பேசும் பொற்சித்திரமே ……..

“இந்த இடத்தோட மகத்துவம் இப்ப உள்ளவங்களுக்குத்  தெரியாது .பிரமிட்டைப்  பார்க்காமலேயே அதன் சிறப்பைப் பற்றி பேசும் மக்களுக்குக்  கண் முன்னே இருக்கும்  உன்னதமான விஷயங்களைப்  பற்றி தெரிவதில்லை” என்று சலித்துக் கொண்டே சொன்னார் சிவசுப்ரமணியம்.

“சரி அப்படினா நீங்களே இந்த இடத்தைப் பற்றிச் சொல்லுங்க?” என்றான் டிரைவர் கணேசன்.

“இந்த இடத்திலதான்  பஞ்சவன்மாதவியின்  சமாதி இருக்கு  அது மேலதான் அந்த லிங்கம் பிரதிஷ்டைச் செய்யப்பட்டிற்கு. பள்ளிப்படைக்  கோவிலில்  இறந்தவர்களுக்கு எல்லா அபிஷேகங்களும் செய்து அவர்களுக்கு உணவுப் படைக்கப்பட்டுப் பின் அடக்கம் செய்து அவர்களின் தலைக்கு மேல் லிங்கத்தைப்  பிரதிஷ்டைச் செய்வார்கள்” என்றார் சிவசு என்று அழைக்கப்படும் சிவசுப்பிரமணியன் .

“பஞ்சவன்மாதவி யார் ?”

“பஞ்சவன்மாதவி  ராஜேந்திர சோழனின் சிற்றன்னை .ராஜா ராஜா  சோழனின் மனைவி. அவர் பழுவேட்டரையர்  குடும்பத்தைச் சேர்ந்தப்  பெண்”

“அய்யா  எனக்கு இந்த ஊர்ப்  பக்கம்தான்  ஆனா எனக்கு இவ்வளவு  நாளா  இப்படி ஒரு கோவில் இருப்பதே  தெரியாது. இந்த லிங்கம் கொஞ்சம் வித்யாசமா  தெரியுதுல” என்றான்  கணேசன்.

“ஆமா, அது அவர்கள் வந்த வம்சத்தின் அடையாளம். அது மட்டும் இல்ல இந்த மாதிரியான பள்ளிப்படைக்  கோவில்களைப்  பராமரிக்கும்  வேலைகளை சிவனடியார்கள்  செய்வார்கள்” என்றார் சிவசு 

“அய்யா  நீங்க ஓய்வு பெற்றப்  பிறகும் இந்த மாதிரி இந்த கோவில் சீரமைப்புப் பணில்லாம் ஏன் செயிரிங்க?”

“கணேசா  எல்லாத்தையும் அரசாங்கம்தான் செய்யணும்  ஆனா அதுக்காகக்  காத்துட்டுக்   கண் முன்னாடி மகத்துவமான நம் பாரம்பரியத்தைப் பறைசாற்றும்  இடங்கள் சிதைந்துப்  போவதைப்  பாத்துட்டு  இருக்க முடியாது “

“பட்டிஸ்வரத்திலேயே இருக்குற எத்தனைப் பேருக்கு இந்த இடத்தோட வரலாறு தெரியும். யாருமே முதல வரலாற்று சிறப்புகளைத்  தெரிந்துக் கொள்வது  கிடையாது ” என்ற சிவசுப்பிரமணியன்  அழகப்பா   பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப்  பேராசிரியராகப்   பணியாற்றுகிறார் .அதற்கு முன் கடல் தொல்லியல்(marine  archaelogy  and  maritime ) ஆராய்ச்சியாளராகப்   பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கல்வெட்டுகள் படிக்கும் சிறப்பு வகுப்புகள் எடுப்பது மற்றும் இன்றும் இந்திய முழுக்க எங்கு அகழ்வாராய்ச்சி நடைபெற்றாலும் இவரைத்தான் அழைப்பார்கள்.

இப்போது வீடு திரும்பிக் கொண்டிருந்தப்  போது  சிவசு கணேசனை டீக்கடையில் நிறுத்த சொன்னார். அந்தக்கடையில் இராணுவ வீரனின் கண்ணீர் அஞ்சலி ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது .இரண்டு டீயை சொல்லிவிட்டுக் காத்திருந்தனர். “கணேசா இந்த தேசப்பக்திங்கறது  நம்ம இரத்தத்திலேயே ஊறிப்போன ஒன்னுடா. மன்னர் காலத்திலேயே நவகண்டம் கொடுக்க இளைஞர்கள்  நான் நீன்னு போட்டிப்  போட்டுக்கொண்டு முன்வந்தாங்க “

“நவகண்டம்னா ?”

“அப்படினா  போர்ல வெற்றிப் பெற வேணும்னுத்   தன்னோட உடலில் உள்ள ஒன்பது பாகங்களையும் வெட்டிப்   பலி   கொடுப்பது. சில நேரங்களில் அரசன் நோய்வாய்ப்பட்டால்  கூட அப்படிக்  கொடுப்பாங்க. அப்படித்  தன்னை மாய்த்துக் கொள்பவர்களுக்கு நடுக்கல் வைப்பாங்க”

“அய்யா நீங்க பேச ஆரம்பிச்சிங்கனா  எல்லாத்தையும் மறந்துடுவீங்க  முதல டீய குடிங்க”  என்றான்  கணேசன் ஆனால் உண்மையில் வாயைப் பிளந்துகொண்டு டீயைக்  குடிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தது அவன்தான். அந்த டீயைக் குடிக்க முடியாமல் அவர் குடித்ததைப் பார்த்தான் கணேசன்.

“நானும் ரொம்ப நாளா  உங்கள்ட்ட  சொல்லணும்னு நினச்சேன் உங்கள்ட்ட  எல்லா எழுத்தாளரும் சேதியைச்   சேகரிச்சுப்  பொஸ்தகம் எழுதிப்  பெரிய  ஆளாகிடுறாங்க  நீங்களே பேசாம எழுதிடலாம்ல “

“டேய் உண்மை சம்பவங்களையும் மசாலாக் கலந்து சொன்னாதான்  மக்கள் படிப்பாங்க அது நம்ம ஏரியா கிடையாது “

வீடு திரும்பியவர்களைக் கோபமாகப்  பார்த்துவிட்டுக் காபியுடன் வந்த மீனாட்சி அம்மாள்  காரைத் துடைத்துக்கொண்டு இருந்த கணேசனிடம்  காபியைக்கொடுத்துவிட்டு  “ஏன்டா ஞாயற்றுக்கிழமைக்கூட  நீயும் உங்க ஐயாவும் எங்கடா ஓடி ஓடிப் போறிங்க ” என்றார் 

“அறிவாளிகளுக்கு ஆயிரம் வேல வெளிய இருக்கும்மா ” என்று  நக்கலடித்தான் உரிமையுடன்.” வர வர உங்க  ஐயாவோட சேர்ந்து வாய் பெருசாப் போச்சு” என்று வெடுக்கென்று உள்ளேப்  போகத் திரும்பியவிரிடம்  “அம்மா இனிமே ஐயாவுக்கு ஒரு பிளாஸ்க்ல  டீயாவது காப்பியாவது போட்டு குடுங்கப்  பாவம் கட டீயக்  குடிக்க முடியாம கஷ்டப்படுறாங்க “என்ற குரல்  கேட்டதும்” ம்ம்க்கும்…  இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை நீயும் உங்க ஐயாவும் ” என்று பொய் முறைப்புடன் சென்றார் .

மீனாட்சி அம்மாளுக்கு சிவசு கொஞ்சமும் அவளுக்கென்று நேரம் ஒதுக்குவது இல்லை என்றக் கவலை. ஆனாலும் அவரைப்  பார்க்க மாணவர்களும் எழுத்தாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் வந்து காத்துக் கிடப்பதைப்  பார்க்கப் பெருமையாக இருக்கும் மீனாட்சி அம்மாளுக்கு .அவர்களுக்கு ஒரே ஒரு பையன் கேன்சர்  பற்றிய ஆராய்ச்சி படிப்பிற்காக இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில்   இருக்கிறான்.

கார் இப்போது   கும்பகோணத்திலிருந்து ஆறு  கிலோமீட்டர்  தொலைவில் உள்ளப்  பழையாறைக்குச்  செல்கிறது .கணேசனுக்கு இந்த இடங்கள் அனைத்தும் புதிது .தினம் தினம் ஒரு  புதிய இடத்தைப்  பார்க்கும் அனுபவம்  அவனுக்குப்  புத்துணர்வைக்  கொடுக்கிறது .”ஐயா இந்தப்  இடத்தோட சிறப்பப்  பத்தி  சொல்லுங்க “

“இதுக்  குந்தவைப் பிராட்டி  வாழ்ந்த இடம்.ஆதித்திய சோழன் தன்னுடைய  திருப்புறம்பியம் போர் வெற்றிக்கு பின் கட்டிய  கோவில்” 

“நீங்க ஒரு சிறந்த கதைசொல்லி ஐயா “

“இன்னும் போக வேண்டிய இடம் நிறைய இருக்கு.என் நண்பனுக்கு கொஞ்சம் விவரமும்  போட்டோவும் எடுத்து அனுப்பனும் ” என்று சொல்லிக்கொண்டேப்   படம் பிடித்தார் .

“அடுத்து எங்க ?”

“சொல்றேன் வா.அதுக்கு முன்னாடி போய் சாப்பிடலாம் “.ஒரு கடையில்  சாப்பிட்டுவிட்டு   பணம் செலுத்தும் போது  “ஐயா GST   வரி வந்ததும் வந்தது சாப்பாட்டு விலைய  கேட்டாலே வயிறு நிரஞ்சுபோது  அரசாங்கம் கொள்ளையடிக்குது ஐயா .கிம்பளம் வாங்குறவன்தான்  குடும்பம் நடத்த முடியும் “

“எப்பயும் நேரா யோசிக்கணும் இப்படி யோசனையைத்  தப்பா அலைய விடக்கூடாது . நல்ல  அரசர்கள் ஆண்ட நாடு இது.இறந்த குழந்தைக்கு கூட நீதி வாங்கி தந்த நாடு .நீ சொன்னியே கிம்பளம் அத  வாங்குனவனுக்கு என்னத் தண்டனை தெரியுமா ?அவனை மட்டும் வேலய  விட்டு தூக்கல  அவனோட  இரத்தப் பந்தம் உள்ளவர்கள் மற்றும் அவன் எதிர்கால சந்ததியினர் யாருமே அரசாங்க உத்யோகம் பார்க்க முடியாது “என்றார் .

“அப்படிப்போடு பேசாம மன்னராட்சியே  இருந்திருக்கலாம் “.சரி வழிய சொல்லுங்க எந்தப்  பக்கம் போனும் ?”

“தஞ்சாவூர் போ..அங்க நிசும்ப சூதனி கோவில் போறோம் கிழக்கு வீதியில இருக்கு .இதை விஜயாலய சோழன் கட்டுனான். அவர்தான்  பல்லவர்களைப்  போரில் தோற்கடித்து தஞ்சையைக் கைப்பற்றி  சோழர்கள் மீண்டும்  ஆட்சிக்கு வந்துப்  பரந்து விரிந்துப்   புகழ் ஓங்கச்  செய்தது .அந்த வெற்றிக்குப்   பின் நிசும்ப சூதனிக்காக இந்தக்  கோவிலை எழுப்பினார் .”

அன்று இரவு வீட்டுக்கு திரும்பியப் போது ரொம்பவும் களைப்பாக இருந்தார் .கணேசன் கார் சாவியைக்  கொடுக்கும்போது “கணேசா  வீட்ல நார்த்தங்கா  காச்சிருக்கா “என்றார் சிவசு.

“இப்பதான் பிஞ்சு விட்ருக்கு  பெருசானதும் கொண்டாறேன் உங்களுக்கு நார்த்தாங்க ஊறுகாய் பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா?  ஐயா ” என்றான் 

“சரி நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வாடா ” மறுநாள் கணேசன் தெருவுக்குள் நுழையும்போதே  வீட்டின் முன்னாள் ஒரே கூட்டம் .கூட்டத்தைக் கடந்து வந்து பார்த்தான் பேசும் நூலகம் ஒன்று சொற்கள் இல்லாத புத்தகத்தைப் போன்று கூடத்தின் நடுவே கிடத்திவைக்கப் பட்டிருந்தது .கனவா  நினைவா  என்று உணருவதற்கும் நேரமில்லை வேலைகள் நிறையக் கொடுக்கப்பட்டது .ஓடி ஓடி வேலை செய்தான் .

கொஞ்ச நாள்கள் சென்றது  ஒரு நாள் மீனாட்சி அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது “நல்லா இருக்கீங்களாம்மா ? “

“இருக்கேன்டா சரி  நாளைக்கு கொஞ்சம் வாயேன்  தஞ்சாவூர் வரைக்கும் போனும் “என்றார்.

கணேசன் காரை ஓட்ட  ஒரு நிசப்தத்தில் பயணம் போய்க்  கொண்டிருந்தது. மௌனத்தைக் களைக்க  கணேசன் “அம்மா தினம் தினம் ஏன்டா சார் பேசுறதே ரெகார்ட் பண்ண்ணமா  விட்டோம்னு நொந்துகிறேன்  ராஜன் தம்பி வெளிநாட்ல இருந்து வந்தவுடனே சார் சொல்ற கதையை யூடியூப்ல  போட சொல்லணும் நினைச்சுட்டு இருந்தேன்  ஐயா ஒரு பேசும் நூலகம் அம்மா “என்றான் 

பெரிய கோவிலுக்குள் நுழைந்ததும் மீனாட்சி அம்மாவிற்கு  நெஞ்சு படபடத்தது திருமணம் ஆனா புதிதில் முதன்முறையாக இருவரும் இங்குதான் வந்தார்கள். இந்த கோவில்தான்  அவரைக்  கல்வெட்டுகளைப்  படிக்க தூண்டியது என்று அவர் அன்று சொன்னது காதில் ஒலித்தது. நடந்து  சென்று  தக்ஷிணாமூர்த்தி கோவில் அருகில் உள்ள ஒரு கல்வெட்டை அப்படியே தடவினார் உதடுகள் துடித்தது கண்கள் குளமாயின . கருவூரார் மண்டபத்தில் சென்று அமர்ந்தார் .கணேசன் பையிலிருந்து  தண்ணி  பாட்டிலை  எடுத்து நீட்டினான் .”அம்மா இந்த கோவிலுக்கும் நம்ம ஐயாவிற்கும்  ஒரு ஒற்றுமை இருக்கு  தெரியுமா ? இந்த கோவில் ஒரு பேசாத நூலகம் நம்ம  ஐயா ஒரு பேசும் நூலகம் “என்றான் 

மதுநிகா சுரேஷ்

2 thoughts on “பேசும் பொற்சித்திரமே ……..”

  1. பாலகுமாரன் எழுதிய கங்கை கொண்ட சோழபுரம் இப்போது மூன்றாம் பாகம் படித்து வருகிறேன். உங்கள் கதையைப் படித்தவுடன் ஏதோ அதைப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை வாசிப்பது போன்ற உணர்வு. அதிகம் கொடுக்காமல் அளவாகக் கொடுத்த சோழ வரலாறும், கதையின் நாயகனையும் இடங்களையும் கருவாக்கி, காரோட்டியை பாலமாக்கி கட்டிய பலமான நூலகம்..வாழ்த்துகள் !!!!

  2. அருமையான வரிகள்…
    “பேசும் நூலகம் ஒன்று சொற்கள் இல்லாத புத்தகத்தைப் போன்று கூடத்தின் நடுவே கிடத்திவைக்கப் பட்டிருந்தது”
    👌👍

Comments are closed.