உச்சிதனை முகர்ந்தால் …

“என்னப்பா அண்ணாமலை முடிவுக்கு வந்தியா இல்லையா ?”

“ம்ம் .. கொஞ்சம் யோசனையா இருக்கு “

“ரொம்ப யோசிக்காதப்பா வேண்டாம்னா விட்டிரு “என்றார் பெருமாள் .

“அதவிடு பெருமாளு இன்னிக்கு கூட்டத்திற்கு எல்லாத்தையும் வர சொன்னியா ?”

“அதெல்லாம் எல்லாத்தையும் வர சொல்லிட்டேன் .சாயங்காலம் எல்லாரும் வந்துருவாங்க .இன்னிக்கு சேகரு ஜே .கே கதைய சொல்லப்போறான் “

“ஆமப்பா நான் எதையும் கையில எடுத்துட்டு போக முடியாது இந்த நினைவுகள் மட்டுந்தான் எங்கூட வரப்போவுது “என்று ஊஞ்சலில் ஆடியபடி அண்ணாமலை புன்னகித்தார் .

“சரிப்பா பசங்ககிட்ட கலந்து பேசுனியா ?”

“கலந்து பேசுறதுக்கு என்னப்பா இருக்கு ?அவங்களுக்கு செய்ய வேண்டியதை செஞ்சாச்சு நான் கிளம்புறப்ப ஒரு வார்த்தை போன்ல சொன்னா போது .இப்பவே சொன்னா மீதி இருக்குற ரெண்டு நாளும் பஞ்சாயத்துல போயிரும் “

“அதுவும் சரிதான் சொத்து பஞ்சாயத்துப் பெரிய தலைவலிதான் “என்று தலையை ஆட்டினார் பெருமாள் .

“கடைக்குட்டி விசாவ நினைச்சாதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு .அவளுக்கு படிப்பு முடிய மூணு வருஷம் இருக்கு அதுக்கப்புறம் நான் வந்துருவேன்.நல்லவேளை ஹாஸ்டல்ல தங்கி படிக்குறதால பிரச்சனை இல்ல .கமலம் போன பிறகு நான்தான் அவளுக்கு எல்லாம் “

“ரொம்ப உன்ன கஷ்டப்படுத்திக்காதப்பா வேணம்னா விட்டுரு .இது உன்னோட முடிவுதான் யாரும் உன்ன கட்டாயப்படுத்தல “

“எனக்கு கமலத்தைவிட்டு தூரமா இருக்க முடியுமானு முயற்சி செய்யப்போறேன் .இப்பலாம் இலக்கியம் கூட அவளைத்தான் அதிகமாக ஞாபகப்படுத்துது .இப்ப நான் எடுக்குற முடிவு எனக்கு நான் கொடுத்துக்குற தண்டனையா கூட இருக்கலாம்.இருக்குறப்போ முகத்தை பார்த்துக் கூட பேச நேரத்தை ஒதுக்குல இப்ப மறக்க முடியாம பயந்து வீட்டை விட்டே ஓடுறேன் “

பெருமாளுக்கு ஒன்றுமே பேச முடியல “சரிப்பா நான் கிளம்புறேன் சாயங்காலம் வரேன் “

பெருமாள் அண்ணாமலையின் நெருங்கிய நண்பர் .தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.நல்ல வாசிப்பு பழக்கம் உடையவர்.கமலத்தின் மறைவிற்கு பிறகு அண்ணாமலை தனிமையில் தவித்தபோது பெருமாள்தான் அவருக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார் .இருளில் தவித்தவனுக்கு ஒளி கிடைத்ததைப் போல் அண்ணாமலை கொஞ்சம் தெளிவாவதற்கு அவர்தான் காரணம் .இருவரும் தினமும் படித்த புத்தகங்களைப் பற்றி நேரம் போவதறியாமல் பேசுவார்கள்.நாட்கள் செல்ல செல்ல அவர்களுடைய கலந்துரையாடல் கூட்டம் பெரிதானது .நிறைய நண்பர்கள் புத்தக விவாதத்தில் ஆர்வம் காட்டினார்கள்.அவர்கள் அனைவருக்கும் அண்ணாமலையின் வீடுதான் சந்திக்கும் இடம் .

அன்று மாலையும் இலக்கிய கூட்டம் தொடங்கிற்று .சேகர் கதையை சொல்ல ஆரம்பித்தார் “ஒரு மனிதன் இறக்கும்போது இன்னொரு மனிதனுக்கு ஞானம் பிறக்கிறது .சாவில் பிறந்த ஞானம் வாழவா பயன்படும் “என்று மூங்கில் கதையை முடித்தார் . கூட்டத்தில் மயான அமைதி நிலவியது .இது வழக்கம்தான் கதை தொடங்கும்முன் எல்லாரும் கிண்டல் கேலி என்று ஆரவாரமாக இருப்பார்கள் அனால் ஜே.கே.,தி.ஜா ,நாகராஜன்,புதுமைப்பித்தன் போன்றோர் எழுதிய கதைகளைக் கேட்டப் பிறகு பேச்சற்றவர்களாய் பல சிந்தனைகளுக்கு ஆளாகி அமைதியாகி விடுவார்கள் .கூட்டம் களைந்து போன பிறகும் அந்த கடைசி வரிகள் அண்ணாமலையின் காதில் ஒலித்துக் கொண் டே இருந்தது .ஆம் கமலத்தின் மறைவு அவருக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

ஐந்து பிள்ளைகள் ,ஒரு காலத்தில் இந்த வீடு இவளவு அமைதியாக இருக்காது .அதோ இருக்கிறதே சமையலறை அதில் எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும் .இந்த கூடத்தில்தான் கமலம் மிளகாய், மல்லி ,வடம் ,மஞ்சள் என்று எதையாவது காய வைத்துக்கொண்டிருப்பாள் .வீட்டிற்குள் நுழையும்போதே சமையல் வாசனை மூக்கை துளைக்கும் .அண்ணாமலைக்கு அம்மியில் அரைத்து செய்யும் சமையல்தான் பிடிக்கும் என்று சாகும் வரைக்கும் மிக்ஸியை பயன்படுத்தாமல் சமைத்த மகராசி.

கமலம் இறந்து பதினைந்து நாட்கள்கூட ஆகாத நிலையில் பிள்ளைகள் அண்ணாமலையை தனியாக இவ்வளவு பெரிய வீட்டில் இருக்க வேண்டாம் தங்களுடன் வந்து தங்கும்படி கூறினார்கள் .அவர்கள் அக்கறையை எண்ணி சந்தோஷப்படும் முன்னரே அடுத்த வார்த்தையாக இந்த வீட்டை விற்றுப் பிரித்துகொடுக்கும்படி கூறியதும் அண்ணாமலைக்கு அப்போதான் தான் தனிமரம் ஆன நினைவு வந்தது .அன்றிலிருந்து அவர் பிள்ளைகளிடம் பேசுவதை தவிர்த்தார் விசாவை தவிர யாரிடமும் பேசுவதிலை .

அண்ணாமலை ஏதோ உணர்ந்தவராய் அலைபேசியை எடுத்தார் தன்னுடைய நண்பரான ஒரு வக்கீலிடம் சில விவரங்களை கூறினார் .ஒரு கடிதத்தை விசாவிற்கு எழுதினார் .

மறுநாள் பெருமாள் வந்தபோது அண்ணாமலை வேள்பாரியை படித்துக்கொண்டிருந்தார் .”என்னப்பா இரவு தூங்கலையா ?கண்ணு சிவந்துபோய் இருக்கு ?”

“இல்லப்பா புத்தகத்த எடுத்துட்டு போக கூடாதாம் அதனால இன்னும் ஒரு நாளுல படிச்சு முடிக்கணும் .ஆரம்பிச்சுட்டேன் முடிக்காம எப்படி போறது ?”

“என்னதான் எடுத்துட்டு போலாம் ?”

ஒன்னுமே எடுத்துட்டு போக கூடாது .நமக்கு தேவையான உடையை அவங்களே தருவாங்க.எளிமையான வாழ்க்கை.நமக்குத் தேவையான காய்கறி ,பழங்களை நாமே பயிரிடனும் .நாம் பயன்படுத்துற பாய் ,தலையணை,சமையலுக்கான மண்பாண்டங்கள்,துடைப்பம் ,குடில் எல்லாம் நாமாகவே செய்யணும் .நூறு பேர் கொண்ட ஆராய்ச்சி .குழுக்களாக சேர்ந்து வேலை செய்யணும் .இயற்கையோட இணைந்த வாழ்வு.உறவுகளை பார்ப்பதோ அலைபேசியில் பேசவோ,ஏன் புகைப்படங்கள் எடுத்து செல்ல கூட அனுமதி கிடையாது .வாரத்திற்கு ஒருமுறை சில கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் கொடுப்பார்கள் அதை பூர்த்தி செஞ்சு கொடுக்கணும் .அது அவர்களின் உளவியல் ஆராய்ச்சிக்கானது.கிட்டத்தட்ட கிப்புட்ஸ்(kibbutz ) போன்ற ஒரு அமைப்பு.இங்கு யாருக்கும் எதுவும் சொந்தமில்லை எல்லாருக்கும் எல்லாம் சொந்தம் .ஒக்கினவாலதான் (okinawa ) நீண்ட காலம் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகம் .அவர்கள் வாழ்க்கை முறையை குறித்து ஆராய்ச்சி செய்து அதைப் பரிசோதிக்க இந்த உளவியல் மாணவர்கள் முயற்சி செய்கிறார்கள் .எனக்கு நீண்ட ஆயுள் தேவையில்லை அனால் உறவுகளை விட்டு தூர இருந்து பழகிக் கொள்ள ஒரு சிறை வேண்டும் .இந்த ஆராய்ச்சி தகவல் கிடைத்ததும் எனக்கு அது ஒரு வாய்ப்பாக கிடைத்ததைப் போல் உணர்ந்தேன் .”

“இன்னும் ஒரு நாள்தான் இருக்கு,இந்தப் புத்தகத்தை முடிக்கணும் “

“சரிப்பா சரி நான் கிளம்புறேன் “என்று பெருமாள் கிளம்பினார் .

அவர் சென்றவுடன் அண்ணாமலை கமலத்தின் பீரோவை திறந்தார் .அதில் உள்ள புடவைகளை ஒவ்வொன்றாக பார்த்தார்.அது விசாவிற்கு என்று மூத்த மகள்கள் எடுத்துக்கொண்டது போக விட்டு சென்றது .அதில் திருமண புடவை இருந்தது .அதை மெல்ல முகர்ந்து பார்த்தபோது அவருக்கு கமலத்தின் உச்சிதனை முகர்ந்ததுபோல் இருந்தது ……

மதுநிகா சுரேஷ்

பேசும் பொற்சித்திரமே ……..

“இந்த இடத்தோட மகத்துவம் இப்ப உள்ளவங்களுக்குத்  தெரியாது .பிரமிட்டைப்  பார்க்காமலேயே அதன் சிறப்பைப் பற்றி பேசும் மக்களுக்குக்  கண் முன்னே இருக்கும்  உன்னதமான விஷயங்களைப்  பற்றி தெரிவதில்லை” என்று சலித்துக் கொண்டே சொன்னார் சிவசுப்ரமணியம்.

“சரி அப்படினா நீங்களே இந்த இடத்தைப் பற்றிச் சொல்லுங்க?” என்றான் டிரைவர் கணேசன்.

“இந்த இடத்திலதான்  பஞ்சவன்மாதவியின்  சமாதி இருக்கு  அது மேலதான் அந்த லிங்கம் பிரதிஷ்டைச் செய்யப்பட்டிற்கு. பள்ளிப்படைக்  கோவிலில்  இறந்தவர்களுக்கு எல்லா அபிஷேகங்களும் செய்து அவர்களுக்கு உணவுப் படைக்கப்பட்டுப் பின் அடக்கம் செய்து அவர்களின் தலைக்கு மேல் லிங்கத்தைப்  பிரதிஷ்டைச் செய்வார்கள்” என்றார் சிவசு என்று அழைக்கப்படும் சிவசுப்பிரமணியன் .

“பஞ்சவன்மாதவி யார் ?”

“பஞ்சவன்மாதவி  ராஜேந்திர சோழனின் சிற்றன்னை .ராஜா ராஜா  சோழனின் மனைவி. அவர் பழுவேட்டரையர்  குடும்பத்தைச் சேர்ந்தப்  பெண்”

“அய்யா  எனக்கு இந்த ஊர்ப்  பக்கம்தான்  ஆனா எனக்கு இவ்வளவு  நாளா  இப்படி ஒரு கோவில் இருப்பதே  தெரியாது. இந்த லிங்கம் கொஞ்சம் வித்யாசமா  தெரியுதுல” என்றான்  கணேசன்.

“ஆமா, அது அவர்கள் வந்த வம்சத்தின் அடையாளம். அது மட்டும் இல்ல இந்த மாதிரியான பள்ளிப்படைக்  கோவில்களைப்  பராமரிக்கும்  வேலைகளை சிவனடியார்கள்  செய்வார்கள்” என்றார் சிவசு 

“அய்யா  நீங்க ஓய்வு பெற்றப்  பிறகும் இந்த மாதிரி இந்த கோவில் சீரமைப்புப் பணில்லாம் ஏன் செயிரிங்க?”

“கணேசா  எல்லாத்தையும் அரசாங்கம்தான் செய்யணும்  ஆனா அதுக்காகக்  காத்துட்டுக்   கண் முன்னாடி மகத்துவமான நம் பாரம்பரியத்தைப் பறைசாற்றும்  இடங்கள் சிதைந்துப்  போவதைப்  பாத்துட்டு  இருக்க முடியாது “

“பட்டிஸ்வரத்திலேயே இருக்குற எத்தனைப் பேருக்கு இந்த இடத்தோட வரலாறு தெரியும். யாருமே முதல வரலாற்று சிறப்புகளைத்  தெரிந்துக் கொள்வது  கிடையாது ” என்ற சிவசுப்பிரமணியன்  அழகப்பா   பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப்  பேராசிரியராகப்   பணியாற்றுகிறார் .அதற்கு முன் கடல் தொல்லியல்(marine  archaelogy  and  maritime ) ஆராய்ச்சியாளராகப்   பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கல்வெட்டுகள் படிக்கும் சிறப்பு வகுப்புகள் எடுப்பது மற்றும் இன்றும் இந்திய முழுக்க எங்கு அகழ்வாராய்ச்சி நடைபெற்றாலும் இவரைத்தான் அழைப்பார்கள்.

இப்போது வீடு திரும்பிக் கொண்டிருந்தப்  போது  சிவசு கணேசனை டீக்கடையில் நிறுத்த சொன்னார். அந்தக்கடையில் இராணுவ வீரனின் கண்ணீர் அஞ்சலி ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது .இரண்டு டீயை சொல்லிவிட்டுக் காத்திருந்தனர். “கணேசா இந்த தேசப்பக்திங்கறது  நம்ம இரத்தத்திலேயே ஊறிப்போன ஒன்னுடா. மன்னர் காலத்திலேயே நவகண்டம் கொடுக்க இளைஞர்கள்  நான் நீன்னு போட்டிப்  போட்டுக்கொண்டு முன்வந்தாங்க “

“நவகண்டம்னா ?”

“அப்படினா  போர்ல வெற்றிப் பெற வேணும்னுத்   தன்னோட உடலில் உள்ள ஒன்பது பாகங்களையும் வெட்டிப்   பலி   கொடுப்பது. சில நேரங்களில் அரசன் நோய்வாய்ப்பட்டால்  கூட அப்படிக்  கொடுப்பாங்க. அப்படித்  தன்னை மாய்த்துக் கொள்பவர்களுக்கு நடுக்கல் வைப்பாங்க”

“அய்யா நீங்க பேச ஆரம்பிச்சிங்கனா  எல்லாத்தையும் மறந்துடுவீங்க  முதல டீய குடிங்க”  என்றான்  கணேசன் ஆனால் உண்மையில் வாயைப் பிளந்துகொண்டு டீயைக்  குடிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தது அவன்தான். அந்த டீயைக் குடிக்க முடியாமல் அவர் குடித்ததைப் பார்த்தான் கணேசன்.

“நானும் ரொம்ப நாளா  உங்கள்ட்ட  சொல்லணும்னு நினச்சேன் உங்கள்ட்ட  எல்லா எழுத்தாளரும் சேதியைச்   சேகரிச்சுப்  பொஸ்தகம் எழுதிப்  பெரிய  ஆளாகிடுறாங்க  நீங்களே பேசாம எழுதிடலாம்ல “

“டேய் உண்மை சம்பவங்களையும் மசாலாக் கலந்து சொன்னாதான்  மக்கள் படிப்பாங்க அது நம்ம ஏரியா கிடையாது “

வீடு திரும்பியவர்களைக் கோபமாகப்  பார்த்துவிட்டுக் காபியுடன் வந்த மீனாட்சி அம்மாள்  காரைத் துடைத்துக்கொண்டு இருந்த கணேசனிடம்  காபியைக்கொடுத்துவிட்டு  “ஏன்டா ஞாயற்றுக்கிழமைக்கூட  நீயும் உங்க ஐயாவும் எங்கடா ஓடி ஓடிப் போறிங்க ” என்றார் 

“அறிவாளிகளுக்கு ஆயிரம் வேல வெளிய இருக்கும்மா ” என்று  நக்கலடித்தான் உரிமையுடன்.” வர வர உங்க  ஐயாவோட சேர்ந்து வாய் பெருசாப் போச்சு” என்று வெடுக்கென்று உள்ளேப்  போகத் திரும்பியவிரிடம்  “அம்மா இனிமே ஐயாவுக்கு ஒரு பிளாஸ்க்ல  டீயாவது காப்பியாவது போட்டு குடுங்கப்  பாவம் கட டீயக்  குடிக்க முடியாம கஷ்டப்படுறாங்க “என்ற குரல்  கேட்டதும்” ம்ம்க்கும்…  இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை நீயும் உங்க ஐயாவும் ” என்று பொய் முறைப்புடன் சென்றார் .

மீனாட்சி அம்மாளுக்கு சிவசு கொஞ்சமும் அவளுக்கென்று நேரம் ஒதுக்குவது இல்லை என்றக் கவலை. ஆனாலும் அவரைப்  பார்க்க மாணவர்களும் எழுத்தாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் வந்து காத்துக் கிடப்பதைப்  பார்க்கப் பெருமையாக இருக்கும் மீனாட்சி அம்மாளுக்கு .அவர்களுக்கு ஒரே ஒரு பையன் கேன்சர்  பற்றிய ஆராய்ச்சி படிப்பிற்காக இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில்   இருக்கிறான்.

கார் இப்போது   கும்பகோணத்திலிருந்து ஆறு  கிலோமீட்டர்  தொலைவில் உள்ளப்  பழையாறைக்குச்  செல்கிறது .கணேசனுக்கு இந்த இடங்கள் அனைத்தும் புதிது .தினம் தினம் ஒரு  புதிய இடத்தைப்  பார்க்கும் அனுபவம்  அவனுக்குப்  புத்துணர்வைக்  கொடுக்கிறது .”ஐயா இந்தப்  இடத்தோட சிறப்பப்  பத்தி  சொல்லுங்க “

“இதுக்  குந்தவைப் பிராட்டி  வாழ்ந்த இடம்.ஆதித்திய சோழன் தன்னுடைய  திருப்புறம்பியம் போர் வெற்றிக்கு பின் கட்டிய  கோவில்” 

“நீங்க ஒரு சிறந்த கதைசொல்லி ஐயா “

“இன்னும் போக வேண்டிய இடம் நிறைய இருக்கு.என் நண்பனுக்கு கொஞ்சம் விவரமும்  போட்டோவும் எடுத்து அனுப்பனும் ” என்று சொல்லிக்கொண்டேப்   படம் பிடித்தார் .

“அடுத்து எங்க ?”

“சொல்றேன் வா.அதுக்கு முன்னாடி போய் சாப்பிடலாம் “.ஒரு கடையில்  சாப்பிட்டுவிட்டு   பணம் செலுத்தும் போது  “ஐயா GST   வரி வந்ததும் வந்தது சாப்பாட்டு விலைய  கேட்டாலே வயிறு நிரஞ்சுபோது  அரசாங்கம் கொள்ளையடிக்குது ஐயா .கிம்பளம் வாங்குறவன்தான்  குடும்பம் நடத்த முடியும் “

“எப்பயும் நேரா யோசிக்கணும் இப்படி யோசனையைத்  தப்பா அலைய விடக்கூடாது . நல்ல  அரசர்கள் ஆண்ட நாடு இது.இறந்த குழந்தைக்கு கூட நீதி வாங்கி தந்த நாடு .நீ சொன்னியே கிம்பளம் அத  வாங்குனவனுக்கு என்னத் தண்டனை தெரியுமா ?அவனை மட்டும் வேலய  விட்டு தூக்கல  அவனோட  இரத்தப் பந்தம் உள்ளவர்கள் மற்றும் அவன் எதிர்கால சந்ததியினர் யாருமே அரசாங்க உத்யோகம் பார்க்க முடியாது “என்றார் .

“அப்படிப்போடு பேசாம மன்னராட்சியே  இருந்திருக்கலாம் “.சரி வழிய சொல்லுங்க எந்தப்  பக்கம் போனும் ?”

“தஞ்சாவூர் போ..அங்க நிசும்ப சூதனி கோவில் போறோம் கிழக்கு வீதியில இருக்கு .இதை விஜயாலய சோழன் கட்டுனான். அவர்தான்  பல்லவர்களைப்  போரில் தோற்கடித்து தஞ்சையைக் கைப்பற்றி  சோழர்கள் மீண்டும்  ஆட்சிக்கு வந்துப்  பரந்து விரிந்துப்   புகழ் ஓங்கச்  செய்தது .அந்த வெற்றிக்குப்   பின் நிசும்ப சூதனிக்காக இந்தக்  கோவிலை எழுப்பினார் .”

அன்று இரவு வீட்டுக்கு திரும்பியப் போது ரொம்பவும் களைப்பாக இருந்தார் .கணேசன் கார் சாவியைக்  கொடுக்கும்போது “கணேசா  வீட்ல நார்த்தங்கா  காச்சிருக்கா “என்றார் சிவசு.

“இப்பதான் பிஞ்சு விட்ருக்கு  பெருசானதும் கொண்டாறேன் உங்களுக்கு நார்த்தாங்க ஊறுகாய் பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா?  ஐயா ” என்றான் 

“சரி நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வாடா ” மறுநாள் கணேசன் தெருவுக்குள் நுழையும்போதே  வீட்டின் முன்னாள் ஒரே கூட்டம் .கூட்டத்தைக் கடந்து வந்து பார்த்தான் பேசும் நூலகம் ஒன்று சொற்கள் இல்லாத புத்தகத்தைப் போன்று கூடத்தின் நடுவே கிடத்திவைக்கப் பட்டிருந்தது .கனவா  நினைவா  என்று உணருவதற்கும் நேரமில்லை வேலைகள் நிறையக் கொடுக்கப்பட்டது .ஓடி ஓடி வேலை செய்தான் .

கொஞ்ச நாள்கள் சென்றது  ஒரு நாள் மீனாட்சி அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது “நல்லா இருக்கீங்களாம்மா ? “

“இருக்கேன்டா சரி  நாளைக்கு கொஞ்சம் வாயேன்  தஞ்சாவூர் வரைக்கும் போனும் “என்றார்.

கணேசன் காரை ஓட்ட  ஒரு நிசப்தத்தில் பயணம் போய்க்  கொண்டிருந்தது. மௌனத்தைக் களைக்க  கணேசன் “அம்மா தினம் தினம் ஏன்டா சார் பேசுறதே ரெகார்ட் பண்ண்ணமா  விட்டோம்னு நொந்துகிறேன்  ராஜன் தம்பி வெளிநாட்ல இருந்து வந்தவுடனே சார் சொல்ற கதையை யூடியூப்ல  போட சொல்லணும் நினைச்சுட்டு இருந்தேன்  ஐயா ஒரு பேசும் நூலகம் அம்மா “என்றான் 

பெரிய கோவிலுக்குள் நுழைந்ததும் மீனாட்சி அம்மாவிற்கு  நெஞ்சு படபடத்தது திருமணம் ஆனா புதிதில் முதன்முறையாக இருவரும் இங்குதான் வந்தார்கள். இந்த கோவில்தான்  அவரைக்  கல்வெட்டுகளைப்  படிக்க தூண்டியது என்று அவர் அன்று சொன்னது காதில் ஒலித்தது. நடந்து  சென்று  தக்ஷிணாமூர்த்தி கோவில் அருகில் உள்ள ஒரு கல்வெட்டை அப்படியே தடவினார் உதடுகள் துடித்தது கண்கள் குளமாயின . கருவூரார் மண்டபத்தில் சென்று அமர்ந்தார் .கணேசன் பையிலிருந்து  தண்ணி  பாட்டிலை  எடுத்து நீட்டினான் .”அம்மா இந்த கோவிலுக்கும் நம்ம ஐயாவிற்கும்  ஒரு ஒற்றுமை இருக்கு  தெரியுமா ? இந்த கோவில் ஒரு பேசாத நூலகம் நம்ம  ஐயா ஒரு பேசும் நூலகம் “என்றான் 

மதுநிகா சுரேஷ்

நானும் அவரும்

   

ஏன் இவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. சில நாட்களாகவே சோர்வாக இருக்கிறார். இப்படி அவரை பார்ப்பதற்குச் சங்கடமாக இருக்கிறது. மனித வாழ்வில்தான் எத்தனை சவால்கள்! இருபது வருடங்கள் அவருடன் பயணிக்கிறேன். நான் வயதான பழைய தோற்றத்தைக் கொண்டாலும் அவர் அளவுக்குத் தளர்ந்து போகவில்லை. முன்பெல்லாம் அவருடன் அந்த பைக்கில் அலுவலகத்திற்குச் செல்வதே சுகம். மகிழ்ச்சியான நாட்கள் அது. கடைத்தெரு , சுற்றுலா, கோவில் என எங்கே சென்றாலும் நான் கூடவே செல்வேன். என்னை கையிலேயே பத்திரமாகப் பிடித்துக் கொள்வார். அவருக்கு மிக முக்கியமான காகிதங்களை என்னை நம்பி என்னிடம்தான் பத்திரப்படுத்துவார்.
ஒருமுறை பாப்பாவின் கல்லூரி கட்டணத்திற்காக ஆச்சி நகையைக் கொடுக்க அதை நடுங்கிய கைகளில் வாங்கி அதே நடுக்கத்துடன் என்னைத் திறந்து வைத்தார் பின் என்னை இறுக்கமாகப் பற்றி நெஞ்சோடு வைத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்யும்போதுதான் அவர் இதயம் படபடவென்று அடித்ததை உணர்ந்தேன். அது இன்றும் என்னால் மறக்க இயலாது. அதன்பின் ஒவ்வொரு முறையும் நகையை எடுத்துக்கொண்டு இருவரும் சேர்ந்து அவ்விடம் செல்வது வழக்கமாயிற்று.
சில வருடங்கள் கழித்து ஒருநாள் அலுவலகத்தில் அவருக்கு மாலை அணிவித்தார்கள். ஆரவாரமாக இருந்தது. ஆனால் மறுநாளிலிருந்து  நாங்கள் அலுவலகம் செல்லவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை… இருவருமே சோர்ந்து போனோம். ஒரு மாலை வேளையில் ஏழெட்டு பேர் வீட்டிற்கு வந்தனர். ஏதேதோ பேசினர். அதற்கு மறுநாளே ஐந்தாறு காகிதங்களை என்னுள் வைத்தார். இருவருமாக அதே பேருந்தில் சென்றோம். அந்த காகிதத்தை வீட்டுப் பத்திரம் என்று கூறி கொடுத்தார், பதிலுக்கு அவரிடம் கொடுக்கப்பட்ட பணத்தை என்னைத் திறந்து எனக்குத் திணறத் திணற அடுக்கினார். என்னைப் பண பாரமும் அவரை மனபாரமும் அழுத்தியது.
அடுத்த சில தினங்கள் மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் எனக்கு இருந்தது. சமையல்காரர், இசைக் கலைஞர்கள், மண்டபக்காரர், நகைக் கடைக்காரர் என்று பல மனிதர்களைச் சந்தித்தோம். ஒவ்வொருவரையும் சந்தித்தபின் எனது பணபாரம் குறையும் ஆனால் அவரின்மனபாரம்… என்ன சொல்வது? திருமணமும் முடிந்தது.
ஆச்சி நோட்டீஸ் வந்திருக்கு என்று ஒரு காகிதத்தை அவரிடம் கொடுத்தார். அதைப் படித்துவிட்டு என்னுள் வைத்தார். எனக்கு என்னவோ அந்த காகிதத்தைப்பிடிக்கவேயில்லை. அதைப் படித்தபின் அவர் முகம் சுருங்கியதை என்னால் பார்க்க முடியவில்லை. இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்….
                                                                                                                                              – மஞ்சப்பைReplyForward

வேதமடி நீ எனக்கு!

“அய்யோ வயிறு கடிக்கிறதே.. எங்க இன்னும் இந்த கருப்பிய காணோம். இந்நேரமெல்லாம் வந்திருக்கனுமே” என்று செவல மாடு காலையில் சாப்பிட்டதையே அசைப்போட்டுக் கொண்டு கருப்பி வருகைக்காக வாசலையே பார்த்துக்கொண்டிருந்தது.

“ என்னது கருப்பியோட தோஸ்து வேம்பு மட்டும் ஒத்தையா நடந்து வீட்டுக்குப் போவுது.. எப்பயும் கருப்பியோடதான சேர்ந்து வருவா… பசிவேற தாங்கல ஒரு சத்தம் கொடுத்து பார்ப்போமா?” என்று செவல யோசித்தது.

“ என்ன அவசரம்? கருப்பி வருவா பொறு” என்று அலட்சியமாக கருப்பியோட  அம்மா குரல் கொடுத்தாள்.பாலை மட்டும் மிச்சம் வைக்காமல் கரந்து கொள்வாள் ஆனால் தீனி வைக்க உடம்பு வளையாது இவளுக்கு. பாவம் அந்த ஏழாவது படிக்கிற பிள்ள எவ்வளவு வேலய செய்யும்? என்னயும் அந்த பிள்ளயையும் தோள் நிறத்த வச்சு வேற கூப்புடுறது செவல கருப்பினு ஏன் வேற பேறே கிடக்கலையா? இன்னிக்கி பால் கரக்குறப்ப இருக்கு ஒரு கச்சேரி உனக்கு என்று கருப்பியோட அம்மாவை கடிந்து கொண்டது செவல மாலை ஆறு மணி ஆனது. கடிகாரத்தை பார்த்த கருப்பியின் அம்மா  பதைபதைத்தாள் . வீட்டை ஒட்டியே இருக்கும் தங்கள் மளிகை கடையில் அரசி  மூட்டையை பிரித்துக் கொண்டிருந்த கணவனிடம் ஓடி சென்று பள்ளிகூடத்திற்கு போய் பார்க்க சொன்னாள். எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் சரி என்று பொறுமையாக கிளம்பினார் பழநி.

அன்றைக்கு முதல் நாள் இரவு கருப்பியின் அப்பத்தா வேணியம்மாள் வழக்கம் போல் மளிகை கடைக்கு கருப்பியையும் மகனையும் பார்கக வந்திருந்தாள். வேணியம்மாள் அதே ஊரில் தெற்கு தெருவில் தனியாக வசிக்கிறாள். நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிடைப்பதை கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறாள். மருமகளிடம் பேச்சு வார்த்தை இல்லை.மதிக்காதவள் வீட்டு வாசற்படியை மிதிக்காத அவளின் வைராக்கியம் எந்த அளவோ அதே அளவு பேத்தி மீது பாசமும். மளிகை கடை வாசலிலே பேத்திய கூப்பிட்டு தான் வாங்கிவரும் நெல்லிக்காய், இளந்தப்பழம் என்று எதையாவது தன்னால் முடிந்ததை கொடுத்து உச்சி முகர்ந்து வெற்றிலை மென்ற பொக்கை வாயில் ச்ச்ச் என்று முத்தமிடுவாள்.

வேணியம்மா மகனிடம் “ வீட்டுல மண்ணெண்ணெய் இல்ல பழநி. இந்த வாரம் மீசக்காரனும் கூலிய தராம இழுத்தடிக்கிறான் சாமி”என்று புலம்பி கொண்டிருந்தாள். அடுப்பங்கரையிலிருந்து  காளியின் அவதாரமாகவே மாறியிருந்த கருப்பியின் அம்மா “ எங்க வந்த ? மாசமான சுருட்டிட்டு போக வந்திர வேண்டியது. ஏன் ரென்டாவது மகன் வீட்டுக்கு போக வேண்டியதுதானே” என்று கத்தினாள்.
வேணியம்மாவிற்கு மருமக வாயை யாராலும் அடைக்க முடியாது என்று தெரியும்.அந்த இடத்தை விட்டு தான்செல்வதுதான் மகனுக்கு நல்லது என்று முந்தானையால் கண்ணை துடைத்துக் கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பிவிட்டு காலில் செருப்பைக் கூட போடாமல் ஓட்டமும் நடையுமாக பழநி வேணியம்மாவை தெருவின் முனையில் பிடித்தான்” அவள பத்தி தெருஞ்சதுதானே நீ ஒன்னும் மனசுல வச்சிக்காத” என்று சொல்லிக்கொண்டே சட்டைப் பையிலிருந்து சில சில்லரை நோட்டுகளை எடுத்து வேணியம்மாவின் கையில் திணித்தார். “ இருட்டா இருக்கு பாத்துப் போம்மா” என்றார்.

அன்று இரவு கருப்பிக்கு தூக்கமே வரவில்லை. அப்பத்தா அழுது அவள் பார்த்ததில்லை.விடிந்ததும் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பி புத்தக பையை எடுத்துக் கொண்டு கடைக்கு வந்து அமர்ந்துக்கொண்டாள்.பழநி கருப்பியை பத்து நிமிடங்கள் கடையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சாப்பிட செல்வது வழக்கம்.கருப்பி தன் புத்தகப் பையில்  கையில் கிடைக்கும் காய்கறி , திண்பன்டங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு என அனைத்தையும் போட்டு நிரப்பினாள். பழநி வந்ததும் அவரை நேராகப் பார்க்காமலயே டாட்டா சொல்லிவிட்டு வேம்புடன் பள்ளிக்கு நடந்தாள். நடந்து செல்லும் போதே வேம்பிடம்“ சாயங்காலம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதுனால நீ எனக்காக காத்திருக்க வேண்டா வேம்பு” என்று கூறினாள்

பள்ளி முடிந்ததும் ஓட்டமும் நடையுமாக கருப்பி அப்பத்தா வீட்டிற்கு விரைந்தாள். கருப்பியை சற்றும் எதிர்பார்க்காத வேணியம்மா “ ஏன் தாயி இப்டி வேகமா ஓடியாற? இந்தா தண்ணிய குடி எப்டி யரக்கிது பாரு..


“இங்க பாரு அப்பத்தா உனக்கு என்ன கொண்டாந்திருக்கேனு” என்று பையிலிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து கட்டப் பரப்பினாள் கருப்பி
“ஏன் சாமி உங்கப்பன்னா கொடுத்தனுப்பினான்?”என்ற கேள்விக்கு அமைதியாக இருந்தாள் கருப்பி
“ எனக்கு நீ அழுதோன சங்கடமா இருந்துச்சா அதனாலதான்..”“ நான் பெத்த மகராசி எனக்கு என் மவன பத்தி கவலையேயில்ல. நான் படுற பாட்ட அவன் படமாட்டான் நீ அவன மவராசனாட்டம் பாத்துக்குவ”
“உங்கம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல?”
“உடனே போனாதான் அடி நிறைய விழும் நான் ரெண்டு நாள் கழிச்சிபோட்டா?”என்று கெஞ்சினாள் கருப்பி.
“நீ வந்தது உங்கப்பனுக்கு தெரியுமா?” என கேட்டுக்கொண்டிருக்கும் போதே “யம்மா கருப்பி இங்கயா வந்தாளா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த பழநி கருப்பியையும் தரையிலிருந்த பொருளையும் பார்த்தார்.மனதிற்குள் தான் செய்ய முடியாததை தன் மகள் செய்ததை எண்ணி ஆனந்தம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் “ உங்கம்மா ஒன்ன பொளக்கப்போறா பாரு” என்றார்
“ அப்பா அப்பா நான் அப்பத்தா வீட்டுல ரெண்டு நாள் இருந்துட்டு வரேம்பா. இங்க இருந்தே பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கிறேன்பா”என்று கெஞ்சினாள்.

பழநிக்கு பாவமாக இருந்தது வேணியம்மாவும் “ பாவம்டா பிள்ள இங்க ரெண்டு நாள் இருக்கட்டும் விடு சாமி”
சரியென்று தலையசைத்தாலும் வீட்டம்மாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தலையை சொரிந்தார்.“ பழநி கொஞ்சம் கஞ்சியும் பிறண்ட துவயலும் தரட்டுமா?” என்றார் வேணியம்மா
வீட்டில் எப்படியும் இன்று சோறு கிடைக்காது என்று தெரியும் அதனால் மறுக்காமல் சாப்பிட்டுவிட்டு பயந்தபடியே சென்றார்

அன்று இரவு பழைய கதைகளையெல்லாம் கேட்டுக்கொண்டே அப்பாத்தா மீது காலை போட்டுக்கொண்டே பழைய பாயில் நிம்மதியாக யாருக்கும் கிடைப்பதற்கரிய ஒரு தூக்கத்தை தூங்கினாள் கருப்பி.
மறுநாள் காலையில்பெரிய பாத்திரத்திள் தண்ணீரை கொதிக்கவைத்து  பேத்திக்கு சீயக்காய்த்தூள் தேய்த்து தலைக்கு குளிப்பாட்டி , சாம்பிராணி புகையில் தலை காயவைத்து  அருகிலிருந்த இட்லி கடையில் இட்லியும் வடையும் வாங்கி வந்து கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றாள்.

வீட்டுக்கு திரும்பும் நேரமும் வந்தது . பள்ளியில் கடைசி வகுப்பு நடக்கும்போதே மனதை பயம் கவ்வி கொண்டது.நெஞ்சு படபடக்க வீட்டிற்குள் நுழைந்தாள் கருப்பி. ்அம்மா துரத்தி துரத்தி அடிப்பாள் என்று எதிர்பார்த்த கருப்பிக்கு அம்மா படுத்திருந்தது ஆச்சிரியமாக இருந்தது. 
கருப்பியை கண்டதும்அம்மா  கொஞ்சம் விளக்கெண்ணெய் சூடு செய்து இடுப்பில் தடவி விடும்படி கூறினாள்.சிறிது நேரத்திற்குப்பின் தான் கருப்பிக்கு புரிந்தது இது செவலையின் வேலை என்று. பால் கரக்கும் போது செவல  கருப்பியின் அம்மாவோடு இருந்த கோபத்தை தீர்த்துக்கொண்டது.

எண்ணெய் தேய்த்துவிட்டப் பின் செவலைக்கு தீனி வைக்க ஓடினாள் கருப்பி. “ஏதோ என்னால் முடிந்த உதவி “ என்பதை போல் கருப்பியை பார்த்தது செவலை

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா ………

காலை  நேரம் நெஞ்சே எழு! நெஞ்சே  எழு ! என்ற ஏ .ஆர்  ரஹ்மானின்  பாடலைக்  கேட்டுக்கொனண்டே  பாரதி  வழக்கம் போல சமையல் வேலையை  சுறுசுறுப்பாக  பார்த்துக்கொண்டிருந்தாள் .நல்ல வேளையாக  நான்கு அடுப்புகள்  இருக்கிறது  அமெரிக்காவில் இல்லையென்றால் என் பாடு திண்டாட்டம்தான் .வெளிநாட்டில் இருக்கிறாய் உனக்கு என்ன கவலை ?என்று கேட்பவர்கள் எல்லாம் இங்கு வந்து பார்த்தால்தானே  தெரியும்  என்று நினைத்துகொண்டே இஞ்சியையும்  ஏலக்காயயையும்  தட்டிப்  போட்டு  ஒரு  தேநீரைப்  போட்டு  குடித்துக்கொண் டே  சமையலறை சன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தால் .வீட்டின் முன்னே இருந்த போர்டிகோவில் இருந்த கூட்டில் தாய்ப்பறவை ஒன்று குஞ்சுப்பறவை வாயில் மண்புழுவை ஊட்டி கொண்டு இருந்தது.எல்லா தாய்மார்களுக்கும் இந்த சோறு ஊட்டும் வேலை மட்டும் தீராது.உனக்காவது எனக்கு இது பிடிக்கல அது வேணும் இது வேணும் என்று கேட்டு  அடம்  பிடிக்கும் பிள்ளை  இல்லை ,தப்பித்தாய்  என்று அந்தப்   பறவையைப்  பார்த்துப்  பொறாமைபட்டப் படியே   பள்ளிக்கும் ஆபிஸுக்கும்  சாப்பாட்டைக்  கட்டினால் .
       

பாரதி அமெரிக்கா வந்து ஐந்து வருடங்கள் ஆகிறது .இந்தியாவில் பேராசிரியையாகப்  பணியாற்றியவள் .கணவனின் வேலைக்  காரணமாக வேலையே விட்டுவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவில் ஒரு நல்ல இல்லத்தரசியாக குடும்பமே உலகமென இருப்பவள் .அருண் ஆபிஸ்க்கு  கிளம்பும்போது இன்றும் நேராக கிரௌண்டுக்கு போயிடு லேட்டாகதான்  வருவேன் என்று சொல்லிட்டு போனான் .பாரதி  சீக்கிரம் வந்தால் தானே அதிசயம் என்று முனகினாள் .அமெரிக்காவில் கொஞ்சம் குளிர் குறைந்தால் போதும் காரிலேயே  கிரிக்கெட் கிட்டை வைத்துக்கொண்டு ஆபீஸில்  இருந்து நேராக கிரௌண்டுக்குபோய் சின்ன பையன்களைப்  போல விளையாட ஆரம்பித்துவிடுவார்கள்  ஆண்கள் .இங்குள்ள பெண்களுக்கு வேற கார் ஓட்டத்  தெரியும் அதனால் கடைக்குப் போவது பிள்ளைகளை டியூஷன்  ,நடனம்,கராத்தே,என்று எல்லா கிளாசுக்கும்  அழைத்து போய்  வரும் வேலை  பெண்களுடையது .பாரதியும் இதிலிருந்து தப்பவில்லை . 

              அன்றும் வழக்கம் போல பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு  தான் வழக்கமாக செல்லும் நூலகத்திற்கு சென்றாள் .செல்லும் வழியெல்லாம் மரங்கள் எல்லாம்  பச்சை பசே ரென இருந்தது .ஐந்தாண்டுகளுக்கு  முன் பாரதி இதே  ஏப்ரல் மாதத்தில்தான் முதல்முறையாக இந்த நூலகத்திற்கு வந்தாள்  .நூலகத்திற்கு முன் இடதுபக்கம்  வெள்ளை  நிற மக்னோலியா  மரமும் வலதுப்புரம்  இளஞ்சிவப்பு   நிற  மக்னோலியா  மரமும் பூக்களால் நிறைந்து  நூலகத்தின் வாயில் படிக்கட்டுகள் முழுவதும் ஒரு பூக்கோலம்  போட்டது போல்  இருந்தது.அதைப்  பார்த்து நிறைந்த மனதுடன்  உள்ளெ சென்றதும் அறிவிப்பு பலகையில் சிறார்களுக்கான நிகழ்ச்சி அட்டவணையும் பெரியோர்களுக்கான நிகழ்ச்சி அட்டவணையும் அந்த வட்டாரத்தில் நடக்கும் உழவர் சந்தை காணமால்  போன  பூனைக்  குட்டியின் படம் என்று எல்லாம் நிறைந்து இருந்தது .பாரதிக்கு இது எல்லாம் புது அனுபவம். வெறிக்க வெறிக்க எல்லாத்தையும் பார்த்தாள் .பின்பு நேராக உள்ளே  சென்றாள் ,அங்கே தற்போது தோழியாகவே  ஆன  டோனியா  ரின்ஸ்  “May  I  help  you ?” என்று  கேட்டார் .ஒரு ஐம்பது வயது  இருக்கும் ,தலையில் இளமஞ்சள் நிற  டை  அடித்திருந்தார் .சதுர வடிவ மூக்குக்கண்ணாடி  பிரேம் ,சற்று குள்ளமான  தோற்றம் .நான்  நூலக அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறினால் பாரதி .டோனியா  கேட்ட விவரங்கள்  அனைத்தையும் வழங்கிவிட்டு  நூலகத்தை சுற்றிப்  பார்த்தாள் .பாரதி கல்லூரியில் கடைசியாக பார்த்தது நூலகத்தை . 


                 நூலகத்தின் கீழ்த்  தளத்தில்   சிறுவர்களுக்கான புத்தகங்களும் விளையாட்டு சாமான்களும் இருந்தது .அங்கு ஒரு அறைக்குள்ளிருந்து “The  Big  bad  wolf  huffed  and  puffed  the  straw  house ” என்ற  கதை  சொல்லும்  சத்தம்  கேட்டது .அதை கடந்து மேல்  தளத்திற்கு  வந்த போது  பெரியவர்களுக்கான  பத்திரிக்கைகள் அனைத்தும் நூலகத்தின்  இடப்பக்கத்தில் இருந்தது .இன்னொரு மூலையில் திரைப்பட   டிவிடிக்கள்  அடுக்கி  வைக்கப்பட்டிருந்தன .வலதுப்பக்கத்தில்  அறிவியல் ,பொருளாதாரம் ,சரித்திரம்,கணினி ,ரொமான்ஸ். கடைசியாக அயல்மொழி  என்று பிரிவுகள் இருந்தது.என் கண்கள் அந்த கடைசி அயல்மொழியில் நிலைத்தது .அருகில் சென்று பார்த்தேன் பாரசீகம் ,சீனமொழி ,ஸ்பானிஷ்,உருது  பின் தமிழ் ! ஆம் தமிழ் தான்.பாரதியின் கவிதை தொகுப்பு  பார்த்ததும்  பாலைவனத்தில் ஒரு நாள் முழுவதும் தொண்டைக்  காய்ந்து   நா வறண்டு  தண்ணீருக்காக அலைந்துக்  கடைசியில் ஒரு குளிர்ந்த நீர் ஊற்றைப் பார்த்தால்  எப்படி இருக்குமோ அப்படி இருந்தது .வரிசையாக  பதினைந்து முதல் இருபது புத்தகங்கள் .சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் ,ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்புக்கள் ,பாலகுமாரனின் உடையார் ,கல்கியின் அலையோசை  என்று அருமையான புத்தகங்கள்.அன்று ஆரம்பம் ஆனது பாரதிக்கும் அந்த நூலகத்திற்குமான பந்தம் .
                       அன்றிலிருந்து தினமும் சென்றால் நூலகத்திற்கு.நூலகம் ஒரு சின்ன பழைய கட்டிடம் என்றாலும் சுத்தமான சத்தம் இல்லாத அழகான நூலகம்.அதன் பின்புறத்தில் வட்ட மேசைகளும் நாற்காலிகளும் படிப்பதற்கான சூழலும் இருக்கும்.பாரதி போகும் போதே கையில் தேநீர் கொண்டு செல்லுவாள் .அதை சுவைத்துகொண்டே  படிப்பாள் .பாரதி அதுவரை கல்லூரி படித்த போதும் கல்லூரியில் வேலைப்  பார்த்தப் போதும்  நிறைய  ஆங்கில புத்தகங்களை படித்திருக்கிறாள்  அனால் அவை அனைத்தும் இந்தியர்கள் எழுதியது.அமிஷ் எழுதிய ஷிவா triology ,சுதா மூர்த்தி  அவர்கள் எழுதிய Three thousand stitches ,அப்துல்  கலாமின் wings of  fire  என்று சில நூல்கள் அனால் இது வரை ஒரு வெளிநாட்டவர் எழுதிய ஆங்கில நூலை படித்ததில்லை .படித்துதான் பார்க்கலாமே என்று யோசித்தால்.இப்பொழுதெல்லாம் குட் மோர்னிங் மட்டும் சொல்லி கொண்டிருந்த டோனியா  “You are  five  minutes  late “என்று கிண்டல் செய்யும் அளவிற்கு உறவு வளர்ந்துவிட்டது   ஒரு நூலைப் பரிந்துரை  செய்யும் படி கேட்கலாம் என்று முடிவு செய்தாள் .டோனியா “what  kind  of  book  ? thriller ,comedy or  romance ?என்று கேட்டார் .ரொமான்ஸ் என்ற பதில் வந்தவுடன் .”I  love  Nicolas  Sparks  books ,you  can  find  it  in the third rack “என்று கூறினார் .பாரதி விரைந்து சென்று அங்கு A  Walk to  Remember  என்ற புத்தகத்தை கையில் எடுத்தாள் .படிக்க ஆரம்பித்ததும் நேரத்தை மறந்தால் நல்ல வேளையாகப்   பிள்ளைகளைப்  பள்ளியிலிருந்து அழைத்து வரும் நேரம்  கடப்பதற்கு முன்  சுதாரித்தாள் .  

    அடுத்த சில நாட்கள் அந்தப்  புத்தகத்தின்  நட்போடு  சென்றது  .அவள் வாழ்வில் முதல்முறையாக பனிப்பொழிவை  அந்த நூலகத்தின் வாயிலில்தான் பார்த்தாள்  ஆம் அந்த புத்தகத்தை படித்து முடித்துவிட்டு கணத்த  இதயத்துடன் வெளியில் வரும்போது பனிப்பொழிவைத்  தலையை உயர்த்தி மேலே பார்த்தாள்  பனி முகத்தில் படர்ந்து அவளின் கண்ணீருடன் கலந்துக்  கரித்தது .இப்படி சில மறக்க முடியாத தருணங்களையும் ,அனுபவங்களையும் தந்த அந்த நூலகத்திற்குதான் சென்று கொண்டு இருக்கிறாள் .
     காரை நிறுத்திவிட்டு வழக்கம் போல உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தாள் .’Good morning   டோனியா “என்றாள் .டோனியா  கையிலிருந்த ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு இருந்தால் சற்று முகவாட்டத்துடன் .Bag  full  of  books for $4 என்ற அந்த அறிவிப்பு எல்லா இடத்திலும் ஒட்டப்பட்டிருந்தது .”மோர்னிங்  Bharathi ” என்று பதில் வந்தது .”அனைத்துப்  புத்தகங்களும் விற்பனைக்கா ஏன் ?”.”We  are  closing our  library “என்றார் டோனியா .ஒன்றும் புரியாமல்  “வேறு இடம் மாறுகிறதா ” என்று கேட்டதற்கு ‘Im  not  sure I  just  received  orders  to  sell  all  the  books “என்று கூறினார் .பாரதி இரண்டு பைகள் எடுத்து அங்குள்ள தமிழ் புத்தகங்களையும் நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்  புத்தகங்களையும் நிரப்பினால் .அதற்கான பணத்தை செலுத்திவிட்டு வீடு திரும்பினாள்.ஏதோ மனம் பாரமாய் இருந்தது.                  அடுத்த நாள் முதலில் நூலகத்திற்கு போய்  என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள  வேண்டும் என்று வழக்கத்திற்கு முன்னதாகவே சென்றாள் .அங்கு பரபரப்பாக மேசை நாற்காலிகள் எல்லாம் வண்டியில் ஏற்றப்பட்டது .கணினிகள் அட்டைப் பெட்டியில் வைத்து மூடி  ஒட்டிக்கொண்டிருந்தார் டோனியா .பாரதியை பார்த்ததும்.புன்முறுவல் ஒன்று வந்தது செயற்கையாக .என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா ?என்று பாரதி கவலையாக கேட்டதற்கு “We  are  running  out  of  fund  to run  this  library ,so  there  is  nothing  we  can  do “என்றார் .”can ‘t  we  do  fund  raising  event ?is  there  anything we  could do ?”என்று கூறும் போதே  பாரதியின் கண்கள் பளபளத்தது .டோனிங் தன்  கைகளுக்குள்  அவளது கைகளை வைத்து ஒரு இடம்,பொருள் அல்லது  மனிதர் உடனான பந்தம் தொடங்கும் போதே அந்த உறவின் முடியும் நேரமும் குறிக்கப்பட்டுவிடுகிறது .நான் இந்த நூலகத்தில் இருபது வருடங்களாக வேலைப் பார்க்கிறேன் .வாழ்க்கை என்பது இதையெல்லாம் கடந்து வருவதுதான்.”என்று கூறி தன மேசையில் உள்ள ஒரு எர்னஸ்ட்  ஹெம்மிங்  புத்தகத்தைப்   பரிசாக கொடுத்தார் .


 அடுத்த சில தினங்களில் அவ்வழியே சென்ற பொது டங் டங் என்று அந்த நூலகத்தை இடிக்கும் சத்தம் கேட்டது.கண்களை இறுக்கி மூடி கொண்டாள்  பாரதி.அவள் மனதில் நூலகத்தை இடித்தாலும் எரித்தாலும் அதிலிருந்து கிளம்பும் தீ பொறியானது பலநூறு எழுத்தாளர்களை  உருவாக்கி கொன்டே தான் இருக்கும்  என்ற அசரீரி  கேட்டது . வீடு திரும்பிய பாரதி அந்த பைகளில் இருந்த புத்தகத்தை ஒவ்வொன்றாக துடைத்து அலமாரியில் அடுக்கினாள் .அதிலிருந்த பாரதியின் புதுக்கவிதை நூல் அவளைப்  பார்த்து உன்னைச்  சரணடைந்தேன்  கண்ணம்மா  என்றது .

கோடையில் குளிர்விக்கும் நினைவுகள் …….

நான் அதிகம் சுற்றுலா சென்றதில்லை.நினைவு தெரிந்த நாள் முதல் நான் அடிக்கடி சென்ற ஒரே இடம் என் அம்மாச்சியின் ஊர் மட்டுமே .எத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஊர் அதுதான் பண்ணைக்காடு .கொடைக்கானலில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள ஊர் .

என் அம்மா எனக்கு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வந்ததும் என் அம்மாச்சிக்குக் கடிதம் எழுதி விடுவார் .தேர்வு எப்போது முடிகிறது எப்போது நாங்கள் கிளம்பி வருகிறோம் என்று செய்தி அனுப்பிவிடுவார் .நானும் என் அண்ணனும் பரீட்சை பதற்றத்தில் இருக்கும்போது என் அம்மா மட்டும் குதூகலமாக பலகாரங்கள் செய்துக் கொண்டு இருப்பார் .ஒரு சிறையில் இருந்து விடுதலை ஆகும் கைதியின் மகிழ்ச்சியை என் அம்மாவின் முகத்தில் பார்க்கலாம் .இனிப்பும்,வடகமும்.ஊறுகாய்களும் பையை நிறைத்துக்கொண்டு இருக்கும்.

தேர்வு முடிந்த அடுத்த நாள் காலை 6 மணிக்கு என் அப்பா எங்களை திருச்சிப் பேருந்தில் ஏற்றிவிடுவார் ,பின் அங்கிருந்து திண்டுக்கல் பேருந்தில் ஏறுவோம்.வெயிலில் காய்ந்து கருவாடாகி பொறுமையை இழந்த நிலையில் நானும் என் அண்ணனும் இருப்போம் அனால் என்றும் இல்லாமல் அன்று மட்டும் என் அம்மா சாந்த சொரூபிணியாய் காட்சி அளிப்பார்.ஒரு வழியாக திண்டுக்கலில் இருந்து பண்ணைக்காடு பேருந்து ஏறுவோம் .பண்ணைக்காட்டிற்கு மொத்தமே நான்கு பேருந்துகள் தான் .மாலைக்கு மேல் பேருந்து கிடையாது .

பண்ணைக்காடு பேருந்தில் இடம்பிடிக்கத் தனித்திறமை வேண்டும். பேருந்தில் காய்கறி மூட்டைகளும் ,கோழிகள் நிறைந்தக் கூடைகளும் மற்றும் வாழைத்தார்களும் அப்பப்பா ஒரே வேடிக்கைதான் அதில் அந்த மக்கள் பேசும் மொழி .அது வட்டாரத் தெலுங்கு மொழி . என்னதான் கூட்ட நெரிசலில் எரிச்சலாக இருந்தாலும் பேருந்து கிளம்பிய 30 நிமிடங்களில் அந்த குளிர்காற்றால் மலைகளின் ராணி நம்மை அவள் வசம் அடிமையாக்கி விடுவாள்.அந்த ஆரஞ்சுப்பழ வாசனையும் ,மரங்களில் காய்த்துத் தொங்கும் பலாப் பழங்களும் சாலையில் நடமாடும் குரங்கு கூட்டங்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் .

ஒரு வழியாக ஊர்போய் சேர்வோம்.என்னை என் மாமா சன்னலின் வழியாகவே தூக்கிக் கொள்வார் .சென்றவுடனே சுடச்ச்சுட சாப்பாடும் கங்குகுழம்பும் தயாராக இருக்கும்.பலாக்கொட்டையை கங்கு என்று அழைப்பார்கள் .எனக்கு அங்கு பிடித்ததே மச்சு வீடுதான்.ஏணியில் ஏறி மேல்தளத்திற்கு செல்ல வேண்டும்.மரபலகையால் ஆனா மேல் தளம்.அங்கு பெரும்பாலும் காபி கொட்டைகள் தட்டுமுட்டு சாமான்கள் வைத்திருப்பார்கள்.இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமானால் ரோஜா திரைப்படத்தில் அரவிந்தஸ்வாமியை அடைத்து வைத்திருக்கும் வீட்டை போன்றதொரு வீடு .

அந்த ஊரில் மொத்தம் மூன்று தெருக்கள் ஆலடிபட்டி ,ஊரல்பட்டி,பேரப்பட்டி அவ்வளவுதான் .மொத்தம் 200 குடும்பங்கள் இருந்தாலே அதிகம்தான் .தினமும் காலையில் 7 மணிக்கெல்லாம் எல்லோரும் தோட்டத்திற்கு கிளம்பி விடுவார்கள் .குதிரை வைத்து இருப்பவர்கள் குதிரையுடன் முன்தினம் சமைத்த சோற்று மூட்டையும் சிறிது கருப்பட்டியும் எடுத்துக்கொண்டு செல்வார்கள்.காப்பித்தோட்டம் கரடு முரடான மலைப் பாதைகளைத் தாண்டி செல்ல வேண்டும்.உச்சி காயும் வேளை வரும் வரை காபிப் பழங்களையும் ஆரஞ்சுப்பழங்களையும் பறிப்பார்கள் .

பழங்களைப் பறித்துச் சோர்ந்து போனவர்களின் பசியை அளவிட முடியாது.ஒரு குழியைத் தோண்டி அதில் ஒரு வாழை இலையை வைத்து அதில் ஆரஞ்சுப்பழங்களை உரித்துப் போடுவார்கள்.பின் அதில் சம்பா மிளகாய்களை கிள்ளி போட் டு உப்புடன் சேர்த்துப் பிசைந்து அந்த சாறை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிடுவார்கள் .அந்த சுவைக்கு எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையே உணராமல் சாப்பிடுவார்கள்.

அந்தி சாயும் முன்பு பறித்தக் காபிப் பழங்களையும் வெட்டிய விறகுகளையும் குதிரை மேல் ஏற்றிக்கொண்டு பின்பு கற்களைக் கொண்டு அடுப்பு மூட்டி அதில் வாழைத்தார் ஒன்றை வெட்டி வாழைக்காய்களை அடுப்பில் வாட்டி அதை உரித்து மீண்டும் தனலில் போட்டு சுட்டுக் கருப்பட்டி காப்பியுடன் சாப்பிடுவார்கள் .இருட்டுவதற்கு முன் வீடு திரும்புவார்கள் .போகும் வழியில் என் அம்மாவை பார்த்தால் தன்வீட்டுப்பெண்ணைப் பார்த்ததைப்போல் மகிழ்ந்து நலம் விசாரித்து தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் பழங்களை அப்படியே கொடுப்பார்கள் .அந்த எதார்த்தமான மனிதர்களைப் பார்ப்பது மிக அரிது .

மாலை ஆண்கள் சால்வயை போர்த்திக்கொண்டும் குல்லா அணிந்துக்கொண்டும் டீக்கடை முன்பு கூடுவார்கள்.அரசியல் மற்றும் வியாபாரம் பற்றிய கார சாரா விவாதம் பஜ்ஜி ,போண்டா,தவள வடையுடன் நடக்கும் .காட்டில் வாழும் மலை வாழ் மக்கள் சிலர் மாதத்திற்கு ஒரு முறை மளிகை சாமான்கள் வாங்க ஊருக்குள் வருவார்கள்.அவர்கள் மலைத் தென் மற்றும் பூண்டு,மூலிகை மருந்துப் பொருட்கள் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கி செல்வார்கள்

நாங்கள் ஊர் திரும்பும் நாட்கள் நெருங்க நெருங்க என் அம்மாவின் முகம் சோர்ந்து போகும்.என் அம்மாச்சி எங்கள் பைகளை நிரப்புவதில் கவனமாக இருப்பார் .தேன் ,மலைப் பூண்டு ,ஆரஞ்சுப்பழங்கள் ,டாலியா பூச்செடி கிழங்குகள் என அனைத்தையும் ஊருக்கு எடுத்து வருவோம் மனதை மட்டும் அங்கே விட்டுவிட்டு .

என் அம்மாவின் முகம் அவர் நட்டுவைத்து வளர்த்த டாலியாப் பூ மலரும் போதுதான் மலரும் அவரின் ஊர் நினைவுகளுடன் …….அவரோடு நான் பயணித்த இந்தப் பயணம் என் நினைவு பெட்டகத்தில் 20 வருடங்களாக பொக்கிஷமாக இருக்கிறது

என் அம்மா ….

என்னுடைய முதல் படைப்பு என் அம்மாவை பற்றியதாக இருக்க வேண்டும் என்ன விரும்புறேன்.இதை சிறுகதை என்று சொல்வதா இல்லை கட்டுரை என்று சொல்வதா என்று தெரியவில்லை .என் எண்ணங்கள் அவ்வளவுதான்.

வீட்டில் இருக்கும்போதுகூட பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு இருக்கும் தொலைக்காட்சி தொடரில் வரும் அம்மா இல்லை என் அம்மா .நான் பல புடவைகள் வாங்கி கொடுத்தாலும் மஞ்சள்,பச்சை மற்றும் சிவப்பு என மூன்று காட்டன் புடவைகளை மட்டும் மாற்றி மாற்றி கட்டும் சாதாரண அம்மா. என் அம்மாவின் புடவைகள் நிறம் வெளுத்தாலும் அது அழகாக துவைத்து காண்பவர்கள் கண்ணை உறுத்தும் சமிக்கி வேலைப்பாடுகள் இல்லாத மசாலா மற்றும் மஞ்சள் வாசனை உடைய ,இட்லி மாவு திட்டு திட்டாக ஒட்டி என் மனதை விட்டு அகலாத நினைவுகளை உடைய புடவை .

ஊரில் உள்ள அனைவரும் நான் உடல் எடை குறைக்க வேண்டும் என்று சொன்னாலும் என் அம்மாவின் கண்களுக்கு மட்டும் மெலிந்துதான் தெரிகிறேன் .எனக்கு சட்னியும் சாம்பாரையும் ஊற்றி ஊற்றி பரிமாறிவிட்டு வெறும் இட்லியை சாப்பிடும் என் அம்மா .உங்களுக்கு என்ன வேண்டும் என்று எத்தனை முறை கேட்டாலும் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லும் உலகத்தில் உள்ள ஒரே நபர் என் அம்மா தான்.

திருமணத்திற்கு முன் கண்டிப்பாக இருந்த என் அம்மா திருமணத்திற்கு பின் முற்றும் மாறிப்போனார் .நான் அமெரிக்கா வந்தபின் எங்கே அவருக்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்குமா என்று பயந்தேன் அனால் நான் எதிர்பார்க்காதது நடந்தது.இந்த பத்து வருடங்களில் நாங்கள் தோழிகளாகவே மாறினோம்.தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பேசுவோம்.தொலைபேசியில் முதல் வார்த்தை அவரிடம் இருந்து உற்சாகமாகவே இருக்க வேண்டும் என்று வேண்டுவேன் .அதன் பின் உடல்நல விசாரிப்பு நடக்கும்.

என் அம்மாவிற்கு எதை பற்றி பேச பிடிக்கும் என்றல் அவர் வார்க்கும் தோட்டம்தான் .நான் தினமும் கண்டிப்பாக அதை பற்றி விசாரிப்பேன்.இன்று ரோஜா பூத்ததா ,சீத்தாப்பழம் காய்த்ததா ,மாம்பழம் இனித்ததா ,கொய்யாவை அணில் விட்டு வைத்ததா என்று விசாரிப்பேன் .அதை பற்றி பேசும்போது புன்முறுவலுடன் என் அம்மா பேசுவதை என்னால் உணரமுடியும் .தினமும் ஒரு பூனை குடும்பத்திற்கு பால் மட்டும் சோறுபோட்டு அம்மா வளர்த்தார்.நான் அம்மாவிடம்பேசும் பொது அதுவும் எனக்கு மியாவ் என்று ஹலோ சொல்லும்.சில சமயங்களில்அந்த குட்டிகள் செத்த எலியை தூக்கிக் கொண்டு வந்து என் அம்மாவின் கோபத்திற்கு ஆளானது .அம்மா பூனையைப்போல் குட்டிகள் நல்ல பழக்கத்துடன் இல்லை என்று சொன்ன பொது அந்தப்பூனைக்கு உங்களைப் போன்று குட்டிகளை ஒழுங்காக வளர்த்த சொல்லிக் கொடுங்கள் என்றேன் .என் அம்மாவின் முகம் மலர்ந்ததை தொலைபேசியிலேயே முடிந்தது .

எனக்கும் என் அம்மாவிற்குமான உரையாடலில் புத்தகங்களை பற்றய உரையாடல் கண்டிப்பாக இருக்கும்.நான் வாசிக்கும் புத்தகங்களை பற்றி கண்டிப்பாக பகிர்வேன்.அதையெல்லாம் புரிந்துகொண்டு அவருடைய சிந்தனைகளையும்பகிர்வார்.அரசியல்,மனிதமாண்பு,மருத்துவம்,மனோதத்துவம் ,இக்கால கல்விமுறை ,வேதாந்தம் மற்றும் கலை என்று நாங்கள் பேச பேச நேரம் செல்வதே தெரியாது.

சமையல் குறிப்பிற்கு மட்டும் தினம் 20 நிமிடங்கள் வேண்டும் .ரசப்பொடி,இட்லிப்பொடி,கஷாயம்,பலகாரம் என்று போய்க்கொண்டே இருக்கும் .என் அம்மா இன்னும் பல பிள்ளைகளை பெற்றிருக்கலாம்.உலகிற்கு பல நல்ல மாந்தர்கள் கிடைத்திருப்பார்கள்.

நல்ல மனிதர்களை உருவாக்குவதில் என் அம்மா வல்லவர் ஏன் என்றால் வெறும் வாய்மொழியில் மட்டும் சொல்லி வளர்க்க முடியாது வாழ்ந்துக் காட்ட வேண்டும்.நான் அவருடன் தினமும் பேசும் அந்த 45 நிமிடங்கள் என் வாழ்வில் என்றென்றும் தொடர வேண்டும்.பரிசுப் பொருள் கொடுத்து சந்தோஷப்படுத்த முடியாது என் அம்மாவை கொடுத்தாலும் அதனோடு அவர் சேர்த்து பத்திரமாக வைத்த பத்திரத்தையும் எனக்கு கொடுக்கும் தெய்வம் அவர்……

வாசிப்பும் … சுவாசிப்பும்….

இலக்கியம் என்பது என்னை பொறுத்தவரை நம்மை தூய்மை படுத்தும் ஒரு புனித நீர் .ஒரு படிக்காத நாள் என்பது நாம் சவமாக இருந்த நாள் .நான் படித்து வியந்த புத்தகங்களை பற்றி பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பதிவை தொடங்கி உள்ளேன்.

நான் வியந்து படித்த எழுத்தாளர்கள் சிலரை பற்றி கூறியாக வேண்டும். சமீபத்தில் நான் படித்த புத்தகம் அறம், அதன் ஆசிரியர் ஜெயமோகன். நூறு நாற்காலிகள் என்ற கதை என்னை உலுக்கியது .ஒரு எழுத்தாளரால் இப்படி எழுத முடியுமா என்று எண்ணி எண்ணி வியந்த நூல். அவர் எழுதிய இன்னொரு சிறுகதை கூடு அது ஒரு பயணத்திற்கு நம்மை அழைத்து செல்லும் .அதில் அவருடைய மிக நுட்பமான எழுத்து திறமையை சொல்ல வார்த்தை இல்லை .

என்னுடைய இன்னொரு மானசீக எழுத்தாளர் திரு. எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் அவர் எழுதிய பல சிறுகதைகள் படித்திருக்கிறேன் அதில் எனக்கு பிடித்த கதைகளில் சில போயர்பாக் கண்டறிந்த மலைக்கோவில், சிற்றிதழ், அஸ்தபோவில் இருவர். அவர் எழுதிய நூல்களில் எனக்கு பிடித்த நூல்கள் இடக்கை ,சஞ்சாரம் .

நான்முதன்முதலில் படிக்க ஆரம்பித்த தமிழ் நூல் நந்திபுரத்து நாயகி அதன் பின் பொன்னியின் செல்வன், அலை ஓசை, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்று கல்கி அவர்களின் எழுத்திற்கு அடிமை ஆனேன் .

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் உடையார் மற்றும் கங்கை கொண்ட சோழன் படித்த தருணங்கள் வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள்.

எழுத்தாளர் இமயம் அவர்களின் சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தேன். அதில் பெத்தவன் என்ற கதை மிகச் சிறந்த கதை

அடுத்து அ .முத்துலிங்கம் அவர்களின் கதைகள் புளிக்க வைத்த அப்பம்,நிலம் எனும் நல்லாள் .இந்த இரண்டு கதையும் என்னால் மறக்க முடியாத கதைகள் .

அம்பை அவர்களின் கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமானவை .இன்னும் எழுத்தாளர்கள் நிறைய இருக்கின்றனர் சமீபத்தில் எழுத்தாளர் ஷோபா சக்தி மற்றும் அகர முதல்வன் அவர்களின் கதை படித்தேன். எழுத்தாளர் வேலமூர்த்தியின் குற்றப்பரம்பரை எனக்கு பிடித்திருந்தது.

இப்படி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக எதையேனும் படித்து புத்தகத்தோடு பயணம் செய்வதையே என் ஆசை அந்த பயண அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது அலாதியான இன்பம் .

மது – மே, 16, 2020.

ReplyForward