பேசாத கணிதமும் சூடான டீயும்

“ம்ம்ம் சரிங்க தம்பி ம்ம் “என்று போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை கொடியிலிருந்து எடுத்து கொண்டிருந்தார் கனிமொழி .போன் பேசி முடித்ததும் “ஏங்க வீட்டு ஓனர் தம்பிதான் பேசுச்சு வீட்டை வேற யாருக்கோ விற்கப்போறாங்களாம் அதனால நம்மள வேற வீடு பார்க்க சொல்லறாங்க “

“ம்ம்ம் “என்ற சத்தம் மட்டும் வந்தது பாலு ஸாரிடமிருந்து .ஆசிரியருக்கே உண்டான மூக்கு கண்ணாடி ,நரைத்த முடி ,கையில் திருத்தி கொண்டிருக்கும் பேப்பர் கட்டு .மொட்டை மாடியில் ஒரு குடில் ,டியூஷன் படிக்க வரும் மாணவர்களுக்காக பெஞ்சுகள் ,கரும்பலகை மற்றும் தண்ணீர் கேன் ஒரு மூலையில் .

“ஏங்க உங்கள்ட்டதானே பேசிட்டு இருக்கேன் “

“சொல்லுமா கேட்டுட்டுதானே இருக்கேன் “என்று சொல்லிக்கொண்டே மதிப்பெண்களை கூட்டி டோட்டல் போட்டுக்கொண்டு இருந்தார் .

“ம்ம்ச் நான்தான் உங்கள கெடுத்து வச்சுயிருக்கேன் .பால் பணம் ,ஈ.பி .பில் ,எல் .ஐ .சி பணம் கட்டுறது ,கட கனிக்கு போக வரதுனு எல்லா வேலையும் நானே பாத்து உங்களுக்கு இந்த ஸ்கூல் டியூசன் தவிர எதை பத்தியும் கவலை இல்லாம போச்சு .இப்டி உயிர கொடுத்து பாடம் சொல்லித்தறிங்க இந்த முப்பது வருஷமா ஆனா இன்னும் ஒரு சொந்த வீடு வாங்கல ,எப்டியோ போங்க “என்று வழக்கமான சுருதியில் காளியின் அபிநயம் பிடித்து விரல்களில் முத்திரை மட்டும் பிடிக்காமல் ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்தை செய்துவிட்டு போனார் கனிமொழி .

அவர் கீழே சென்ற ஐந்து நிமிடத்தில் தன மகள் சாரலிடம் சூடான இஞ்சி டீயை கணவருக்கு கொடுத்து அனுப்பினார் ,அதுதான் கனிமொழி .

“அப்பா! டீ “என்றவாறு மாடிக்கு வந்தால் சாரல் ,டீயை கொடுத்துவிட்டு கரும்பலகையை பார்த்தால் “என்னப்பா இன்னிக்கு trignometry யா “

“ஆமாம்மா இன்னும் பத்து நிமிஷத்துல பசங்க வந்துருவாங்க,உனக்கு வேல முடிஞ்சுருச்சா?” என்றார்

“இல்லப்பா அது முடியாது ஏதோ வீட்டுல இருந்து வேல பாக்கிறதுனால அம்மா கவனிப்புல தெம்பா பாக்குறேன் ”

எப்போதும் போல கண்ணையும் உதட்டையும் தாண்டாத சிரிப்பை சிரித்தார் பாலு சார் .

“இன்னிக்கு ஏழுமணிக்கு மேல பிரீயா அப்பா? “என்ற சாரலிடம் “பேப்பர் தான்மா திருத்தணும் வேற எதுவும் வேல இல்ல “என்றார் .

மாலை ஆறு மணி பேட்ச் மாணவர்கள் வகுப்பு முடிந்து மாடியிலிருந்து திபு திபுவென்று இறங்கி அவரவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றபடி இருந்தனர் ,அப்போது தன்னுடைய பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் அந்த மானவர்களேயே பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி.

மாடியிலிருந்து இறங்கிவந்து கேட்டை பூட்டுவதற்காக பாலு சார் வந்தபோது “வணக்கம் சார் ‘என்று ஹரி சொன்னதும் ,”யாரு அட ஹரியா “?என்று மூக்குக்கண்ணாடி வழியாக உற்று பார்த்தார் பாலு சார் .

“ஆமா சார் ,எப்படி இருக்கீங்க ?”

“உள்ள வாப்பா, நான் நல்லா இருக்கேன் ,நீ மெட்ராஸ்ல வேல பாக்குறதானே ?”

“ஆமாம் சார் ,இப்ப இங்க வீட்ல இருந்துதான் வேலை “

“சரி வா மாடிக்கு போலாம் “

மாடிக்கு சென்றான் எதுவும் மாறவில்லை அதே கொட்டகை ,பெஞ்சுகள்,chalk பீஸ் வாசம் ,சாரின் சட்டையிலும் அந்த துகள்கள் .”ம்ம் சொல்லுப்பா என்ன திடீர்னு இந்தப் பக்கம் “

ஹரி சுற்றி சுற்றி அந்த குடிலையே பார்த்துக்கொண்டிருந்தான் “ம்ம்ம் சார் நாம கீழ போய் பேசலாமா ?எனக்கு இங்க பேச comfortable ஆ இல்ல “

“சரி வா “என்று கீழ வேப்ப மரத்தடியில் இரண்டு நாற்காலிகளை போட்டு “சொல்லு “என்றார் .

“சார் நான் சாரல விரும்புறேன் “என்றான் அவர் முகத்தை தயங்கி தயங்கி பார்த்தபடி “சத்தியமா நான் உங்கள்ட்ட டியூஷன் படிச்சப்ப உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்குனு கூட தெரியாது ,எனக்கு காலேஜ்லதான் பழக்கம் ,நான்மேத்ஸ்ல பாஸ் ஆவேனானு இருந்தேன் உங்கனாலதான் தொன்னூறு மார்க் எடுத்து நல்ல காலேஜ் இந்த வேல எல்லாம் “

ஒரு இரண்டு நிமிட அமைதி .பாலு சார் முகத்தில் எந்த உணர்வும் காண முடியவில்லை ,ஒரு கோபமோ,அதிர்ச்சியோ,வெறுப்போ ,ஏமாற்றமோ இல்லை .”என்ன ரொம்ப உயர்ந்த இடத்துல வைக்குற அளவுக்கு நான் ஒன்னும் செய்யல ,எனக்கு கணிதம் பிடிக்கும் அதைவிட நான் நேசிச்சத தவற விட்டதாலதான் என்னையவே நான் மறக்குற அளவுக்கு இந்த சாக் பீஸோட கரைஞ்சு போக பாக்குறேன் “என்றார் .அந்த இருட்டிலும் அவர் கண்கள் பளபளத்ததை ஹரி கண்டான் .

“உங்க வீட்ல பேசிட்டயா “

“உங்க பொண்ணுன்னு சொன்னா ஒத்துக்குவாங்க அப்டினு நம்பிக்கை இருக்கு சார் “

அவருடைய ஸ்டைல் மில்லிமீட்டர் புன்னகை “எனக்கு சம்மதம் என்னோட மிஸஸ் கன்வின்ஸ் பண்றது சிரமம் நான் பாத்துக்குறேன் ,வீட்ல பேசிட்டு சொல்லு மேல பாப்போம் “

“அப்ப வரேன் சார் “என்று சொல்லிவிட்டு வீடு திரும்பிய ஹரியின் போன் சிணுங்கியது “என்னாச்சு அப்பா என்ன சொன்னாங்க “என்று சாரல் படபடத்தால்

“எல்லாம் ok “

“நிஜமாவா ,எங்க அப்பா கோபப்படுலயா ?வருத்தப்பட்டங்களா ?உன்ன ஒன்னும் திட்டுலயா “

“நீயே ஒரு உருட்டு கட்டையா கொடுத்து அடிக்க சொல்லுவ போல .. எங்க சார் எப்பவும் அதிர்ந்து கூட பேசமாட்டார் ,எங்க ஸ்கூலேயே நாங்க மதிக்கிற ஒரே சார் பாலு சார் தான் ,எனக்குதான் மாடி பெஞ்ச பாத்ததும் பேச்சு வரல அவர் பாடம் எடுத்தது தான் நினைப்புக்கு வந்தது “

“சரி எங்கப்பா என்னதான் சொன்னாங்க ?”

“அதெல்லாம் ஜென்டில்மேன் டாக் சொல்ல முடியாது “

“சரி விடு சொல்ல கூடாதுனு முடிவு பண்ணிட்ட ,எனக்கு ஒரு டவுட் ,உனக்கு பாலு சார் பொண்ணுங்கறதுக்காகத்தான் என்ன பிடிச்சுயிருக்கா ?”

“உண்மைய சொன்ன வருத்தப்படுவ போய் தூங்கிரு “என்று போனை வைத்தவனுக்கு அவனது ஆசானின் பளபளத்த கண்கள் மனதை பாரமாக்கியது .

இருவீட்டாரின் சம்மதத்தோடு கல்யாண வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது .பாலு சாரும் அந்த வருடத்தோடு பணி ஓய்வு பெறுகிறார் .ஹரி தன நண்பர்கள் தன்னுடைய திருமணத்திற்கு வரும்போது அவர்களுடன் சேர்ந்து ஒரு விருந்தை தன ஆசானுக்காக கொடுக்க திட்டமிட்டான் .அவருக்கு பரிசுப்பொருள் வாங்குவதற்காக அவருக்கு என்ன பிடிக்கும் என்று சாரலிடம் கேட்ட போது

“எல்லாரும் வர போற மனைவிக்கு கிப்ட் வாங்குவாங்க நீ மட்டும்தான் மாமனாருக்கு வாங்குற,நிஜமாவே எனக்கு அப்பாக்கு என்ன பிடிக்கும்னு தெரில .அவர் இது வரைக்கும் இந்த சாப்பாடு பிடிக்கும் ,இது வாங்கணும்,இந்த கலர் ஷர்ட் எடுக்கணும் அப்டினு சொன்னதோ வாங்குனதோ இல்ல “

“சரி விடு நானே ஏதாவது யோசிக்கிறேன் “

திருமண நாளும் வந்தது ,மண்டபம் முழுவதும் பாலு சார் விதைத்த விதைகள் விருட்சங்களாக குடும்பத்தோடு குழுமியிருந்தார்கள் .கனிமொழிக்கு தன்னுடைய கணவரை நினைத்து பெருமை தாங்கவில்லை ஒவ்வொரு மாணவரும் வந்து தங்களுடைய ஆசிரியரிடம் தங்கள் குடும்பத்தை அறிமுகம் செய்து ஆசி பெறும்போது .மனுஷன் மாடியிலேயே கிடந்தாரே என்று தான் அடிக்கடி சண்டையிட்டதை நினைத்து வருந்தினார் .

திருமணமும் முடிந்தது, மறுநாள் மணமக்கள் மறுவீடு விருந்துக்கு வந்தபோது ஹரி தன்னுடைய நண்பர்களுடன் திட்டமிட்டபடி பரிசுபொருளுடன் ஒரு சின்ன விருந்தை பாலு சாருக்கு ஏற்பாடு செய்திருந்தான் .எல்லாம் சிரிப்பும் அரட்டையும் கொஞ்சம் உணர்வுபூர்வமான உரையுடனும் இனிதே முடிந்ததும் ,எல்லோரும் கிளம்பினர் ,கனிமொழி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார் அவருக்கு சாரல் உதவினாள் .மாடியிலிருந்து பாலு சார் மருமகனோடு கீழே இறங்கிவந்தார் .அறைக்குள் சென்று ஒரு வெள்ளை தாளோடு சோபாவில் அமர்ந்து கனி மற்றும் சாரலை அழைத்தார் ,ஹரியும் இருந்தான் .

அனைவரும் அவரை பார்த்தனர் “கனி இங்க வா “என்றழைத்து அந்த காகித்தை அவரிடம் கொடுத்தார்.அமைதியாக அதை பார்த்துக்கொண்டிருந்தவரிடம் “என்னம்மா அது ?”என்று சாரல் வாங்கிப்பார்த்தாள்

“என்னாப்பா உங்களுக்கு என் மேல கோபம்னா எனக்கு தானே தண்டனை கொடுக்கணும் அம்மாக்கு எதுக்கு ?”என்று தொண்டை அடைத்தது சாரலுக்கு

“கொஞ்ச நாள் அப்பா அப்பாவுக்காக மட்டும் வாழனும் டா ,எனக்கு யாரு மேலயும் கோபமோ வருத்தமோ இல்ல,உங்க அம்மாவை விட என்ன யாருனாலயும் நல்ல பாத்துக்க முடியாது “

கனிமொழி அமைதியாக கையெழுத்து போட்டு கொடுத்தார் ,அவரது முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லை ,அடுக்களைக்குள் நுழைந்து சூடான இஞ்சி டீயை போட்டு சாரல் வந்து அப்பாவுக்கு டீயை எடுத்துட்டு போ என்றார் .