என் அம்மா ….

என்னுடைய முதல் படைப்பு என் அம்மாவை பற்றியதாக இருக்க வேண்டும் என்ன விரும்புறேன்.இதை சிறுகதை என்று சொல்வதா இல்லை கட்டுரை என்று சொல்வதா என்று தெரியவில்லை .என் எண்ணங்கள் அவ்வளவுதான்.

வீட்டில் இருக்கும்போதுகூட பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு இருக்கும் தொலைக்காட்சி தொடரில் வரும் அம்மா இல்லை என் அம்மா .நான் பல புடவைகள் வாங்கி கொடுத்தாலும் மஞ்சள்,பச்சை மற்றும் சிவப்பு என மூன்று காட்டன் புடவைகளை மட்டும் மாற்றி மாற்றி கட்டும் சாதாரண அம்மா. என் அம்மாவின் புடவைகள் நிறம் வெளுத்தாலும் அது அழகாக துவைத்து காண்பவர்கள் கண்ணை உறுத்தும் சமிக்கி வேலைப்பாடுகள் இல்லாத மசாலா மற்றும் மஞ்சள் வாசனை உடைய ,இட்லி மாவு திட்டு திட்டாக ஒட்டி என் மனதை விட்டு அகலாத நினைவுகளை உடைய புடவை .

ஊரில் உள்ள அனைவரும் நான் உடல் எடை குறைக்க வேண்டும் என்று சொன்னாலும் என் அம்மாவின் கண்களுக்கு மட்டும் மெலிந்துதான் தெரிகிறேன் .எனக்கு சட்னியும் சாம்பாரையும் ஊற்றி ஊற்றி பரிமாறிவிட்டு வெறும் இட்லியை சாப்பிடும் என் அம்மா .உங்களுக்கு என்ன வேண்டும் என்று எத்தனை முறை கேட்டாலும் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லும் உலகத்தில் உள்ள ஒரே நபர் என் அம்மா தான்.

திருமணத்திற்கு முன் கண்டிப்பாக இருந்த என் அம்மா திருமணத்திற்கு பின் முற்றும் மாறிப்போனார் .நான் அமெரிக்கா வந்தபின் எங்கே அவருக்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்குமா என்று பயந்தேன் அனால் நான் எதிர்பார்க்காதது நடந்தது.இந்த பத்து வருடங்களில் நாங்கள் தோழிகளாகவே மாறினோம்.தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பேசுவோம்.தொலைபேசியில் முதல் வார்த்தை அவரிடம் இருந்து உற்சாகமாகவே இருக்க வேண்டும் என்று வேண்டுவேன் .அதன் பின் உடல்நல விசாரிப்பு நடக்கும்.

என் அம்மாவிற்கு எதை பற்றி பேச பிடிக்கும் என்றல் அவர் வார்க்கும் தோட்டம்தான் .நான் தினமும் கண்டிப்பாக அதை பற்றி விசாரிப்பேன்.இன்று ரோஜா பூத்ததா ,சீத்தாப்பழம் காய்த்ததா ,மாம்பழம் இனித்ததா ,கொய்யாவை அணில் விட்டு வைத்ததா என்று விசாரிப்பேன் .அதை பற்றி பேசும்போது புன்முறுவலுடன் என் அம்மா பேசுவதை என்னால் உணரமுடியும் .தினமும் ஒரு பூனை குடும்பத்திற்கு பால் மட்டும் சோறுபோட்டு அம்மா வளர்த்தார்.நான் அம்மாவிடம்பேசும் பொது அதுவும் எனக்கு மியாவ் என்று ஹலோ சொல்லும்.சில சமயங்களில்அந்த குட்டிகள் செத்த எலியை தூக்கிக் கொண்டு வந்து என் அம்மாவின் கோபத்திற்கு ஆளானது .அம்மா பூனையைப்போல் குட்டிகள் நல்ல பழக்கத்துடன் இல்லை என்று சொன்ன பொது அந்தப்பூனைக்கு உங்களைப் போன்று குட்டிகளை ஒழுங்காக வளர்த்த சொல்லிக் கொடுங்கள் என்றேன் .என் அம்மாவின் முகம் மலர்ந்ததை தொலைபேசியிலேயே முடிந்தது .

எனக்கும் என் அம்மாவிற்குமான உரையாடலில் புத்தகங்களை பற்றய உரையாடல் கண்டிப்பாக இருக்கும்.நான் வாசிக்கும் புத்தகங்களை பற்றி கண்டிப்பாக பகிர்வேன்.அதையெல்லாம் புரிந்துகொண்டு அவருடைய சிந்தனைகளையும்பகிர்வார்.அரசியல்,மனிதமாண்பு,மருத்துவம்,மனோதத்துவம் ,இக்கால கல்விமுறை ,வேதாந்தம் மற்றும் கலை என்று நாங்கள் பேச பேச நேரம் செல்வதே தெரியாது.

சமையல் குறிப்பிற்கு மட்டும் தினம் 20 நிமிடங்கள் வேண்டும் .ரசப்பொடி,இட்லிப்பொடி,கஷாயம்,பலகாரம் என்று போய்க்கொண்டே இருக்கும் .என் அம்மா இன்னும் பல பிள்ளைகளை பெற்றிருக்கலாம்.உலகிற்கு பல நல்ல மாந்தர்கள் கிடைத்திருப்பார்கள்.

நல்ல மனிதர்களை உருவாக்குவதில் என் அம்மா வல்லவர் ஏன் என்றால் வெறும் வாய்மொழியில் மட்டும் சொல்லி வளர்க்க முடியாது வாழ்ந்துக் காட்ட வேண்டும்.நான் அவருடன் தினமும் பேசும் அந்த 45 நிமிடங்கள் என் வாழ்வில் என்றென்றும் தொடர வேண்டும்.பரிசுப் பொருள் கொடுத்து சந்தோஷப்படுத்த முடியாது என் அம்மாவை கொடுத்தாலும் அதனோடு அவர் சேர்த்து பத்திரமாக வைத்த பத்திரத்தையும் எனக்கு கொடுக்கும் தெய்வம் அவர்……