நான் அதிகம் சுற்றுலா சென்றதில்லை.நினைவு தெரிந்த நாள் முதல் நான் அடிக்கடி சென்ற ஒரே இடம் என் அம்மாச்சியின் ஊர் மட்டுமே .எத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஊர் அதுதான் பண்ணைக்காடு .கொடைக்கானலில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள ஊர் .
என் அம்மா எனக்கு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வந்ததும் என் அம்மாச்சிக்குக் கடிதம் எழுதி விடுவார் .தேர்வு எப்போது முடிகிறது எப்போது நாங்கள் கிளம்பி வருகிறோம் என்று செய்தி அனுப்பிவிடுவார் .நானும் என் அண்ணனும் பரீட்சை பதற்றத்தில் இருக்கும்போது என் அம்மா மட்டும் குதூகலமாக பலகாரங்கள் செய்துக் கொண்டு இருப்பார் .ஒரு சிறையில் இருந்து விடுதலை ஆகும் கைதியின் மகிழ்ச்சியை என் அம்மாவின் முகத்தில் பார்க்கலாம் .இனிப்பும்,வடகமும்.ஊறுகாய்களும் பையை நிறைத்துக்கொண்டு இருக்கும்.
தேர்வு முடிந்த அடுத்த நாள் காலை 6 மணிக்கு என் அப்பா எங்களை திருச்சிப் பேருந்தில் ஏற்றிவிடுவார் ,பின் அங்கிருந்து திண்டுக்கல் பேருந்தில் ஏறுவோம்.வெயிலில் காய்ந்து கருவாடாகி பொறுமையை இழந்த நிலையில் நானும் என் அண்ணனும் இருப்போம் அனால் என்றும் இல்லாமல் அன்று மட்டும் என் அம்மா சாந்த சொரூபிணியாய் காட்சி அளிப்பார்.ஒரு வழியாக திண்டுக்கலில் இருந்து பண்ணைக்காடு பேருந்து ஏறுவோம் .பண்ணைக்காட்டிற்கு மொத்தமே நான்கு பேருந்துகள் தான் .மாலைக்கு மேல் பேருந்து கிடையாது .
பண்ணைக்காடு பேருந்தில் இடம்பிடிக்கத் தனித்திறமை வேண்டும். பேருந்தில் காய்கறி மூட்டைகளும் ,கோழிகள் நிறைந்தக் கூடைகளும் மற்றும் வாழைத்தார்களும் அப்பப்பா ஒரே வேடிக்கைதான் அதில் அந்த மக்கள் பேசும் மொழி .அது வட்டாரத் தெலுங்கு மொழி . என்னதான் கூட்ட நெரிசலில் எரிச்சலாக இருந்தாலும் பேருந்து கிளம்பிய 30 நிமிடங்களில் அந்த குளிர்காற்றால் மலைகளின் ராணி நம்மை அவள் வசம் அடிமையாக்கி விடுவாள்.அந்த ஆரஞ்சுப்பழ வாசனையும் ,மரங்களில் காய்த்துத் தொங்கும் பலாப் பழங்களும் சாலையில் நடமாடும் குரங்கு கூட்டங்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் .
ஒரு வழியாக ஊர்போய் சேர்வோம்.என்னை என் மாமா சன்னலின் வழியாகவே தூக்கிக் கொள்வார் .சென்றவுடனே சுடச்ச்சுட சாப்பாடும் கங்குகுழம்பும் தயாராக இருக்கும்.பலாக்கொட்டையை கங்கு என்று அழைப்பார்கள் .எனக்கு அங்கு பிடித்ததே மச்சு வீடுதான்.ஏணியில் ஏறி மேல்தளத்திற்கு செல்ல வேண்டும்.மரபலகையால் ஆனா மேல் தளம்.அங்கு பெரும்பாலும் காபி கொட்டைகள் தட்டுமுட்டு சாமான்கள் வைத்திருப்பார்கள்.இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமானால் ரோஜா திரைப்படத்தில் அரவிந்தஸ்வாமியை அடைத்து வைத்திருக்கும் வீட்டை போன்றதொரு வீடு .
அந்த ஊரில் மொத்தம் மூன்று தெருக்கள் ஆலடிபட்டி ,ஊரல்பட்டி,பேரப்பட்டி அவ்வளவுதான் .மொத்தம் 200 குடும்பங்கள் இருந்தாலே அதிகம்தான் .தினமும் காலையில் 7 மணிக்கெல்லாம் எல்லோரும் தோட்டத்திற்கு கிளம்பி விடுவார்கள் .குதிரை வைத்து இருப்பவர்கள் குதிரையுடன் முன்தினம் சமைத்த சோற்று மூட்டையும் சிறிது கருப்பட்டியும் எடுத்துக்கொண்டு செல்வார்கள்.காப்பித்தோட்டம் கரடு முரடான மலைப் பாதைகளைத் தாண்டி செல்ல வேண்டும்.உச்சி காயும் வேளை வரும் வரை காபிப் பழங்களையும் ஆரஞ்சுப்பழங்களையும் பறிப்பார்கள் .
பழங்களைப் பறித்துச் சோர்ந்து போனவர்களின் பசியை அளவிட முடியாது.ஒரு குழியைத் தோண்டி அதில் ஒரு வாழை இலையை வைத்து அதில் ஆரஞ்சுப்பழங்களை உரித்துப் போடுவார்கள்.பின் அதில் சம்பா மிளகாய்களை கிள்ளி போட் டு உப்புடன் சேர்த்துப் பிசைந்து அந்த சாறை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிடுவார்கள் .அந்த சுவைக்கு எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையே உணராமல் சாப்பிடுவார்கள்.
அந்தி சாயும் முன்பு பறித்தக் காபிப் பழங்களையும் வெட்டிய விறகுகளையும் குதிரை மேல் ஏற்றிக்கொண்டு பின்பு கற்களைக் கொண்டு அடுப்பு மூட்டி அதில் வாழைத்தார் ஒன்றை வெட்டி வாழைக்காய்களை அடுப்பில் வாட்டி அதை உரித்து மீண்டும் தனலில் போட்டு சுட்டுக் கருப்பட்டி காப்பியுடன் சாப்பிடுவார்கள் .இருட்டுவதற்கு முன் வீடு திரும்புவார்கள் .போகும் வழியில் என் அம்மாவை பார்த்தால் தன்வீட்டுப்பெண்ணைப் பார்த்ததைப்போல் மகிழ்ந்து நலம் விசாரித்து தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் பழங்களை அப்படியே கொடுப்பார்கள் .அந்த எதார்த்தமான மனிதர்களைப் பார்ப்பது மிக அரிது .
மாலை ஆண்கள் சால்வயை போர்த்திக்கொண்டும் குல்லா அணிந்துக்கொண்டும் டீக்கடை முன்பு கூடுவார்கள்.அரசியல் மற்றும் வியாபாரம் பற்றிய கார சாரா விவாதம் பஜ்ஜி ,போண்டா,தவள வடையுடன் நடக்கும் .காட்டில் வாழும் மலை வாழ் மக்கள் சிலர் மாதத்திற்கு ஒரு முறை மளிகை சாமான்கள் வாங்க ஊருக்குள் வருவார்கள்.அவர்கள் மலைத் தென் மற்றும் பூண்டு,மூலிகை மருந்துப் பொருட்கள் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கி செல்வார்கள்
நாங்கள் ஊர் திரும்பும் நாட்கள் நெருங்க நெருங்க என் அம்மாவின் முகம் சோர்ந்து போகும்.என் அம்மாச்சி எங்கள் பைகளை நிரப்புவதில் கவனமாக இருப்பார் .தேன் ,மலைப் பூண்டு ,ஆரஞ்சுப்பழங்கள் ,டாலியா பூச்செடி கிழங்குகள் என அனைத்தையும் ஊருக்கு எடுத்து வருவோம் மனதை மட்டும் அங்கே விட்டுவிட்டு .
என் அம்மாவின் முகம் அவர் நட்டுவைத்து வளர்த்த டாலியாப் பூ மலரும் போதுதான் மலரும் அவரின் ஊர் நினைவுகளுடன் …….அவரோடு நான் பயணித்த இந்தப் பயணம் என் நினைவு பெட்டகத்தில் 20 வருடங்களாக பொக்கிஷமாக இருக்கிறது
நாங்களும் உங்கள் அம்மா ஊருக்கு சென்றது போல் இருக்கிறது. நான் பார்த்திராத வித்தியாசமான அனுபவம்.
love it! Had goose bumps at the end.Enjoyed! Keep going…