குக்கரின் விசில் சத்தத்தில் விழித்தான் வம்சி, பக்கத்தில் அஸ்வத் நன்றாக உறங்கி கொண்டிருந்தான் .வீட்டில் அஸ்வத்தின் சத்தமும் சமையலறையிலிருந்து வரும் பாத்திரத்தின் சத்தமும் தவிர எதையும் கேட்க முடியாது .எழுந்து வாக்கிங் சென்று வீடு திரும்பியதும் க்ரீன் டீயை வம்சியிடம் நீட்டினாள் சஞ்சனா.இப்பொழுதெல்லாம் இது பழகிவிட்டது.ஆரம்பத்தில் மிக கொடுமையாக இருந்தது .சமயலறையில் சஞ்சனா பொங்கலும் சாம்பாரும் செய்து கொண்டிருந்தாள்.
வம்சி மடமடவென குளித்து தயாரானான்.டைனிங் டேபிளில் சூடாக பரிமாறப்பட்டிருந்த பொங்கலை சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.எவ்வளவு தேடினாலும் போடாத முந்திரி எப்படி கிடைக்கும்.சாப்பிட்டுக் கொண்டே “சஞ்சனா இன்னிக்கு சாயந்தரம் டின்னெர்க்கு என் பிரென்ட் இன்வைட் பண்ணிருக்கான் ,நான் எவ்வளவோ அவொய்ட் பண்ணி பார்த்தேன் கேட்கல ரொம்ப கிளோஸ் பிரென்ட் ,நீயும் ஒரு வருஷமா costco ,வால்மார்ட் தவிர US வந்து எங்கயும் போகல அதான் வரேன்னு சொல்லிட்டேன் “
சஞ்சனா சரி என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.காரில் ஆபீஸ் செல்லும்போது அம்மாவிடம் அலைபேசியில் பேசுவது வழக்கம்.”வம்சி ஆபீசுக்கு கிளம்பிட்டியா ?அஸ்வத் குட்டி எப்படி இருக்கான் ?போட்டோ அனுப்புடா,நாளைக்கு விடீயோக்கால் பண்ணுடா பையன பாக்கணும் “
“பண்றேன் மா “
“சஞ்சனா இப்ப பரவாலையடா ?வெளிய எங்கயாவது கூப்ட்டு போடா ,கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் “
“கூப்பிட்டா வந்தாதானே நான் என்ன கூப்ட்டு போகமாட்டேனா சொல்றேன் “
“சரி சரி கோப படாதடா தம்பி பாவம் சின்னப்பொண்ணு 23வயசுதான்.படக்கூடாத கஷ்டத்தை பட்டிருச்சு “
“அம்மா உங்களுக்கு என்ன தவிர எல்லார் மேலயும் அக்கறை இருக்கு எப்படிம்மா ?ஒரு வேல ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம்ங்கிற மாதிரி நான் கிடைச்சுட்டேன் அதுனாலயா ?”
“டேய் ஏன்டா இப்டி பேசுற நீங்க ரெண்டுபேரும் என்னோட ரெண்டு கண்ணு டா .பத்து வருஷம் கோவில் கொலம் ஏறி செய்யாத வைத்தியமும் பூஜையும் இல்லடா.ஆண்டவனா பார்த்து ஒன்னுக்கு ரெண்டா கொடுத்தான் .ஏற்கனவே உடைஞ்சு போய் இருக்கேன் நீ வேற பேசியே கொல்லாத டா “
“நான் அப்புறம் பேசுறேன் மா “
காரை முன்னாள் பார்த்து ஒட்டியவனுக்கு மனம் பின்னால் சென்றது .
“அம்மா எனக்கு பாட்டி செஞ்ச மாதிரி கடலை சட்னிதான் வேணும் “
“அரவிந்துக்கு nuts ஒத்துக்காதுடா வம்சி ,நீ பாட்டி வீட்டுக்கு போறப்ப சாப்டுக்க .கடலை வாசம் பட்டாலே அவனுக்கு முடியாம போய்டும் “
“உனக்கு அவன தான் பிடிக்கும் எப்ப பாத்தாலும் அவனுக்கு புடிச்ச மாதிரியே செய் “
“உன்னோட அண்ணா டா அவன் ,எதிரியை பாக்கிற மாதிரியே ஏன்டா அவன பாக்குற “
“மூணு நிமிஷம் முன்னாடி பொறந்துட்டா அண்ணாவா ?ரெண்டு பேருக்கும் ஒரே வயசுதான் சும்மா அண்ணா அண்ணானு சொல்லாதிங்க “
அலுவலகம் வந்தது, நிம்மதியாக வேலை பார்த்து ஒரு வருடம் ஆகிறது . வேலையில் கவனம் செய்ய முடியல வீட்டுக்கு போகவும் பிடிக்கல .அஸ்வத்குட்டி மட்டும் இல்லைனா இந் நேரம் பைத்தியம் பிடிச்சு இருக்கும் .மதிய உணவு வேளையும் வந்தது சாம்பார் சாதமும் தயிர் சாதமும் இருந்தது .தயிர் சாதத்தை பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது “டேய் அரவிந்த் ஏன்டா என்ன கொல்ற! .நான் பாக்க மட்டும் தாண்டா உன்ன மாதிரி ஆனா நான் வம்சிடா “
மாலை வீடு திரும்பியதும் டீ கொடுத்தாள் சஞ்சனா .
“டின்னர் போறோம்னு சொன்னேனே ,ஆறு மணிக்கு ரெடியா இரு .கொஞ்சம் சீக்கிரமே வர சொன்னாங்க.நான் அஷ்வத்தோட வாக்கிங் போறேன் “
அஸ்வத்தை ஸ்ட்ரோல்லேர்ல தள்ளிக் கொண்டே நடந்தான் .வாழ்க்கைல எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும் தான் ஆனா இப்படிலாம் நடக்குமா ?ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்றா ஆனா அதுவே எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு .
“சஞ்சனா கொஞ்சம் பழங்கள் வாங்கிட்டு போனும் ,வீட்டுக்கு வேற ஏதாவது வாங்கணுமா ?”
சஞ்சனா ஐஸ்கிரீம் ஒன்றை எடுத்து அதை தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாள் (nuts)உலர் கொட்டைகள் சேர்த்து இருக்கிறதா என்று ,அதற்கு பிறகு ரான்ச் (ranch) போத்தலில் முட்டை உள்ளதா என்று பார்த்து கொண்டிருந்த போது வம்சி பொறுமையை இழந்தான் .நேரமாச்சு சீக்கிரம் வா என்றான் .
ஒரு வழியாக நண்பனின் வீட்டிற்கு வந்தார்கள் .நண்பனையும் அவனது மனைவி ப்ரியாவையும் அறிமுகம் செய்து வைத்தான் சஞ்சனாவிற்கு .
பிரியா “coffee or tea “
“பிரியா வம்சிக்கு காபி ,அவன் ஒரு காபி லவர் ” என்று ராகவ் சொன்னதும் சஞ்சனாவிற்கு என்னவோபோல் இருந்தது .
“சஞ்சனா வம்சியும் நானும் ஒன்னா வீடு எடுத்து தங்கி இருந்தோம் காலேஜ்ல .நல்ல சமைப்பான் இப்ப எப்படி சமையல்ல ஹெல்ப் பண்றானா ?” ராகவ் கேட்டதற்கு சஞ்சனா என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள் .
“ஏன்டா நீ வேற ? என்று வம்சி பேச்சை மாற்றினான் .
“சமைக்க விட்ட அவ்வளவுதான் பொங்கல்ல அரிசில செய்யாம முந்திரிலதான் செய்வான் “
சஞ்சாவிற்கு முற்றிலும் புதியவனாக தெரிந்தான் வம்சி .அஸ்வத் தூக்கத்திற்கு அழுகவும் இதுதான் சாக்கு என்று அவனை தூங்க வைக்கிறேன் என்று ஒரு அறைக்குள் சென்று விட்டாள் சஞ்சனா .
“மச்சி ஆல் ஓகே வா “என்று ராகவ் கேட்டான் .
அதற்கு ஒரு வெற்றுப் புன்னகை மட்டும் பதிலாக வந்தது வம்சியிடம்.சிறிது நேரம் கழித்து வம்சி சாப்பிட சஞ்சனாவை அழைத்தான் .பிரியா எல்லோருக்கும் பரிமாறினாள் .இட்லிக்கு சாம்பார் ஊற்றும் போது எனக்கு சாம்பார் வேண்டாம் அந்த கடலை சட்னி கொடுங்க என்றான்.தயிர் சாதம் வைக்கவா என்று பிரியா கேட்ட போது எனக்கு தயிர் பிடிக்காது என்றான் .இறுதியாக “மச்சான் உனக்கு பிடிச்ச பிஸ்தா ஐஸ் கிரீம் டா “என்று ராகவ் ஒரு கப்பை நீட்டினான் .
வீடு திரும்பும் போது சஞ்சனாவிற்கு தலை வலி தாங்க முடியவில்லை .இந்த ஒரு வருடம் வம்சியை வம்சியாக நினைக்கவில்லை .அரவிந்துடன் நடந்த திருமணமும் அவனின் மரணமும் கண் முன்னே வந்துபோனது .ஆறு மாதம் மட்டுமே வாழ்ந்தாலும் அவனுக்காக பார்த்து பார்த்து செய்த ஒவ்வொன்றும் இன்றும் மாற்றிக்கொள்ள முடியவில்லை .
நீண்ட நாட்களுக்கு பிறகு நட்ஸ் சேர்த்துக்கொண்டதாலா இல்லை காபி குடித்ததினாலா என்று தெரியவில்லை வம்சிக்கு தூங்க முடியாமல் சிரமப்பட்டான் .மனதிற்குள் இனி நானே வம்சியாக மாற முயன்றாலும் முடியாது போல என்று புலம்பினான் .
அன்று அவன் அம்மா பேசியது இன்றும் காதில் ஒலிக்கிறது “வம்சி எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியல ,கல்யாணம் ஆகி ஆறு மாசம்தான் வாழ்ந்தா ,சின்ன பொண்ணு வேற கல்யாணம் செய்யணும்னு பெத்தவங்க நினைக்கறது தப்பில்ல .பொண்ண பெத்தவங்க நியாயமாதான் சொல்ராங்க ஆனா எனக்கு அரவிந்த் அஸ்வத்தா கிடைச்சிருக்கான் நான் அவன வேற வீட்டுக்கு அனுப்ப முடியாது “
“அம்மா என்ன பத்தி நினைக்கவே மாட்டிங்களா ? உங்க முடிவுல குழந்தைய தவிர யாருமே சந்தோஷமா இருக்க முடியாதும்மா … பார்க்க மட்டும்தான் மா நாங்க ஐடென்டிகள் ட்வின்ஸ் ஆனா நான் வேற அவன் வேறம்மா நான் அவனா மாற முடியாது “
“நீ அரவிந்தோட கல்யாணத்துக்கு கூட வரல விசா பிரச்சனைன்னு ,சஞ்சனாவை நேர பார்த்ததோ பேசுனதோ இல்ல ,ஒரு அண்ணியா நீ ஒரே வீட்ல பேசியோ பழகியோ இருந்தேனா கண்டிப்பா இந்த முடிவ எடுக்க மாட்டேன்டா “
“நான் பொறந்தே இருக்க கூடாது “அழுகை வந்தது வம்சிக்கு
சஞ்சனாவிற்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.அஸ்வத்துடன் நேரத்தை போக்கி கொண்டிருந்தாள்,திருமணம் இருவருக்கும் வேண்டா வெறுப்பாக நடந்தது .இருவரும் பெற்றோருடன் பேசுவதை நிறுத்தினார்கள்.இப்ப கொஞ்ச நாளாக தான் வம்சி அவனோட அம்மாவிடம் பேசுகிறான் .சஞ்சனா யாரிடமும் பேசுவதில்லை .
மறுநாள் காலையில் சஞ்சனா வம்சியிடம் காபித் தூள் இல்ல .வாங்கிட்டு வந்திங்கனா காபி போட்டுத்தரேன் என்றாள் .
“வேண்டாம் எப்பொழுதும் போல டீ கொடு “என்றான் .
ஒரு ஞாயிறு அன்று வம்சி சஞ்சனாவை அங்கு உள்ள நூலகத்திற்கு அழைத்து சென்றான்.
அன்று காலை உணவில் பொங்கலில் முந்திரி குறைவில்லாமல் இருந்தது .”இப்ப நான் யாராகதான் வாழனும் கடவுளே ” என்று தலையை பிடித்தான் .
-Maduneeka Suresh