WAR AND PEACE-TOLSTOY

டால்ஸ்டாயின் போரும் வாழ்வும்  ஒரு குழுவாக வாசித்தோம்.நற்றினை பதிப்பகம்,திரு டி. எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் மொழிப்பெயர்ப்பில் மூன்று பாகங்களாக வெளிவந்த நூலை வாசித்து முடிக்க ஐந்து மாதங்கள் ஆனது. ஐந்து மாதங்கள் மாஸ்கோவின் எரிந்த தெருக்கள், பியரின் வெடித்த பாதங்கள்,பிளேட்டனின் உயிர்ப்பைக் கொடுத்த உருளைக்கிழங்கு, இருபத்துஐந்து ரூபிளில் வெளிப்பட்ட மாவ்ராவின் கனிவு,விரிந்த ஆகாயம், துளிர்த்த ஓக்மரம் என்று தொடர்ந்து தீராத போராட்டங்களுக்கு நடுவிலும் வாழ்வதற்கான ஒரு துளி நம்பிக்கையை அவரது எழுத்து கொடுத்தது, வாசித்து முடிக்கும் போது ஒரு மௌனம் கிடைத்தது.

சிறையே மீட்பானது

            பியர் பல கேள்விகளுடன் வாழ்கிறார். நான் யார்? எனது வாழ்வின் நோக்கம் என்ன? நான் எப்படி வாழ வேண்டும்? இப்படி பல கேள்விகளுடன்  பணமும் அந்தஸ்தும் இருந்த போதிலும் அமைதியற்ற வாழ்க்கை.பியர் அனைவருக்கும் அன்பைக் கொடுக்கிறார்.மனம் உடைந்த ஆண்ட்டிரு, மேரி,நட்டாஷா,பிரஞ்ச் ராணுவ வீரர் ராம்பல் என அனைவரும் பியரிடம் மனம் திறந்து பேசுகிறார்கள்.ஆனால் பியருக்கு அமைதியும் நிறைவும் கிடைக்கவில்லை.ப்ரீமேசன் குழுவில் இணைந்தும் பயனில்லை. பிளேட்டன் கரட்டேவ்வை சிறையில் சந்தித்த போது அவர் கண்ட சிறைக்கைதிகளின் கொலையால் அனைத்து நம்பிக்கையும் இழந்து உறைந்த நிலையில் இருந்தார்.அவரைப் பார்த்த பிளேட்டன் அவரது ஜீவசக்தியை மீட்க உணவுத்தேவை என்பதை உணர்ந்து தன்னிடமுள்எ உருளைக்கிழங்கை கொடுக்கிறார். அந்த நேரத்தில் பியருக்கு அது மிகவும் தேவையான ஒன்று .முதன் முதலாக பியர் அமைதியை உணர்ந்தது அந்த சிறையில்தான் காரணம் அங்கே தேவைக்கு அதிகமாக எதுவும் இல்லை. சுதந்திரமோ, உணவோ, வசதியோ,அதிகாரமோ இல்லை. செய்யும் ஒவ்வோரு அன்றாட வேலையையும் முழுகவனத்தோடு வேறு சிந்தனையின்றி செய்யும் பிளேட்டன் பியருக்கு பல மனத்திறப்புகளை ஏற்படுத்துகிறார். பயங்கரமானது இதில் இருந்து மீள முடியாது என்று ஒன்று இல்லை என்பதே பியர் உணர்ந்த தரிசனம். பிளேட்டனின் மரணம்,புண்கள் நிறைந்த காலுடன் பயணம் போன்ற அனுபவம் கொடுத்த தரிசனம்.வாழ்க்கை தரிசனத்தை எளிய மனிதர்களால்தான் கொடுக்க முடிகிறது. அன்னா கரீனினாவிலும் லெவினுக்கு ஒரு விவசாயியின் மூலம் அவரது வாழ்கைப்பற்றிய கேள்விக்கான பதில் கிடைக்கும். ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தாவிலும் படகோட்டியே வழிகாட்டியாவார்.எளிய மனிதர்கள் சிறந்த ஆசிரியர்கள்!

பியரிடமிருந்து உணர்ந்தது மற்றவரிடம் அன்பு கொள்ள காரணங்கள் தேவையில்லை!

இசை செய்யும் மாயம்..

           நிக்கலோய் ரஸ்டோவ் ஒரு பெரும் தொகையை சூதாடி இழக்கிறார். தன் தந்தையிடம் எப்படி உதவி கேட்பது என்ற தயக்கம் மற்றும் பதற்றத்தோடு வீட்டிற்குள் நுழையும்போது நட்டாஷாவின் பாடலில் இந்த பண இழப்பு, டோலகாவின் மீது இருந்த கோபம் அனைத்தும் அற்பமாக தெரிகிறது.ஒரு மோசமான மனநிலையிலிருந்து இசை எப்படி மீட்டெடுக்கிறது!இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் அலெக்ஸாண்டரின் மீது வெறித்தனமான பக்தி கொண்டிருந்த ரஸ்டோவ் இன்னும் சொல்லப்போனால் உயிரையும் கொடுக்க தயாராக இருந்த நிக்கலாய் ரஸ்டோவ் புத்தகத்தின் இறுதியில் பிள்ளைகளுக்கு சம்பாதித்து வைக்க வேண்டும் கடனை அடைக்க வேண்டும் என்று தன் குடும்பத்தை பற்றி மட்டும் சிந்திக்கும் ஒரு குடும்பத்தலைவனாக மாறும் ஒரு பயணத்தை  போர், வேட்டை, காதல் என்று சுவாரசியமான அனுபவங்களோடு காட்சியாக காட்டியது அருமை! நிக்கலோய் சோனியாவை ஓரு ஆணின் உடையில் பெண்ணாக முதன்முதலாக உண்ரவது கவித்துவமாக இருந்தது.

மரணம் ஒரு விழிப்பு!

           இந்த ஆகாயத்தை இவ்வளவு நாள் எப்படி பார்க்காமல் இருந்தேன்? ஆண்ட்டிருவின் இந்த கேள்வி மீண்டும் மீண்டும் என்னுள்ளே எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.பரந்து விரிந்து இருக்கும் ஆகாயத்தின் முன்னால் நெப்போலியன் மட்டும் இல்லை நமது  தற்பெருமை,பெருங்கனவு,திட்டங்கள், வெற்றி, தோல்வி,வலி அனைத்துமே அற்பம்தான்.இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி இதுதான்.ஆகாயம் பிரம்மாண்டமானது! அது இந்த புத்தகத்தில் ஒரு கதாப்பாத்திரமாக வருகிறது.நட்டாஷாவைப் பார்த்தப்பின் ஆண்ட்ரூ மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் தேவையில்லை என்பதை உணர்கிறார். அதுவரையில் தன்னை ஒரு பட்டுப்போன ஓக் மரத்தோடு ஒப்பிட்டு பார்த்த ஆண்ட்ரூ நட்டாஷவைப் பார்த்தப்பின் தளிர்த்த ஓக் மரத்தை பார்க்க நேரிடுகிறது. தன் வாழ்க்கை முடியவில்லை என்ற நம்பிக்கை பிறக்கிறது. நாம் காணும் காட்சிகள் நம் மனதின் பிரதிபலிப்பாக இருக்கிறதா அல்லது நம் மனதின் பிரதிபலிப்பை பொறுத்து நாம் காட்சிகளை காண்கிறமோ என்று தெரியவில்லை.கடவுள் நம்பிக்கை இல்லாத ஆண்ட்ரு இறுதியில் கடவுளை நம்புகிறார் இந்த மாற்றம் எளிதாக நிகழவில்லை பல இழப்புகள், தோல்விகள்,வலிகளுக்குப்பின் தன்னுடைய அகந்தை,அறிவார்ந்த சிந்தனையை எல்லாம் புறம் தள்ளியப்பின் மரணத்தருவாயில் விழிப்பு ஏற்படுகிறது.பியர் ஆண்ட்டுரூவிடம் படகில் சென்றுக்கொண்டே ப்ரீ மேசன் சங்கத்தைப்பற்றி சொல்லுவார் அதை மிக கவனமாக ஆண்ட்டுரூ கேட்பார் ஆனால் தனக்கு அனுபவங்களின் மூலமாகத்தான் ஒன்றை நம்ப முடியும் என்று தெளிவாக தன் கருத்தை முன் வைப்பார்.

மனிதன் மரணத்தின் அருகில் இருக்கும்போதுதான் மன்னிக்கவும் மன்னிப்பை கேட்கவும் விழைகிறான்.ஆண்ட்டிருவின் வாழ்க்கைப் பற்றிய புரிதல்  வாழ்க்கை முடியும் போது ஏற்படுகிறது ஆனால் அந்த புரிதல் அவரை அமைதியான மனக்கசப்போ, ஏமாற்றமோ இல்லாத மரணத்தை எதிர்கொள்ளும் சக்தியை கொடுக்கிறது.அன்பு மரணத்தையும் எதிர்கொள்ளும் திடத்தை கொடுக்கிறது. என் தந்தை இறுதிநாட்களில் என்னைப்பார்க்க விரும்பவில்லை. அவரது கண்களில் நான் யாரோவாக இருந்தேன் இந்த உணர்வை ஆண்ட்டிருவின் மரணத்தைப் பற்றி படிக்கும் போதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் வேறு ஒரு உலகத்தோடு பினைப்பை ஏற்படுத்திக் கொண்டனர் நம்மாள் அவர்களை புரிந்து கொள்ள முடியாது.

காலமும் காத்திருப்பும்..

             பொறுமை மற்றும் காலம் கனிவதற்காக காத்திருப்பது வெற்றியை கொடுக்கும் என்பதில் நம்பிக்கை உடையவர் ஜென்ரல் குட்டுஜோவ். நெல்சன் மண்டேலா அவர்களை கவர்ந்த கதாப்பாத்திரம்.அதிகமாக பேசாதவர், வாதம் செய்வதால் எந்த பயணும் இல்லை என்ற நம்பிக்கை உடையவர்.தக்க நேரத்திற்காக பொறுமையாக காத்திருக்கும் பண்பும் ஒரு விவசாயிக்கும் மீன் பிடிப்பவருக்கும் உள்ள குணம் அந்தப் பண்பு  பெரிய வெற்றியைத் தேடி தரும் வியூகமாக அமைகிறது.பிரஞ்ச்  படை விரர்கள் பின்வாங்கி செல்லட்டும் அவர்களை தாக்க வேண்டாம் என்று கூறும் டால்ஸ்டாயின் குட்டுஜோவே மக்களின் மனதில் என்றும் நிலைத்து இருப்பவர்.சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்,பதக்கங்களை வெல்ல வேண்டும்,பணி உயர்வு பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இடையே குட்டுஜோவ் மாதிரியான ஆட்கள் மற்றவர் வெறுப்பை மட்டுமே பெற முடிகிறது. அந்த வெறுப்பு அவரை பாதிக்காது என்று நம்புகிறேன் ஏனெனில் அவரைப்போன்றோர் அவரது ஆத்மாவின் குரலை மட்டுமே கேட்பவர்கள்.

போர் சதுரங்க ஆட்டமல்ல..

          போரும் வாழ்வும் வாசிக்கும் வரையில் போரைப்பற்றிய என்னுடையப் புரிதல் எவ்வாறாக இருந்ததென்றால் போரின் வெற்றியை படைத்தலைவர்களின் வியூகம் தீர்மானிக்கிறது, அந்த வியூகத்தை படைவிரர்கள்  கட்டுக்கோப்பாக செயல்படுத்துவார்கள்,போர்களத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் இருக்கும் வண்ணம் அனைத்தும் திட்டமிடப்பட்டு அதன்படியே செயல்படுத்தப்படும். ஆனால் டால்ஸ்டாய் ஒரு போரின் வெற்றி யாருடைய கையிலும் இல்லை. History is myth. History is not created by genius people என்று சொல்கிறார்.நெப்போலியன் எல்லாம் தனது திட்டத்தின்படிதான் நடந்துக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறான், தன்னுடைய ஆணையை எல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ற மாயையில் இருக்கிறான் ஆனால் உண்மையில் பிரஞ்ச் மற்றும் ரஷ்ய ராணுவம் இரண்டுமே யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. இராணுவ வீரர்கள் கொள்ளயர்களாக மாறும் தருணங்கள் மனித இயல்பை புரிந்துகொள்ளும் பக்குவத்தை அளிக்கிறது.ஆம் அது அப்படிதானே இருக்க முடியும். பனியும் பசியும் தொடர்பயணமும் போரும் மனிதனை மூர்க்கமாகத்தான் மாற்றும்.மூர்க்கம் என்றவுடன் மாஸ்கோவின் கவர்னர் ராஸ்டாப்சைனைப் பற்றி நினைவுவந்துவிட்டது.மாஸ்கோ மக்கள் தங்களின் கவர்னரைதான் மாஸ்கோ கைவிட்டு போனதற்கு குற்றம்சாட்டி கேள்விகேட்பார்கள். அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றி கொள்ள ஒரு கைதியின்மீது பழி சுமத்தி மக்களின் கோபத்தை திசைத் திருப்பி அவனை பழியிட்டதும் அதனை தொடர்ந்து ஒரு  பைத்தியக்காரனின் குரலை ராஸ்டாப்சைன் கேட்கிறான்.அந்த வரி அவனை என்றென்றைக்குமே தூங்க விடாது “என்னை அவர்கள் கல்லால் அடித்தார்கள்,சிலுவையில் அறைந்தார்கள்… நான் எழுந்திருப்பேன்.. எழுந்திருப்பேன்”.இங்கு ஒரு பைத்தியம் கவர்னருக்கு தீர்ப்பை வழங்கியது.

இருவகை குடும்பம்:

               ரஸ்டோவ் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமாக இருக்கிறது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான நெருக்கம்,பிள்ளைகள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படையாக பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கான சுதந்திரம் கொடுக்கப்படுகிறது.கண்டிப்பு இல்லை.மகன் எழுதிய கடிதத்தை மீண்டும் மீண்டும் படிக்கும் அம்மா,நீண்ட நாட்களுக்குப் பின் வீடு திரும்பும் போது நிக்கலோயின் மனதின் வேகத்திற்கு வண்டி ஓட்டுபவர் ஈடு கொடுக்க முடியாத அந்த நிமிடங்கள் , அவரது வயதான அம்மாவின் காலடி வேகத்தின் மூலம் அந்த அன்பின் ஆழத்தை நமக்கு கடத்தும் அந்த வரிகள்,நிக்கலோயின் கால்களைக் கட்டிக் கொண்டு தொங்கும் பெட்டியா என்று ரஸ்டோவின் குடும்பத்தை வாசிக்கும் போதே நம்மிடம் ஒரு மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது.இந்த சூழலிற்கு முற்றிலும் முரணாக பால்கோன்ஸ்கியின் வளர்ப்பு இருக்கிறது. சுதந்திரமோ, தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் சூழலோ,அன்பான  அணுகுமுறையோ இல்லை.ஆனால் கட்டுக்கோப்பும் கண்டிப்பும் இருந்தது.தந்தை மகளின் உறவை அழகானதாக பார்த்து பழகியதற்கு முரணாக ஒரு அதிர்வை முன் வைக்கிறார் டால்ஸ்டாய்.குறிப்பாக அனட்டோல் பெண்பார்க்க வரும் போது மேரியின் மீது பால்கோன்ஸ்கி வெறுப்பைக் காட்டிய விதம் உச்சம்.ஆனால் தன்மகள் வெகுளியாக தன்னைசுற்றி நடப்பதை புரிந்துகொள்ள முடியாத முட்டாளாக இருக்கிறாள் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும்அந்த கோபம் இருந்ததாக நான்பார்த்தேன்.அவர்மரணத்தின் போது அந்த மரணத்திற்கு முன் தன்னுடைய அத்தனைப்பணிகளையும் முடித்து விட்டு ஒரு கட்டுக்கோப்பான இராணுவ விரனாகவே மரணிப்பார்.பிள்ளைகளின் மனநிலை, முடிவெடுக்கும் திறன்,தன்னம்பிக்கை எல்லாம் வளரும் சூழ்நிலையின் பங்கும் இருக்கிறது என்பதை டால்ஸ்டாய் நமக்கு காட்டுவதாக இருக்கிறது.

அகத்தின் அழகு!

       நமது பெற்றோரையும் உடன்பிறந்தோரையும் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லை. அவர்கள் இல்லாத ஒரு வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று எண்ணும் அளவிற்கு மன உளைச்சலை கொடுக்கும் அந்த நபர் தன் தந்தையாக இருக்கும் பட்சத்தில் மேரிக்கு அந்த வாழ்க்கையை கடவுள் நம்பிக்கை என்ற துணையோடு கடப்பது சாத்தியமாகிறது. தன் சகோதரரின் மகனிற்கு தாயாக ஆனதும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை அவருக்கு காலமே கொடுத்த பொறுப்பு.மேரியின் கதாப்பாத்திரம் நான் பிளாட்டோன் கராட்டாவோடு ஒப்பிட நினைக்கிறேன் காரணம் இருவரும் அவர்களுடைய அன்றாடத்தை முழு மனதோடு செய்கிறார்கள்.மனக்கசப்போ,புகாரோ இல்லை.வாசிக்கும் போது மேரியை ஒருஅழகான பெண்ணாக நம் மனம் உருவகிப்பதை தடுக்க இயலவில்லை அவளது தோற்றம் கவரக்கூடியதாக இல்லாதவாறு டால்ஸ்டாய் படைத்திருந்தாலும் மேரியின் அகம் அவளை அழகியாகவே நம் மனதில் நிலைப்பெறச் செய்கிறது.

அழகான தருணங்கள்:

         நட்டாஷா மேரியின் முகத்தை விளக்கின் ஒளியில் பார்க்கும் போது ஆண்ட்டிருவின் சாயலை அவளின் முகத்தில் தேடும் இடம் அற்புதமான இடம்.அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் மனநிலையை உச்சமாக காட்டும் இடம் இது.  

நிக்கோலாய் ரஸ்டோவின் மகள் அப்பா தூங்கவில்லை சிரித்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லும் இடம்

அழகு!

டால்ஸ்டாய் வேட்டையையும் அழகாக எழுதியுள்ளார். இதை நான் கம்பரின் போர் சித்திரத்திலும் உணர்ந்துள்ளேன். ஒரு படுபயங்கர கொலையை அழகிய கவித்துவமான தருணமாக கம்பர் காட்சிபடுத்துவது வாழ்க்கையின் புரிதல் என்றே பார்க்கிறேன்.

லிசா மற்றும் சோனியா போன்ற மனிதர்களுக்கு அன்பு எட்டாக்கனியாக மாறுகிறது.சோனியா பற்றி பேசும்போது அவளிடமிருந்து ஒவ்வொன்றுமே எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற வரியை மறக்க முடியவில்லை.

டால்ஸ்டாயின் எழுத்து இயல்பான வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.அவர் ஒரு கலை அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் போல. 

There is no greatness without simplicity,truth and goodness.

மதுநிகா சுரேஷ்.

Copyright © 2025 | Powered by WordPress