சமீபத்தில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய எழுதிய ஆரோக்கிய நிகேதனம் என்ற நாவலை வாசித்தேன். இது ஒரு வங்க மொழி நாவல். இந்த நாவலை தமிழில் மொழிப்பெயர்த்தவர் த.நா. குமாரசாமி.
இந்த நாவல் 1953 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அந்த காலத்தில் ஆயுர்வேத மருத்துவ முறையில் இருந்து அலோபதி மருத்துவ முறைக்கு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருந்த காலக்கட்டம். ஜீவன் மஷாய் என்ற ஆயுர்வேத மருத்துவர் எதிர்கொள்ளும் இந்த மருத்துவத்துறை சார்ந்த மாற்றத்தையும் அவர் நோயாளிகளை சந்திப்பதன் மூலம் அவரது மரணம் சார்ந்த எண்ணங்களையும் இந்த நாவலில் பேசப்பட்டுள்ளது.
ஜீவன் மஷாயின் தந்தை ஜகத் மஷாய். ஜகத் மருத்துவ பாடத்தை அவரது தந்தை தீனபந்து மஷாயிடம் கற்றார். ஜீவன் அலோபதி மருத்துவம் படிக்க ஆசை கொண்டபோது ஜகத் மஷாய் அவரை படிக்க வெளியூர் அனுப்பி வைத்தார். ஆனால் ஜீவன் படிப்பில் கவனம் சிதறி அங்கே மஞ்சரி என்ற பெண்ணின் மீது காதல் வயப்படுகிறார்.சில பிரச்சனைகளால் படிப்பை தொடராமல் ஊர் திரும்புகிறார். ஜகத் மஷாய் தன் மகனிடம் ஆயுர்வேத மருத்துவ முறையை கற்றுக்கொள்ளும்படி கண்டிப்பாக கூறியதோடு தானே ஆசிரியராக மாறுகிறார். ஜீவன் மிக சிரத்தையாக கற்க ஆரம்பிக்கிறார். துள்ளியமாக நாடி பார்ப்பதில் தந்தையைப் போல சிறந்து விளங்கினார். மஞ்சரி என்ற பெண்ணால் ஆழமான மனகாயத்தைப் பெற்ற ஜீவன் மஷாய்க்கு அலோபதி மருத்துவம் கற்று ஒரு வெள்ளைக் குதிரையில் போய் தன்னை அந்த பெண்ணின் முன் நிருபித்து காட்ட வேண்டும் என்ற வெறி இருந்தது.
ஜீவனிற்கு ஆத்தர் பௌ என்ற பெண்ணுடன் திருமணம் நடக்கும். இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் ஆத்தர். இவருடைய குழந்தைப் பருவத்திலும் பெற்றோரை இழந்ததனால் அன்பு கிடைக்கவில்லை, கணவனும் காதலி ஏமாற்றியதனால் தன்னை வேறு வழியின்றி திருமணம் செய்துள்ளார் என்ற மனக் கசப்புடன் வாழ்கிறார், இருந்தாலும் ஜீவன் மஷாய் உணவு உண்ணவில்லை தேநீர் அருந்தவில்லை என்ற செய்தி வந்தால் ஜீவனின் கிளினிக் ஆரோக்கிய நிகேதனித்திற்கே வந்துவிடுவார். ஆத்தர் எல்லோரிடமும் இனிமையாக பழகுபவர் ஆனால் ஜீவனிடம் அவர் இனிமையாக இருப்பதில்லை.ஜீவன் நோயாளிகளின் நாடியைப் பார்த்து அவர்களுக்கு மரணம் மிக அருகில் இருக்கிறது காப்பாற்றுவதற்கு சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தால் அவர்களிடம் அதை மறைக்காமல் சொல்லிவிடுவார். அவரது வார்த்தை அப்படியே நடக்கும். அவரது சொந்த மகன் வனவிஹாரியின் மரண தேதியையும் அவர் நேரடியாக ஆத்தரிடம் கூறிவிட்டார். வனவிஹாரி தன் தீய பழக்கத்தினால் நோயுற்ற போது.ஆத்தர் பௌவினால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜீவன் மஷாயின் இந்த மரண நாளை அறிவிக்கும் விதம் மக்களால் சாவோலை குறிக்கும் டாக்டர் என்றழைக்கப்பட்டது. அந்த கிராமத்திற்கு வந்த ப்ரத்யூத் என்ற அலோபதி டாக்டர் ,மஷாயின் இந்த மரணத்தை அறிவிக்கும் முறையை வெறுத்தார். இது காட்டுமிராண்டித்தனம் என்று நினைத்தார். ஆனால் ஜீவனின் குரு ஜகத் மஷாய் மரணத்தை அறிவிக்கும் போது அவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள உதவியாக இருக்கும். விரைவாக தாங்கள் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை செய்வார்கள். அதனால் மறைக்க கூடாது என்று சொல்வார்.
இந்த நாவலில் எனக்கு பிடித்த சில வரிகள் உண்டு, மரண தேவதைக்கு கண்களும் இல்லை காதுகளும் இல்லை. இந்த வரி எவ்வளவு உண்மை. கண்கள் இருந்தால் இளம் வயதினரின் மரணம் நிகழுமா? காதுகள் இருந்தால் பெற்றோரின் அழுகுரலுக்கு பயந்து மரண தேவதை யாரையும் நெருங்காது.
ஜகத் மஷாய் நோயாளியின் நோயைப் பற்றிய விவரத்தை எவ்வாறு திரட்டிக் கொள்ள வேண்டும் என்பதை மிக அழகாக கூறியுருப்பார்.ஒரு மருத்துவர் தன்னுடைய ஐம்புலன்களையும் பயன்படுத்த வேண்டும். முதலில் நோயாளியின் அறையில் துர்நாற்றம் வீசுகிறதா என்ற உணர வேண்டும், பின் நோயாளியின் தலை முதல் கால் வரை நன்றாக கவனிக்க வேண்டும், அடுத்து அவரிடம் கேள்விகள் கேட்டு தெளிவு பெற வேண்டும், அடுத்து தொட்டு உணர்தல்,இதற்கெல்லாம் முன்னால் நாடி பார்த்தல் அவசியம். இந்த நாவலில் நம்முடைய பாரம்பரிய வைத்திய முறைகளின் சிகிச்சை அளிக்கும் விதம், நோயைக் கண்டறியும் முறை அனைத்தும் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஜீவன் மஷாயின் மனதில், மரணம் எப்படிப்பட்டது? அதற்கு உருவம் இருக்கிறதா? அதை எதிர்கொள்ளும்போது எப்படி உணர்வோம்? இவ்வாறு பல கேள்விகள். அவர் தினமும் விதவிதமான நோயாளிகளை சந்திக்கிறார். அனைத்து வயதினரின் இறப்பையும் பார்க்கிறார். குழந்தைகள் நோயுற்றிருப்பதையும் இளம் மனைவிகள் விதவையாவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நாவலின் முடிவில் அலோபதி மருத்துவர் ப்ரத்யூத் ஜீவனிடம் தன் மனைவிக்கு நாடி பார்த்து என்ன நோய் என்று கண்டறிய உதவி கேட்கிறார். தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்கும்போது உணர்ச்சிவசப்படுகிறார். ஜீவன் அவருக்கு உதவி செய்கிறார்.ஜீவன் மஷாய், அவருடைய மகன் நோயுற்ற போது மற்ற நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளித்தாரோ அதேபோல்தான் உணர்வின் பிடியில் சிக்காமல் அவனது மரணம் எப்போது நிகழும் அந்த நாள் முதற்கொண்டு கூறினார் ஆனால் ப்ரத்யூத் மருத்துவரால் அவரின் மனைவியை மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போல் தைரியமாக சிகிச்சை அளிக்க இயலவில்லை ஏன் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
இந்த நாவல் முழுவதும் ஜீவன் மஷாய் தன் நண்பனுடன் ஆரோக்கிய நிகேதனத்தில் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருப்பார் இது கிட்டத்தட்ட மனிதன் மரணத்தோடு விளையாடுவதைதான் எழுத்தாளர் கூறுகிறாரோ என்று தோன்றுகிறது. மரணத்தை யாராலும் வெல்ல இயலாது. மனிதன் தன் வாழ்நாளை இயற்கைக்கு எதிராக நீட்டிக்க நினைத்தால்அதற்கான விலையை கொடுக்க வேண்டும் என்பதை மதியின் அம்மாவின் சம்பவம் சிந்திக்க வைக்கிறது.
ஒருவன் பிறக்கும்போதே அவன் எப்படி இறக்கப்போகிறான் என்பதும் தீர்மானிக்கப்படுகிறது. சிலருக்கு அவர்களுடைய தீயப்பழக்கமே அவர்களின் யமனாகலாம் ஆனால் விபின் போன்றவர்களின் மரணம் ஏன் நிகழ்கிறது?. தன்னுடைய தொழிலை முழுநேரமாக ஓய்வின்றி செய்து பெற்றவருக்கு நல்ல மகனாக இருந்தும் ஏன் நிகழ்கிறது? மரணத்தின் கணக்கு விந்தையாக இருக்கிறது.
நாவலின் இறுதியில் மஷாய் மரணத்தை எதிர்கொள்ளும் விதம், அவர் எப்படி அபிமன்யு மரணத்தைக் கண்டு அழாமல் எதிர்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்று ஒரு நாடகம் பார்க்கும் போது கூறினாரோ அவ்வாறே அவருடைய மரணம் நிகழும் போது தூக்க மாத்திரை தனக்கு தரவேண்டாம் தான் அந்த மரணத்திற்கு உருவம் இருந்தால் பாரக்க வேண்டும் ,அதற்கு குரல் இருந்தால் கேட்க வேண்டும், வாசனை இருந்தால் நுகர வேண்டும் என்று கூறுகிறார்.ஆத்தர் பௌவும் தன் கணவனின் உடல் மீது சாய்ந்துவிடுகிறாள். இனிமையாக பேசினாள் மட்டும்தான் அன்பான அக்கறையான நேசம் உள்ள மனைவியா? ஆத்தர் பௌ இந்த கேள்வியை என்னிடம் விதைத்தார்.