“அய்யோ வயிறு கடிக்கிறதே.. எங்க இன்னும் இந்த கருப்பிய காணோம். இந்நேரமெல்லாம் வந்திருக்கனுமே” என்று செவல மாடு காலையில் சாப்பிட்டதையே அசைப்போட்டுக் கொண்டு கருப்பி வருகைக்காக வாசலையே பார்த்துக்கொண்டிருந்தது.
“ என்னது கருப்பியோட தோஸ்து வேம்பு மட்டும் ஒத்தையா நடந்து வீட்டுக்குப் போவுது.. எப்பயும் கருப்பியோடதான சேர்ந்து வருவா… பசிவேற தாங்கல ஒரு சத்தம் கொடுத்து பார்ப்போமா?” என்று செவல யோசித்தது.
“ என்ன அவசரம்? கருப்பி வருவா பொறு” என்று அலட்சியமாக கருப்பியோட அம்மா குரல் கொடுத்தாள்.பாலை மட்டும் மிச்சம் வைக்காமல் கரந்து கொள்வாள் ஆனால் தீனி வைக்க உடம்பு வளையாது இவளுக்கு. பாவம் அந்த ஏழாவது படிக்கிற பிள்ள எவ்வளவு வேலய செய்யும்? என்னயும் அந்த பிள்ளயையும் தோள் நிறத்த வச்சு வேற கூப்புடுறது செவல கருப்பினு ஏன் வேற பேறே கிடக்கலையா? இன்னிக்கி பால் கரக்குறப்ப இருக்கு ஒரு கச்சேரி உனக்கு என்று கருப்பியோட அம்மாவை கடிந்து கொண்டது செவல மாலை ஆறு மணி ஆனது. கடிகாரத்தை பார்த்த கருப்பியின் அம்மா பதைபதைத்தாள் . வீட்டை ஒட்டியே இருக்கும் தங்கள் மளிகை கடையில் அரசி மூட்டையை பிரித்துக் கொண்டிருந்த கணவனிடம் ஓடி சென்று பள்ளிகூடத்திற்கு போய் பார்க்க சொன்னாள். எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் சரி என்று பொறுமையாக கிளம்பினார் பழநி.
அன்றைக்கு முதல் நாள் இரவு கருப்பியின் அப்பத்தா வேணியம்மாள் வழக்கம் போல் மளிகை கடைக்கு கருப்பியையும் மகனையும் பார்கக வந்திருந்தாள். வேணியம்மாள் அதே ஊரில் தெற்கு தெருவில் தனியாக வசிக்கிறாள். நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிடைப்பதை கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறாள். மருமகளிடம் பேச்சு வார்த்தை இல்லை.மதிக்காதவள் வீட்டு வாசற்படியை மிதிக்காத அவளின் வைராக்கியம் எந்த அளவோ அதே அளவு பேத்தி மீது பாசமும். மளிகை கடை வாசலிலே பேத்திய கூப்பிட்டு தான் வாங்கிவரும் நெல்லிக்காய், இளந்தப்பழம் என்று எதையாவது தன்னால் முடிந்ததை கொடுத்து உச்சி முகர்ந்து வெற்றிலை மென்ற பொக்கை வாயில் ச்ச்ச் என்று முத்தமிடுவாள்.
வேணியம்மா மகனிடம் “ வீட்டுல மண்ணெண்ணெய் இல்ல பழநி. இந்த வாரம் மீசக்காரனும் கூலிய தராம இழுத்தடிக்கிறான் சாமி”என்று புலம்பி கொண்டிருந்தாள். அடுப்பங்கரையிலிருந்து காளியின் அவதாரமாகவே மாறியிருந்த கருப்பியின் அம்மா “ எங்க வந்த ? மாசமான சுருட்டிட்டு போக வந்திர வேண்டியது. ஏன் ரென்டாவது மகன் வீட்டுக்கு போக வேண்டியதுதானே” என்று கத்தினாள்.
வேணியம்மாவிற்கு மருமக வாயை யாராலும் அடைக்க முடியாது என்று தெரியும்.அந்த இடத்தை விட்டு தான்செல்வதுதான் மகனுக்கு நல்லது என்று முந்தானையால் கண்ணை துடைத்துக் கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பிவிட்டு காலில் செருப்பைக் கூட போடாமல் ஓட்டமும் நடையுமாக பழநி வேணியம்மாவை தெருவின் முனையில் பிடித்தான்” அவள பத்தி தெருஞ்சதுதானே நீ ஒன்னும் மனசுல வச்சிக்காத” என்று சொல்லிக்கொண்டே சட்டைப் பையிலிருந்து சில சில்லரை நோட்டுகளை எடுத்து வேணியம்மாவின் கையில் திணித்தார். “ இருட்டா இருக்கு பாத்துப் போம்மா” என்றார்.
அன்று இரவு கருப்பிக்கு தூக்கமே வரவில்லை. அப்பத்தா அழுது அவள் பார்த்ததில்லை.விடிந்ததும் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பி புத்தக பையை எடுத்துக் கொண்டு கடைக்கு வந்து அமர்ந்துக்கொண்டாள்.பழநி கருப்பியை பத்து நிமிடங்கள் கடையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சாப்பிட செல்வது வழக்கம்.கருப்பி தன் புத்தகப் பையில் கையில் கிடைக்கும் காய்கறி , திண்பன்டங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு என அனைத்தையும் போட்டு நிரப்பினாள். பழநி வந்ததும் அவரை நேராகப் பார்க்காமலயே டாட்டா சொல்லிவிட்டு வேம்புடன் பள்ளிக்கு நடந்தாள். நடந்து செல்லும் போதே வேம்பிடம்“ சாயங்காலம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதுனால நீ எனக்காக காத்திருக்க வேண்டா வேம்பு” என்று கூறினாள்
பள்ளி முடிந்ததும் ஓட்டமும் நடையுமாக கருப்பி அப்பத்தா வீட்டிற்கு விரைந்தாள். கருப்பியை சற்றும் எதிர்பார்க்காத வேணியம்மா “ ஏன் தாயி இப்டி வேகமா ஓடியாற? இந்தா தண்ணிய குடி எப்டி யரக்கிது பாரு..
“இங்க பாரு அப்பத்தா உனக்கு என்ன கொண்டாந்திருக்கேனு” என்று பையிலிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து கட்டப் பரப்பினாள் கருப்பி
“ஏன் சாமி உங்கப்பன்னா கொடுத்தனுப்பினான்?”என்ற கேள்விக்கு அமைதியாக இருந்தாள் கருப்பி
“ எனக்கு நீ அழுதோன சங்கடமா இருந்துச்சா அதனாலதான்..”“ நான் பெத்த மகராசி எனக்கு என் மவன பத்தி கவலையேயில்ல. நான் படுற பாட்ட அவன் படமாட்டான் நீ அவன மவராசனாட்டம் பாத்துக்குவ”
“உங்கம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல?”
“உடனே போனாதான் அடி நிறைய விழும் நான் ரெண்டு நாள் கழிச்சிபோட்டா?”என்று கெஞ்சினாள் கருப்பி.
“நீ வந்தது உங்கப்பனுக்கு தெரியுமா?” என கேட்டுக்கொண்டிருக்கும் போதே “யம்மா கருப்பி இங்கயா வந்தாளா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த பழநி கருப்பியையும் தரையிலிருந்த பொருளையும் பார்த்தார்.மனதிற்குள் தான் செய்ய முடியாததை தன் மகள் செய்ததை எண்ணி ஆனந்தம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் “ உங்கம்மா ஒன்ன பொளக்கப்போறா பாரு” என்றார்
“ அப்பா அப்பா நான் அப்பத்தா வீட்டுல ரெண்டு நாள் இருந்துட்டு வரேம்பா. இங்க இருந்தே பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கிறேன்பா”என்று கெஞ்சினாள்.
பழநிக்கு பாவமாக இருந்தது வேணியம்மாவும் “ பாவம்டா பிள்ள இங்க ரெண்டு நாள் இருக்கட்டும் விடு சாமி”
சரியென்று தலையசைத்தாலும் வீட்டம்மாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தலையை சொரிந்தார்.“ பழநி கொஞ்சம் கஞ்சியும் பிறண்ட துவயலும் தரட்டுமா?” என்றார் வேணியம்மா
வீட்டில் எப்படியும் இன்று சோறு கிடைக்காது என்று தெரியும் அதனால் மறுக்காமல் சாப்பிட்டுவிட்டு பயந்தபடியே சென்றார்
அன்று இரவு பழைய கதைகளையெல்லாம் கேட்டுக்கொண்டே அப்பாத்தா மீது காலை போட்டுக்கொண்டே பழைய பாயில் நிம்மதியாக யாருக்கும் கிடைப்பதற்கரிய ஒரு தூக்கத்தை தூங்கினாள் கருப்பி.
மறுநாள் காலையில்பெரிய பாத்திரத்திள் தண்ணீரை கொதிக்கவைத்து பேத்திக்கு சீயக்காய்த்தூள் தேய்த்து தலைக்கு குளிப்பாட்டி , சாம்பிராணி புகையில் தலை காயவைத்து அருகிலிருந்த இட்லி கடையில் இட்லியும் வடையும் வாங்கி வந்து கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றாள்.
வீட்டுக்கு திரும்பும் நேரமும் வந்தது . பள்ளியில் கடைசி வகுப்பு நடக்கும்போதே மனதை பயம் கவ்வி கொண்டது.நெஞ்சு படபடக்க வீட்டிற்குள் நுழைந்தாள் கருப்பி. ்அம்மா துரத்தி துரத்தி அடிப்பாள் என்று எதிர்பார்த்த கருப்பிக்கு அம்மா படுத்திருந்தது ஆச்சிரியமாக இருந்தது.
கருப்பியை கண்டதும்அம்மா கொஞ்சம் விளக்கெண்ணெய் சூடு செய்து இடுப்பில் தடவி விடும்படி கூறினாள்.சிறிது நேரத்திற்குப்பின் தான் கருப்பிக்கு புரிந்தது இது செவலையின் வேலை என்று. பால் கரக்கும் போது செவல கருப்பியின் அம்மாவோடு இருந்த கோபத்தை தீர்த்துக்கொண்டது.
எண்ணெய் தேய்த்துவிட்டப் பின் செவலைக்கு தீனி வைக்க ஓடினாள் கருப்பி. “ஏதோ என்னால் முடிந்த உதவி “ என்பதை போல் கருப்பியை பார்த்தது செவலை