக்கி மூடி கொண்டாள்  பாரதி.அவள் மனதில் நூலகத்தை இடித்தாலும் எரித்தாலும் அதிலிருந்து கிளம்பும் தீ பொறியானது பலநூறு எழுத்தாளர்களை  உருவாக்கி கொன்டே தான் இருக்கும்  என்ற அசரீரி  கேட்டது . வீடு திரும்பிய பாரதி அந்த பைகளில் இருந்த புத்தகத்தை ஒவ்வொன்றாக துடைத்து அலமாரியில் அடுக்கினாள் .அதிலிருந்த பாரதியின் புதுக்கவிதை நூல் அவளைப்  பார்த்து உன்னைச்  சரணடைந்தேன்  கண்ணம்மா  என்றது .

2 thoughts on “நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா ………”

  1. அருமையான கதை..
    படிப்பவரையே
    பாத்திரமாக மாற்றி
    பத்திரமாய் பயணிக்க வைத்தது
    உங்கள் கதை…
    வாழ்த்துகள் !!!

Comments are closed.